அவளும் பெண் தானே!

சுகந்தி. .. நான் ராகினி பேசுறேன். வெள்ளிக்கிழமை சென்னைக்கு வரேன். தமிழ்நாட்டில் சின்ன டூர் போயிட்டு வரணும்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
4 min read

சுகந்தி. .. நான் ராகினி பேசுறேன். வெள்ளிக்கிழமை சென்னைக்கு வரேன். தமிழ்நாட்டில் சின்ன டூர் போயிட்டு வரணும். ஏதாவது நல்ல ஹோட்டல்ல ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு பண்ணிடும்மா ?''

'ஹலோ .. அத்தை .. அதென்ன எங்க வீடு இருக்கும்போது நீங்க வெளியில் தங்கப் போறேன்கிறது என்ன நியாயம் ? நாக்பூர்ல உங்க வீட்டு அளவுக்கு வசதி இல்லைன்னாலும் இங்கே நம்ம வீட்டிலேயே தங்கிக்கலாம். வேணும்கிற வசதியெல்லாம் இருக்கு. வேறேதும் தேவைன்னாலும் செய்துக்கலாம். தங்கலாம் என்ன.. தங்குறீங்க ? அவ்வளவுதான்'' இதுதான் சுகந்தி .

சுகந்தியின் கணவர் வெங்கடேசன் தயங்கித் தயங்கிக் கேட்டார் .

' ஏன் சுகந்தி.. நம்மளால முடியுமா ? நாமே இந்த எழுபதிலும் அறுபத்தைந்திலும் உன்னைப் பிடி. என்னைப் பிடின்னு காலம் தள்ளுறோம். வீட்டு வேலைக்கு மரகதம். பகல் சமையலுக்கு பானுமதி மாமி. சாயங்கால சப்பாத்திக்கு மாயான்னு வந்து செஞ்சு கொடுத்துட்டுப் போறாங்க ? ராகினி அத்தை நம்மை விட வயசானவங்க . அவங்களுக்குச் சாப்பாடு , பத்தியம் , பக்குவம் எல்லாம் எப்படியோ ?''

' அதெல்லாம் பிரச்னை இல்லைங்க ? அவங்களே ஹோட்டல்லதான் ரூம் போடச் சொன்னாங்க ? நான்தான் வலுக்கட்டாயமா இழுத்தேன். கவலைப்படாதீங்க? நான் சமாளிச்சுக்குவேன் . சரியா ?''

' ம் ... சரி ...''

'நம்ம இன்னொரு பெட்ரூமை கிளீன் செய்து கொடுத்துடுங்க நீங்க ?''

பணிப்பெண் மரகதத்திடம் படுக்கை விரிப்பு, தலையணை, போர்வைகளை வாஷிங் மிஷினில் போடச் சொன்னார் சுகந்தி. மரகதம் ஏஜென்சி மூலமாகத்தான் வந்தவள் . நகருக்குள் இருந்த அரசுக் குடியிருப்பைக் காலி செய்து கண்ணகி நகருக்கு அனுப்பப்பட்ட பிறகு மரகதம், தன் பெற்றோருடன் காலையிலேயே இங்கு வந்து விடுவாள். இந்த வீடு தவிர இன்னும் ஒரு வீட்டில் வேலை செய்கிறாள். வேலைகளை முடித்த பிறகு மாலைக் கல்லூரிக்குச் சென்று படிக்கிறாள். ஆட்டோ ஓட்டும் அப்பா , வீட்டு வேலை செய்யும் அம்மா இவர்களின் தலைச் சுமையைக் குறைக்க வேண்டும் என்கிற அக்கறை கொண்ட மரகதத்தை சுகந்திக்குப் பிடித்துப் போனது .

வெள்ளிக்கிழமை. இரண்டு கூடை ஆரஞ்சு, சாந்ரா பர்பி, ஆரஞ்சு பர்பி, சோன்பப்படி என்று நாவினிக்கும் இனிப்புகளோடு வந்து சேர்ந்தார் ராகினி அத்தை. வழக்கமாக, அமைதியில் ஆழ்ந்திருக்கும் வீடு, இப்போது சாயங்கால ஹோட்டல் போலக் கலகலப்பானது . ராகினியிடம் அவரது உணவு மெனு பற்றி விசாரித்தாள் சுகந்தி.

