புள்ளிகள்

சேலத்துக்கு அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் காமராஜர் பேசிக் கொண்டிருந்தார்.
புள்ளிகள்
Published on
Updated on
2 min read

சேலத்துக்கு அருகே நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் காமராஜர் பேசிக் கொண்டிருந்தார். மைக் சரியாக வேலை செய்யாமல் தொந்தரவு செய்தது. இதை சமாளித்து அவர் பேசினார். அப்போது, காமராஜர், 'மைக் செட்டுக்காரரை மேடைக்கு வரச் சொல்லுங்களேன்' என்றார்.

மைக் செட் அமைத்த இளைஞரை கூட்ட ஏற்பாட்டாளர்கள் பிடித்து சென்று காமராஜர் முன்பு நிறுத்தினர். உடனே காமராஜர், 'இதோ பாருங்க.. இந்த பையன்கிட்ட மைக் செட் அமைக்க கூப்பிடாதீங்க..' என்றார்.

இதைக் கேட்ட மைக் செட் அமைத்த இளைஞர் கதறி அழுதார். கூட்டம் முடிந்தவுடன் ஊர் முக்கிய பிரமுகர்கள் காமராஜரிடம், 'ஐயா.. இந்த பையன் மைக் செட்

அமைக்க யாரும் கூப்பிட மாட்டாங்களேன்னு அழுவறான்' என்றனர்.

இதற்கு காமராஜர், 'ஜனங்க நம்ம சொல்றதைக் கேக்கறாங்களா?' என்றாரே பார்க்கலாம்.

* மகாத்மா காந்திக்கு முதன்முதலில் நினைவு ஸ்தூபியை தனது சொந்த செலவில் நிறுவியவர் என்.எஸ்.கிருஷ்ணன். 1948-ஆம் ஆண்டு மே மாதத்தில் நாகர்கோவிலில் தமிழறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அண்ணா, ம.பொ.சிவஞானம், டி.கே.சண்முகம், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை உள்ளிட்டோருடன் என்.எஸ்.கிருஷ்ணன் ஆலோசித்தார்.

பின்னர், தான் பிறந்த ஊரான நாகர்கோவிலில் சர் சி.பி. ராமசாமி அய்யர் நினைவுப் பூங்காவில் காந்தி நினைவு ஸ்தூபியை எழுப்ப முடிவு செய்தார். இதற்காக, காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிர்லா மாளிகையில் அவர் கீழே விழுந்த இடத்தில் இருந்து ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் மண் கொண்டு வரப்பட்டு, நினைவு ஸ்தூபி கட்டப்பட்டது. 60 அடி உயரத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இந்த ஸ்தூபியைச் சுற்றிலும் காந்தியின் போதனைகள், பொன்மொழிகள் பதிக்கப்பட்டுள்ளன.

என்.எஸ்.கிருஷ்ணன், அவருடைய மனைவி மதுரம் குறித்து கவிமணி இயற்றிய கவிதையும் ஸ்தூபியில் எழுதப்பட்டுள்ளது.

1949-ஆம் ஆண்டு செப். 13-இல் இந்த ஸ்தூபியை அப்போதைய சென்னை மாகாண முதல்வர் பி.எஸ்.குமாரசாமி ராஜா திறந்துவைத்தார்.

* மும்பையில் ஆசாத் மைதானத்தில் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தில், ஜவாஹர்லால் நேரு பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது மழை பெய்யவே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கானோர் மழையைப் பொருள்படுத்தாமல் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் ஓடிவந்து, குடையை விரித்து நேருவுக்கு பிடித்தார்.

'எல்லோரும் நனைய எனக்கு மட்டும் எதுக்குக் குடை பிடிக்கறீங்க?' என்று பலமுறை கேட்டார் நேரு. குடை பிடித்தவர் இதை பொருள்படுத்தவே இல்லை. இறுதியாக, 'இப்படி குடை பிடிக்கிறதைப் பார்த்தால் இவருதான் மைக் செட்டுக்கு சொந்தக்காராக இருப்பார் போல இருக்கு. அதான் நனையாமல் இருக்க இப்படி குடை பிடிக்கிறார்' என்றார் நேரு. கூட்டத்தில் கரவொலி. உண்மையும் அதுதான்.

