
'இதோ பாரு சாமி. உன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரர்கிட்ட கொஞ்சம் சொல்லி வை.. ஏதோ தான்தான் பொதுநல விரும்பியா நெனச்சுக்கிட்டிருக்காரு போல இருக்கு'' என்றார் வேலு.
பக்கத்தில் நடந்து கொண்டிருந்த கோபாலன், சாமி எனும் சாமிநாதனை பார்த்தார். அவர்கள் மூவரும் காலை நடைப்பயிற்சிக்கு வழக்கமாக இணைந்து செல்பவர்கள். அவர்கள் வீடு எல்லாமும் ஒரே தெருவில்தான் இருந்தன. கோபாலன் வளவனூர் அருகில் உள்ள சாலையாம்பாளையம் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். வேலு மின்துறையிலும் சாமி தனியார் துறையிலும் வேலை செய்தவர்கள்.
வளவனூரின் புறநகர்ப் பகுதியான பாவேந்தர் நகரில் குடியிருக்கும் அவர்கள் காலையில் அங்கிருந்து ரேவதி மில் வழியாய் வளவனூர் சத்திரம் வந்து இடப்பக்கம் திரும்பி நரையூர் வரை நடந்து சென்று திரும்புவார்கள். இப்பொழுது சாமி பேசினார்.
'என்னா விவரம் சொல்லு வேலு..''
'இரண்டு நாள் முன்னே ஊராட்சி அலுவலகம் போயி, நான் தோட்டத்துச் செடிக்கெல்லாம் குடிநீரைப் பாய்ச்சறேன்னு சொல்லி
விட்டு வந்திருக்காரு. அங்கேந்து என்னைக் கூப்பிட்டு விசாரிக்கறாங்க?''
அதற்குள் கோபால் சிரித்துகொண்டே, 'ஏன் நீங்க அதே மாதிரிதான் செய்யறீங்க?'' என்றார்.
'இருக்கட்டுங்க. அதைக் கேக்க இவரு யாரு? ''
என்றார் அவர் உரத்த குரலில்.
சத்திரத்திலிருந்து நூலகத்தைத் தாண்டி திரெளபதி அம்மன் கோயிலைக் கடந்து சென்று கொண்டிருந்தனர். அங்கிருந்த அரசமர இலைகள் சலசலத்தன. இந்தக் கோயில் திடலில்தான் முன்பு கட்சிக் கூட்டங்கள் நடக்கும். அவ்வளவு பெரிய திடல் இப்பொழுது சுருங்கிவிட்டது.
சாமிநாதன் சற்று வேகமாக வேலுவுக்குப் பதில் சொல்ல வேண்டும் என நினைத்தார். ஆனால் தன்னை அடக்கிக் கொண்டார்.
'சரிப்பா நான் சொல்றேன்'' என முடித்துக் கொண்டார்.
நரையூர் செல்லும் பாதையில் இருபுறமும் வயல்கள். அவற்றில் நெற்கதிர்கள் தலையாட்டிச் சிரித்துத் தங்களுக்குள் பேசின. சில வயல்களில் காலையிலேயே களை பறித்து
கொண்டிருந்தனர்.
விழுப்புரத்துக்கு வேலைக்குச் செல்பவர்கள் இரு சக்கர வாகனங்களில் விரைந்தனர். நரையூரிலிருந்து வளவனூருக்குப் பால் வண்டிகள் பறந்து கொண்டிருந்தன. வளவனூருக்குச் செல்லும் ஒரே ஒரு நகருந்து வர அவர்கள் மூவரும் சற்று ஒதுங்கினர்.
வீட்டுக்கு வந்து குளித்தவுடன் சிற்றுண்டியையும் முடித்தவுடன் சாமிநாதன் பக்கத்து வீட்டுப் பாலுவைப் பார்க்கச் சென்றார். பாலுவும் காலை வேலைகளை முடித்துவிட்டுச் செய்தித்தாளைப் படித்துகொண்டிருந்தார். சாமியைப் பார்த்ததும், 'வாங்க, வாங்க?'' என்று சொல்லி உட்கார நாற்காலியைக் காட்டினார்.
செய்தித்தாளை மூடிவைத்த பாலு, 'என்னா மாலையிலதான் வருவீங்க, இப்பவே வந்துட்டீங்க?'' என்றார்.
பதிலுக்குச் சாமிநாதன் சிரித்துக் கொண்டே, 'நீங்கதான் வரவழைச்சிட்டீங்க?'' என்றார். கேட்ட பாலுவின் முகத்தில் குழப்பம் நிலவியது. அவர் குழப்பத்துடனே, 'நானா...'' என இழுத்தார்.