'நீ எது போடுறியோ.. அதை சாப்பிட்டுக்குவேன்ம்மா. எதுவும் எனக்காகத் தனியா விசேஷமாகச் செய்ய வேண்டாம் .''

வாசல் அழைப்பு மணி ஒலித்தது . வெங்கடேசன் கதவு திறக்க, பானுமதி உள்ளே வருகிறார்.

ராகினி, ' யார் இது ?'' என்று சுகந்தியிடம் கண்களாலேயே கேட்கிறார் .

'பானு ! லஞ்ச் சமைச்சுக் கொடுக்க வந்திருக்காங்க? சரி , நான் போய் கறிகாய் , அரிசி , பருப்பெல்லாம் எடுத்துக் குடுத்துட்டு வந்துடுறேன்.''

' சரிம்மா . நான் எதுவும் ஹெல்ப்புக்கு வரணுமா ?''

'அதெல்லாம் வேண்டாம் அத்தை . நீங்க பயண அலுப்பு தீர ரெஸ்ட் எடுங்க? நான் தினமும் காலையில் நாலரை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருச்சு காய்கறி நறுக்கி வச்சிடுவேன்.''

'ஓ .. அதெல்லாம் நீயே செஞ்சுடுவியா ! அப்புறம் இவ ?''

அவசரமாகத் திசை திருப்பினார் வெங்கடேசன்.

'ஆமா , நாக்பூரில் டிராபிக் எல்லாம் எப்படி இருக்கும் ?''

'முன்னே அவ்வளவு இல்லை. ஆனா, இப்போ எல்லா இடத்துலயும் கூட்டம். பார்தி மார்க்கெட் , பாட்காஸ் சவுக் , மஹால் மார்க்கெட் இங்கெல்லாம் கூட்டம் இருக்கும். நான் எப்போதாவதுதான் அங்கெல்லாம் போவேன். இப்ப பெரும்பாலும் ஆன்லைனில்தான் .''

' சரி. தமிழ்நாடு டூர் பத்தி ஏதாவது பிளான் வச்சிருக்கீங்களா ?''

'நெல்லையப்பர், மீனாட்சியம்மை சமயபுரத்தம்மன் தரிசனம் செய்யனும் அப்புறம் திருச்சி மலைக்கோட்டை , தஞ்சாவூர் பெரிய கோயில் , கங்கை கொண்ட சோழபுரமுன்னு ஒரு ட்ரிப்... அவ்வளவுதான்.''

அடுப்படியிலிருந்து வந்த சுகந்தியிடம் ராகினி கேட்டார் .

' இவங்க எல்லாம் நல்லா சமைப்பாங்களா ? சுத்தமா இருப்பாங்களா ?''

'நல்லாவே சமைப்பாங்க? நீங்கதான் டேஸ்ட் பண்ணப் போறீங்களே. சுத்தபத்தமாத்தான் வர்றாங்க? கொரோனாவுக்கு அப்புறம் எல்லாருமே ஜாக்கிரதையாகத்தான் இருக்கோம்.''

'ஆமா , வயசாக வயசாகத் தள்ளாமல் தான் ஆகிறது. எல்லாத்தையும் நம்மளே செய்ய முடியாதுதான். அதுவுமில்லாம வெளியே வாங்கிச் சாப்பிடுவதற்கு, இது நல்லதுதானே.''

ராகினி தன் பெட்டியில் இருந்து அட்டைப் பெட்டியை எடுத்து ,'வெங்கட் , உங்களுக்குப் பழைய ஹிந்திப் பாட்டுப் பிடிக்கும்னு ஒரு தடவை சுகந்தி சொல்லி இருக்கா . அதான் நீங்க கேட்டு மகிழ இதோ கேரவன் !'' என்று வெங்கடேசனிடம் தருகிறார் .

'அட , எனக்கு எதுக்கு இதெல்லாம் ?''

'இல்லப்பா , நமக்கெல்லாம் வயசான காலத்துல இதெல்லாம் தானே துணை ? நீங்கல்லாம் நாக்பூர் வரணும் . சுகந்தி கூண்டுக்கிளி மாதிரிதான் இருக்கா ?''

