
மரம், செடிகளின் வகை, பண்பு, குணத்தை கைப்பேசியின் மூலம் மரத்தில் உள்ள க்யூ. ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்தால் முழுமையாக அறியும் வகையிலான முயற்சியை மேற்கொண்டு சாதித்துக் காட்டியுள்ளனர் பண்டித ஜவாஹர்லால் நேரு வேளாண் கல்லூரி, ஆராய்ச்சி மாணவ, மாணவிகள்.
புதுவை மாநிலத்துக்கு உள்பட்ட காரைக்கால் மாவட்டத்தில் செருமாவிலங்கை பகுதியில் இந்தக் கல்லூரியின் தோட்டக்கலைத் துறையின் அனுபவப் பாடப் பிரிவில் (மலர்கள் நிலம் எழிலுôட்டுதல்) பிரிவின் இறுதியாண்டு மாணவர்கள் ஒருங்கிணைந்து கல்லூரி வளாகத்தில் முதல்கட்டமாக 175 மரம், செடிகளின், தாவரவியல் விளக்கத்தை எளிய முறையில் செய்துள்ளது வியக்கவைத்துள்ளது.
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை தலைவர் கந்தசாமியிடம் பேசியபோது:
குறியீடுகளை ஸ்கேன் செய்தால் அந்த மரத்தின் பொது பெயர், தாவரவியல் பெயர், குடும்பப் பெயர், பண்பு, பயன்கள் என அனைத்தையும் அறியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதன்மூலம் இளங்கலை, விவசாயம், தோட்டக்கலை பயிலும் மாணவர்கள் வேளாண் காடு வளர்ப்பு, மலர்கள், நிலம் எழிலூட்டுதல், வணிகத் தோட்டக்கலை, நில எழிலூட்டுதல் ஆகிய பாடங்களை எளிய முறையில் கற்க முடியும்.
கல்லூரியில் நடைபெறும் பலவகையான தோட்டக்கலை, உழவியல் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பயிற்சிகளில் பங்கு பெறும் விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த விரைவுத் தகவல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'' என்கிறார் கந்தசாமி.
உதவிப் பேராசியர் மு.மணிகண்டனிடம் பேசியபோது:
'தமிழகத்தில் கோயம்புத்தூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. புதுவை மாநிலத்தை பொருத்தவரை பண்டித ஜவாஹர்லால் வேளாண் கல்லூரியில் செய்திருக்கும் ஏற்பாடு முதலாவதாகும். இந்தக் கல்லூரியில் மாணவர்கள் பயிற்சிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு மரங்கள், செடிகள் உள்ளன.
குறிப்பாக, மகிழம், புங்கை, பூவரசு, தூங்குமூஞ்சி, இருவாச்சி, நாவல், கொன்றை, சரக்கொன்றை, பென்சில், சிலந்தேனியா, மகாகனி, தேக்கு, அரப்பு, சிவகுண்டலம் உள்ளிட்ட பல வகைகள் வளர்ந்துள்ளன. மலர் செடிகளைப் பொருத்தவரை நந்தியாவட்டை, செம்பருத்தி, நித்யகல்யாணி, அலரி, காகிதப்பூ உள்ளிட்ட பல வகை வளர்க்கப்பட்டு வருகின்றன.
கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் மரங்கள் குறித்த தகவல் அறிய க்யூ.ஆர். குறியீடு வசதி செய்யப்பட்டதுபோல, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரம், செடிகளின் விவரங்கள் அறிய மாணவர்களை ஊக்கப்படுத்தினோம்.
26 இறுதியாண்டு மாணவ, மாணவியர் முயற்சித்து, மரங்கள், செடிகள் குறித்த முழுமையான தகவல்களை சேகரித்து பதிவேற்றம் செய்தனர். மரம், செடிகள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், தேர்வு நேரத்தில் மறந்து போக வாய்ப்புள்ளது. இந்த வசதியைக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் முழு விவரத்தையும் அறியலாம்.
விவசாயிகளும், பொதுமக்களும்கூட இதனால் பயனடைய முடியும்.
க்யூ.ஆர். குறியீடு கிரியேட் செய்ய முன்பு கூடுதல் செலவாகியது. இப்போது கூகுள் குரோம் மூலம் இதற்கான இலவச மென்பொருள் பதிவிறக்கம் செய்து, தகவல்களைப் பதிவேற்றம் செய்ய முடிகிறது.
மாணவர்களுக்கு உறுதுணையாக, கல்லூரி முதல்வர் ஏ.புஷ்பராஜ், துணைப் பேராசிரியர் யு.ராஜசேகர், கணினித் துறை பேராசிரியர் எஸ்.சரவணன் உள்ளிட்டோரும் உறுதுணையாக இருந்தது பாராட்டுக்குரியது'' என்கிறார் மணிகண்டன்.
என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.