'ஆமாம் பாலு, காலையில் நடந்து போகும்போது வேலு ஒரு விவரம் சொன்னார்?''
'என்னாவாம்?''
'அவரு வீட்டுத் தோட்டத்துக்குத் தண்ணீர் விடறதப் பத்தி ஏதோ சொன்னீங்களாம்..''
பாலுவுக்கு நினைவு வந்தது. கடந்த வாரத்தில் ஒருநாள் வேலுவின் வீட்டுக்கு அவர் போக நேர்ந்தது. நூலகப் புத்தகம் ஒன்று வாங்குவதற்காகச் சென்றார். அப்போது வேலு தோட்டத்தில் இருந்தார்.
'வாங்கய்யா, வாங்க?'' என்று வேலுவின் குரல் தோட்டத்திலிருந்து இவரை வரவேற்றது. 'அங்கே செல்வானேன்'' என்று நினைத்துக் கூடத்திலேயே பாலு உட்கார்ந்தார்.
வேலுவின் மனைவி, 'போங்க, அவரு கூப்பிடறாரு?'' என்று கூற இவரும் சென்றார். இதுவரை பாலு தோட்டத்துக்குச் சென்றதே இல்லை.
போய்ப் பார்த்தவருக்கு ஒரே வியப்பாக இருந்தது. படிக்கட்டுகள் விட்டு இறங்கியதும் இருந்த வெற்றிலைக் கொடி அவரின் கவனத்தைக் கவர்ந்தது. அதைச் சுற்றுச் சுவர் மீது ஏற்றி விட்டிருந்தார். அதற்கு அடுத்துச் சற்றுத்தள்ளி இரு கருவேப்பிலை மரங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தாலே இலைகளைப் பறிக்க வேண்டும் எனத் தோன்றியது.
பச்சைப் பசேலெனக் காட்சி அளித்தன.
அதிலிருந்து ஆறடி தூரத்தில் முருங்கை மரம் காய்த்துக் குலுங்கியது. இவை எல்லாம் தோட்டத்தின் மேற்குப் புறம் இருந்தன. கிழக்குப் புறத்தில் ஏழெட்டு மரங்கள் கொண்ட ஒரு குட்டி வாழைத்தோப்பே இருந்தது. அதற்குத் தெற்கே செம்பருத்திச் செடிகள் பூக்களுடன் இருந்தன. அதற்குச் சற்றுத்தள்ளி மல்லிகைக் கொடி கயிற்றின் வழியாய் மாடிக்கு ஏறிக் கொண்டிருந்தது.
நடுவில் எல்லாவற்றையும் மேற்பார்வை பார்ப்பது போல இரு தென்னை மரங்களும் இருந்தன. அவை உயரம் போகாத குட்டை ஜாதி போல இருந்தன. அவற்றில் ஒரு மரத்துக்குத்தான் குடிநீர்க்குழாயில் சொருகப்பட்ட நீண்ட ரப்பர்க் குழாயின் மூலம் நீர் வந்துகொண்டிருந்தது.
'என்னா எங்க வீட்டுத் தோட்டம் எப்படி இருக்கு..'' என்று கேட்டார் வேலு.
'தோட்டமா? பெரிய வயலுன்னு சொல்லுங்க?'' என்றார் சிரித்தபடியே பாலு.
'ஆமாங்க காலையில நடந்துபோயிட்டு வந்ததுக்கு அப்புறம் வீட்டுக்கு ரெண்டு குடம் குடிக்கத் தண்ணீர் பிடிப்பேன். அதுக்கப்பால நீங்க சொன்ன மாதிரி இந்த வயலுக்கு நீர் பாய்ச்ச்சறதுதான். ஒரு நாளைக்குத் தென்னைக்கு, இன்னொரு நாளைக்கு முருங்கைக்கு, அடுத்த நாள் கருவேப்பிலைக்கு..'' என்று பதில் சொன்னார் வேலு.
பாலுவின் முகமே வாடிவிட்டது. மேலே பார்த்தார். தென்னை மரத்தில் இரு அணில்கள் ஓடிப் பிடித்துகொண்டிருந்தன. முருங்கை மரத்தில் இரு மைனாக் குருவிகள் கீச்சிட்டன. பாலு பதிலே சொல்லாததால் மீண்டும் வேலு கேட்டார்.
'என்னா பதிலே சொல்லலை..''
