ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் வலி நிவாரணம் பெற வழி என்ன?

நான் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எப்போதும் உடல் பூட்டுகளில் வலுவின்மை, அவ்விடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, கனம், அரிப்பு போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
2 min read

நான் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிகிறேன். எப்போதும் உடல் பூட்டுகளில் வலுவின்மை, அவ்விடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, கனம், அரிப்பு போன்றவை அடிக்கடி ஏற்படுகின்றன. மருந்துகளுக்கு கட்டுப்படுவதில்லை. இது எதனால்? எப்படி குணப்படுத்துவது?

-நாராயணி, பாலக்காடு.

பின்னாளில் வரக் கூடிய 'வாதரக்தம்', 'ஆட்யவாதம்', 'வாதவலாஸம்' எனும் பெயர்களில் அழைக்கக் கூடிய பூட்டுகள் சார்ந்த உபாதைக்கான முன் அறிவிப்புகள் அனைத்தையும் உங்கள் உபாதைக்கான எச்சரிக்கையாக இவைகளை எடுத்துகொள்ளலாம்.

வாத, பித்த, கப தோஷங்களைச் சீற்றமடையச் செய்வதும், ரத்தத்தை அதிகரித்து அதே சமயம் கெடுக்கக் கூடியதுமான உணவு, நடவடிக்கைகளால் ரத்தம் உற்பத்தியாகும் உடல் பகுதிகளில், தோஷங்களின் சீற்றத்தின் வாயிலாக, ரத்த ஓட்டம் குழாய்களில் தங்கி நின்று தடையை ஏற்படுத்தும். இதனால் வாயுவின் நகர்த்தி செயலாற்றும் திறனில் ஏற்படும் கதி முடக்கம், ரத்தத்தில் கலந்து முடங்கிப் போவதால் இதற்கு 'ரக்தஸ்தம்பம்' என்ற பெயரை இந்த உபாதைக்கு ஆயுர்வேதம் சூட்டியிருக்கிறது.

இந்த உபாதை ஆரம்ப நிலையில் தோல், மாமிஸ பகுதிகளை மட்டும் தன் இருப்பிடமாகக் கொண்டு செயலாற்றுகிறது. அதன்பிறகு உட்புற தாதுக்களில் மிக வேகமாகப் பரவி, பூட்டுகளின் உள்ளே ஆவேசத்துடன் நுழைந்து உபாதையைப் பெரிதாக்கிவிடுகிறது. அதனால் உணவு, செயல்களில் உடல் வாகுக்குத் தகுந்தவாறு கவனமாகயிருத்தல் வேண்டும் என ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது.

பூட்டுகளில் ஏற்படும் 'ரக்தஸ்தம்பம்' எனும் தங்களுடைய உபாதையின் சீற்றம் குறைய, பாலக்காட்டில் உள்ள மூலிகைக் கடைகளுக்குக் குறைவு ஏதுமில்லாதக் காரணத்தால், நீங்கள் கீழ்காணும் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்தினால் ரத்த ஓட்டத் தடையை பூட்டுகளில் சீராக்க முயற்சிக்கலாம்.

* சீந்தில் கொடி, தண்ணீர்விட்டான் கிழங்கு, அதிமதுரம், நெல்லிமரத் தோல் ஆகியவற்றைக் கொண்டு கஷாயம் தயாரிக்கவும். பதினைந்து கிராம் வீதம் மருந்துகளை எடுத்து, ஒரு லிட்டர் தண்ணீர் கலந்து கொதிக்கவிடவும். இருநூற்று ஐம்பது மில்லியாக வற்றியதும் வடிகட்டி, காலை- மாலை சம அளவாகப் பிரித்து ஐந்து மில்லி உருக்கிய பசு நெய்யுடன் வெறும் வயிற்றில் சுமார் மூன்று முதல் ஆறு மாதங்கலுக்குச் சாப்பிட்டு வரவும். ரத்த ஓட்டம் சீராகும்.

* மேற்குறிப்பிட்ட மருந்துகளுடன் சித்தாமுட்டி வேர், நீர்முள்ளி வேர், கரும்பு வேர் ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாக அறுபது கிராம் எடுத்து, மேல் கூறியது போலத் தண்ணீர் சேர்த்துக் கஷாயம் காய்ச்சிச் சாப்பிட வேண்டும். இதனால் வீக்கம், வலியுடன் கூடிய பூட்டு உபாதை விரைவில் குணமாகும்.

* உபாதையின் தீவிரம் அதிகமுள்ள நாள்களில் விடுப்பு எடுத்து இருநூறு மில்லி சூடான பசும்பாலில் விளக்கெண்ணெய் பதினைந்து மில்லி கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நீர்ப்பேதியாகி உபாதையின் தாக்கத்தைக் குறைக்கலாம். கடுக்காய் கஷாயம் வைத்து பசு நெய்யுடன் சாப்பிட்டாலும் இதுபோன்ற பலனை ஏற்படுத்தும்.

* விற்பனையிலுள்ள சித்தரத்தை, ஆவணக்கு வேர், சித்தாமுட்டி வேர் போன்று மேலும் பல மூலிகைகள் கலந்து விற்கப்படும் கஷாய மருந்தில் நெய், நல்லெண்ணெய் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் வாதம், வலி, ரக்தஸ்தம்பத்தினால் ஏற்படும் பூட்டுவலி, தொடை, முதுகு, இடுப்பு வலிகள், வீக்கம் போன்றவை நன்கு கட்டுப்படுகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்படி சாப்பிடவும்.

ஆசன வாய் வழியாகச் செலுத்தப்படும் மூலிகைப் பால், ரத்தக் குழாய்களைக் கீறி ரத்தத்தை வெளிப்படுத்தி ரத்த ஓட்டத்தைச் சீராக்கும் சிகிச்சை முறையை தாங்கள் செய்துகொள்வது நலம்.

தொடரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com