கரும்புச் சக்கை, விவசாயப் பொருள்களின் கழிவுகளைக் கொண்டும் புதிய பொருள்களை உற்பத்தி செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியம்தான்!
சென்னை மேற்கு முகப்பேரைச் சேர்ந்த "பி.ஏ. புட்வேர்' என்ற காலணி தயாரிப்பு நிறுவனமானது "வீகன் வீர்யா' என்ற பெயரிலான தனது புதிய கண்டுபிடிப்புகளை கோவை ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் அண்மையில் காட்சிப்படுத்தியது.
"கொங்கு மண்டலத்தின் வளர்ச்சியில் புதிய உற்பத்திப் பொருள்கள்' என்பது தொடர்பான இருநாள் கண்காட்சியில் பங்கேற்றோருக்குக் காட்சிப்படுத்தப்பட்ட பொருள்கள் தோலால் உருவாக்கப்பட்டவை அல்ல என்பது ஆச்சரியமாக இருந்தது. அங்கிருந்த பொருள்கள், கரும்பின் கழிவான கரும்புச் சக்கையை அடிப்படையாகக் கொண்டு, 95 சதவீதத்துக்கும் அதிகமான விவசாயக் கழிவுகள், தாவர அடிப்படையிலான மூலக்கூறுகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை என்பதும் மேலும் வியப்பூட்டுவதாகவே அமைந்தது.
இது தொடர்பாக பி.ஏ. புட்வேர் நிறுவனத்தின் துணைத் தலைவர் சி.அன்புமலரிடம் பேசியபோது:
'சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பரந்த முயற்சியில் எங்களது நிறுவனமும் இணைத்துக் கொண்டுள்ளது. இந்த புதுப்பாணியிலான படைப்புகள் பொதுமக்களுக்கும் புதுமையாக உள்ளது.
கரும்புச் சக்கை, விவசாயக் கழிவுகளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எங்களது தயாரிப்புகளில், பொருள்களை முழுமையடையச் செய்வதற்காக "பாலி யூரேத்தேன்' மிகக் குறைந்த அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
உள்ளங்கால்களைப் போலவே புவியிலும் மென்மையான நாகரீகப் புரட்சியைத் தொடங்குவதுதான் எங்களது குறிக்கோளாகும். இதற்கான இந்திய காப்புரிமைக்கும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பி.ஏ. புட்வேர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான "வீகன் வீர்யா' அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சி.எஸ்.ஐ.ஆர். அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடப்பட்டுள்ளது.
கரும்புச் சக்கையை விவசாய நிலங்களிலேயே எரிப்பதால் உருவாகும் புகை, பெரும் காற்று மாசை ஏற்படுத்தி வரும் சூழலில், மாற்றுப் பயன்பாட்டுக்காக விலைக்கு வாங்குவதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதோடு, காற்று மாசும் குறைகிறது.
விவசாயக் கழிவுகள், கரும்புச் சக்கைகளை மூலப் பொருளாகக் கொண்டு, பொருத்தமான பொருள்களுடன் சி.எஸ்.ஐ.ஆர். அமைப்பின் ஆலோசனையின்படி பல்வேறு சோதனைகளுக்குப் பிறகே இந்தத் தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் விலங்குகளின் புரதங்கள் இல்லை என்பதற்கான உறுதிச் சான்றிதழும் பீட்டா அமைப்பிடமிருந்து பெறப்பட்டுள்ளது.
இந்தச் சோதனைகள் அனைத்தும் ஐரோப்பிய ஆய்கங்களிலேயே நடத்தப்பட்டு நம்பகத்தன்மையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாவர அடிப்படையிலான எங்களது தயாரிப்புகளாக காலணிகள், பெண்களுக்கான கைப்பைகள், மடிக்கணினிகளுக்கான பைகள், பணப் பைகள், பெல்ட்கள் போன்றவை தற்போது இடம் பெற்றுள்ளன.
இந்தப் பொருள்களின் வணிக ரீதியான உற்பத்தி மற்றும் விற்பனை விரைவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வு அதிகளவில் உள்ளதால், இவற்றின் விலையிலோ அல்லது பயன்பாட்டுக்கான கால அளவிலோ மாற்றங்கள் இருந்தாலும் இந்த முயற்சி அனைவரையும் அதிகளவில் ஈர்த்துள்ளது'' என்றார்.
- ஏ.பேட்ரிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.