'என்னா சொல்றது?''
'ஏங்க, என்னா குறை இதில?''
'குறை ஒண்ணும் இல்லை.. ஆனாலும் இது தப்பில்லையா?''
'எது தோட்டம் போடறதா?''
'தோட்டம் ஒவ்வொரு வீட்லயும் இருக்கணும்தான். நான் அதைச் சொல்லலை..''
'பிறகு என்னாங்க?''
'இதே மாதிரி குடிக்கற தண்ணீரை செடிகளுக்கும் மரங்களுக்கும் பாய்ச்சறதைப் பத்தி நெனக்கறேன்...''
'ஏங்க நம்ப பாய்ச்சாட்டி அது அப்படியே குழாயில வீணாத்தானே கிடக்கும்?''
'ஏன் வேற யார் வீட்லயாவது பிடிச்சிப்பாங்க. இல்லாட்டா நிலத்தடி நீர் அப்படியே கிடைக்கும்ல''
'சும்மாவா பாய்ச்சறேன். பஞ்சாயத்துக்கு தண்ணீர் வரி கட்டறோம்ல...''
'அது குடிநீருக்குங்க. தோட்டத்துக்குப் பாய்ச்சறதுக்கு இல்லை..''
'உங்க வீட்ல தோட்டம் இல்லியா?''
'இருக்கு. ஆனா நான் இதே மாதிரி குடிக்கற தண்ணீரைச் செடிகளுக்கு விட மாட்டேன். போர் போட்டு மேலத் தொட்டிக்கு ஏத்தறோமில்ல. அதைத்தான் விடுவேன்.
போங்க நீங்க பிழைக்கத் தெரியாதவங்கதான்!''
இதைக் கேட்ட பாலுவுக்கு கோபம் வந்தது.
'வேண்டாங்க.. இதை மாதிரி நாளைலேந்து செய்யாதீங்க. இன்னியோட நிறுத்திக்கீங்க. வேணாம்'' என்று சற்று உரத்த குரலிலேயே சொன்னார்.
'அட நீங்க போங்க வந்த வேலையைப் பாத்துக்கிட்டு. ஏதோ உத்தமர் போலப் பேசறீங்க?''
வந்த வேலையையே மறந்துவிட்டு பாலு தன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார்.
சில நாள்கள் யோசனைக்குப் பின்னர் ஊராட்சி அலுவலகத்தில் போய்ச் சொன்னார்.
'ஏன் சாமி நான் நேரில் பார்த்ததைத்தானே சொன்னேன். அதுக்கு என்னா இப்ப?'' என்று கேட்டார் பாலு.
'இல்லை.. நமக்கு ஏங்க வீண் வேலை? இதே மாதிரிதான் அன்னிக்கு அடுத்தத்தெரு கவுன்சிலரு வீட்ல குடிநீரை மோட்டாரு வச்சு மேலத் தொட்டிக்கு ஏத்தறாருன்னு போய் சொன்னீங்களாம். கவுன்சிலரு எங்கிட்டக் கோவமாக் கேட்டாரு?''
'எதாவது சொல்லட்டும். குடிக்கறத் தண்ணீர் விஷயத்தில் தப்பு நடந்தா நான்பாத்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டேன்'' என்றார் பாலு.
சில நாள்கள் கடந்தன. எல்லாரும் எல்லாவற்றையும் மறந்துவிட்டனர். பாலு சொல்லிச் சொல்லிப் பார்த்து எழுதிப் போட்டுப் போட்டுப் பார்த்துப் பேசாமல் இருந்துவிட்டார், மனம் மட்டும் உறுத்திக் கொண்டே இருந்தது.
ஒருநாள் சாமியிடம், 'சொந்த ஊரு போகப் போறேன் நீயும் வர்றீயா?''என்று கேட்டார் பாலு.
'எத்தனை நாளு'' என்று கேட்டார் சாமிநாதன்.
'அது கிராமம்பா. நாளைஞ்சு நாளுதான்'' என்று கூற 'ஒரு மாறுதல் இருக்கட்டுமே'' என்று கிளம்பினார் சாமியும்.
மானாமதுரை போயிட்டு அங்கேருந்து பரமக்குடி போய் குதிரை வண்டியில் ஆதிக்கபுரம் சென்று சேர்ந்தார்கள். அங்கே பாலுவின் அண்ணன் குடும்பம் இருந்தது. பாலுவின் அண்ணன் தான் பாலுவின் நிலத்தையும் சேர்த்துப் பார்த்துகொண்டிருந்தார்.