-கோட்டாறு ஆ.கோலப்பன்

* ஒருநாள் 'ஜனசக்தி' அலுவலக வாயிலில் தோளில் துண்டுடன் விரைப்பாக வந்து நின்றார் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். 'யார் நீங்கள்' என்று கேட்டதற்கு 'நான் ஒரு கவிஞன்' என்று கம்பீரமாகச் சொன்னார் பட்டுக்கோட்டையார். 'உள்ளே வாருங்கள்' என்று அழைத்துச் சென்றார் சுதந்திரப் போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதி.

பட்டுக்கோட்டையார் அளித்த கவிதையை மாயாண்டி பாரதி வாசித்தார். அந்தக் கவிதையின் தலைப்பு- 'நண்டு செய்த தொண்டு'. 'கவிதை நீளமாக இருக்கிறதே' என்று சொன்ன மாயாண்டி பாரதி, ''நாங்கள் தொழிலாளிகள். விவசாயிகளின் கட்சி. மேடையில்பாடுவதற்குத் தோதாகப் பாடல்கள்தான் எங்களுக்குத் தெரியும். இது கவிதை மாதிரி இருக்கிறதே. இந்தக் கவிதையை பாட முடியுமா?' என்றார்.

இதற்கு பட்டுக்கோட்டையார் மேஜை மீது தாளம் போட்டுக் கொண்டே பாடினார். நன்றாக இருந்தது. பின்னர், அந்தக் கவிதை ஜனசக்தியில் வெளியானது.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

* கண்ணதாசன், 'வசந்த மாளிகை' படத்துக்கு பாட்டு எழுத வாகினி ஸ்டூடியோவுக்கு சென்றபோது, அங்கிருந்த கட்டிலில் படுத்திருந்தார். எதிரில் பட அதிபர் ராமாநாயுடு உள்ளிட்ட பலர் அமர்ந்திருந்தனர். அந்த வழியாகச் சென்ற ஸ்டூடியோ உரிமையாளர் நாகிரெட்டி இதைப் பார்த்து ராமா நாயுடுவை வரச் சொல்லி, 'தொழில் செய்யும்போது பயபக்தி வேண்டாமா? இதென்ன படுக்கும் பழக்கம்' என்று கூறியுள்ளார்.

'அது கண்ணதாசனின் பழக்கம். அவரிடம் நாம் சொல்ல முடியுமா?' என்றார் ராமா நாயுடு.

'நல்லது.. கண்ணதாசன் எழுதிய பாட்டுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டு' என்று ராமா நாயுடுவிடம் நாகி ரெட்டி கூறினார்.

இதையடுத்து, கண்ணதாசன் எழதிய பாடல்களை ராமாநாயுடு எடுத்துச் சென்று, நாகிரெட்டியிடம் காட்டினார். இதைப் பார்த்த நாகிரெட்டி தனது கண்களில் ஒத்திக் கொண்டு, 'நாயுடு.. நான் அறியாத்தனமாகக் கூறியதை கண்ணதாசனிடம் சொல்லி விடாதே!' என்றார்.

அத்துடன் மறுநாள் நாகிரெட்டி அந்த அறைக்குப் புதியதாக கட்டில், மெத்தை, தலையணைகளை வாங்கிப் போட்டார். அறைக்கு வந்த கண்ணதாசன் திகைத்து, ' என்ன இது?' என்று கேட்டார்.

இதற்கு ஸ்டூடியோ ஊழியர், 'ஐயாவே நேரில் வந்து பழையவற்றை அகற்றி புதியதாக வாங்கிப் போட்டார். அத்துடன் கண்ணதாசனுக்கு எந்தக் குறையும் வைக்காமல் பார்த்துகொள்ளுங்கள்' என்றார். இதைக் கேட்டவுடன் கண்ணதாசன் நெகிழ்ந்தார்.

-ஆர். மகாதேவன், திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com