வண்டியில் போகும்போது சாமிநாதன், 'என்னா பாலு எல்லாம் பொட்டல் காடா இருக்கு?'' என்று கேட்டார்.
'ஆமாங்க, எல்லாம் மானாவாரி விளைச்சல்தான். விதைச்சிட்டு வந்திடுவோம். மழைபெஞ்சா நல்லது. இல்லன்னா போச்சுதான்'' என்று பதில் சொன்னார்.
வண்டியிலிருந்து இறங்கியதும், 'வாங்க சித்தப்பா'' என்று வரவேற்றான் குமார்.
'இவன்தான் என் அண்ணன் பிள்ளை, பக்கத்தில் பரமக்குடியில காலேஜில் படிக்கறான்'' என்றார்.
அதற்குள் பாலுவின் அண்ணனும் அண்ணியும் வந்து, 'வாங்க வாங்க'' என்று அழைத்தனர். உள்ளே சென்றுவிட்டுக் கையில் இரு குடங்களுடன் வந்த குமார், 'போயி உட்காருங்க: இதோ வந்துடறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றான்.
'எங்கே போகிறான்' என யோசித்த சாமிநாதனுக்கு பாலுவின் அண்ணா, 'தண்ணீர் எடுக்கப் போறான்'' என்றார்,
'ஏங்க இங்கத் தெருக் குழாயெல்லாம் கிடையாதா?'' என்றார் சாமி.
'இருக்குங்க.. அதுலத் தண்ணீர் வராது. நாலைஞ்சு தடவை போர் போட்டுப் போட்டு வீணாப் போனதுதான் மிச்சம்'' என்றார் பாலு.
காபி குடித்தவுடன் சாமிநாதனை, ''வாங்க, கொஞ்ச தூரம் நடந்திட்டு வரலாம்''என்று அழைத்துகொண்டு போனார் பாலு.
அவர்கள் வீடு இருக்கும் தெருவுக்குப் பின்னால் அவர்கள் நடந்து சென்றனர். சுற்றிலும் வயல்கள்தாம் கிடந்தன. எல்லாம் மூளியாகிக் கிடந்தன. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சற்றுத் தள்ளி ஒரு பெரிய கிணறு. அதைச் சுற்றி ஆண்களும் பெண்களும் கூட்டமாகக் கூடி இருந்தனர். அங்கேதான் சாமியும் பாலுவும் சென்றனர்.
எதிரே குமார் தோளில் ஒரு குடத்துடனும் கையில் ஒரு குடத்துடனும் வந்தான். பெண்களும் தலையில் ஒன்று இடுப்பில் ஒன்று என வந்து கொண்டிருந்தனர். கிணறு வட்டவடிவில் மிகப் பெரியதாக இருந்தது. அருகில் சென்று எட்டிப் பார்த்தார் சாமிநாதன்.
இதுவரை அவர் வாழ்நாளில் இதுபோன்ற காட்சியை பார்த்ததே இல்லை. பெரிய கிணறு. அதனுள் உள்ளே ஒரு சிறிய உறை கிணறு. அதில்தான் தண்ணீர் இருந்தது. சிலர் உள்ளே இருந்தனர். அவர்கள் கிணற்றின் மேலே இருந்து விடப்படும் குடங்களுக்குத் உறைகிணற்றிலிருந்து தாங்கள் கயிறு கட்டி எடுக்கும் வாளிகளிலிருந்து தண்ணீர்
ஊற்றினர்.
சாமிக்கு ஒரே அதிர்ச்சியடைந்து, 'என்னா பாலு இது?'' என்று கேட்டார்.
'ஆமாம் சாமி. இதான் இங்கக் குடிநீருக்கு இருக்கற ஒரே வசதி. இத மாதிரி இன்னும் ரெண்டு, மூணு கெணறுங்க இருக்கு; ஆனா எல்லாத்திலையும் இதே நிலைமைதான். மழை பெய்து கிணற்றுல தண்ணி ஊறினா விவசாயத்துக்குத் மோட்டரில் தண்ணீர் பாய்ச்சுவாங்க. அதுங்க எப்ப இறைக்குதோ அப்போ இரவோ, பகலோ போய்ப் பிடிச்சிக்கணும்.''
சாமிநாதன் மனம் மிகவும் கனத்தது. அழுதுவிடுவார் போல இருந்தது. ஏனோ அவர் மனக் கண்ணில் வேலுவும் அவர் வீட்டுத் தோட்டமும் தோன்றின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.