' சரி , தேங்ஸ் அத்தை !''

டீ கோப்பைகளுடன் வருகிறார் சுகந்தி.

' இந்தாங்க டீ !''

பெட்டியில் இருந்து பச்சை வெல்வெட் டப்பாவை எடுத்து சுகந்தியிடம் தருகிறார் ராகினி.

'ஐயோ என்னத்துக்கு இதெல்லாம் ? வேணாம் அத்தை .''

'இன்னும் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரியாது அதான்'' என்று கூறி சிரிக்கிறார் ராகினி .

மறுத்தும் கேட்காமல், தங்கச் சங்கிலியை சுகந்தியின் கழுத்தில் தானே அணிவிக்கிறார் ராகினி .

'டிசைன் பிடிச்சிருக்கா ? உன் சங்குக் கழுத்துக்கு மெல்லிசா , அழகா இருக்கு ! உன் கண்ணாடியில் போய்ப் பாரு!'' என்று வெங்கடேசனைச் சுட்டிக் காட்டினார் .

'போங்க அத்தை ! எப்போதுமே குறும்பு தான் உங்களுக்கு!'' என்று வெட்கத்துடன் கூறியபடி உள்ளே சென்றார் சுகந்தி .

மதியம் அவல் பாயசத்துடன் விருந்து. பின்னர் ஓய்வில் நகர்ந்தது அன்றைய பொழுது.

அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கு மாயா வந்தாள்.

இதே தெருவில் இடப் பக்க அடுக்ககத்தில் மாயாவின் அப்பா , அம்மா வேலை செய்கிறார்கள். குடும்பத்துடன் அங்கேயே அவுட்

ஹவுஸ்ஸில் ஜாகை. ஆறு வருடங்களுக்கு முன்பு கல்கத்தாவின் மாயாபூரில் இருந்து பிழைப்புக்காக வந்த குடும்பம். மாயாவுக்கு இருபது வயது இருக்கும் . மயக்கும் அழகுதான் !

மூன்று மாதங்களாக மாலையில் சுகந்தியின் வீட்டுக்கு வந்து சப்பாத்தி போட்டு, தொட்டுக்கொள்ள பருப்புக் கூட்டோ , குருமாவோ, சாலெட்டோ , புதினா சட்னியோ வைத்துக் கொடுத்துவிட்டுச் செல்கிறாள் .

இந்தச் சாயங்காலச் சப்பாத்தி வேலை மிகப் பெரிய உதவியானது சுகந்திக்கு !

மாயா வந்தவுடன் தன் அறையிலிருந்து அடுப்படிக்கு வந்துவிட்டார் ராகினி.

மாவைத் தேய்த்து , சப்பாத்தி போட ஆரம்பித்தாள் மாயா.

ராகினியிடமிருந்து ஆணைகள் பறந்தன :

' எண்ணெயை ஊத்தாதே ! குறைச்சு விடு !''

'நல்லா உப்பலா வரணும் . பொறுமை வேணும்.''

' நேத்து குருமாவில் காரம் அதிகமாயிடுச்சு. இன்னைக்குக் காரமில்லாமக் கூட்டு வைக்கணும் !''

இந்தப் புது அதிகாரம் மாயாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் வாயைத் திறக்கவில்லை .

வேலையை முடித்து வைத்துவிட்டு விடை பெற்றாள்.

மறுநாள் அந்திப் பொழுது . காயப் போட்டிருந்த துணிகளை மடித்து எடுத்து வர சுகந்தி மாடிக்குச் சென்றார்.

மாயா வந்தாள். ராகினியும் அடுப்படியில் ஆஜரானார்.

வழக்கம் போல பிசைந்து வைத்திருக்கும் மாவைத் தேய்த்து முதலில் எண்ணெய் இல்லாமல் நாலு ரொட்டிகள் போட்டாள் மாயா. பிறகு எண்ணெய் தடவி சப்பாத்தி போட ஆரம்பித்தாள் .

' ஏய் மாயா.. என்ன இது? ஆள் மட்டும் அழகா இருந்தாப் போதுமா? செய்யிற வேலை நல்லா அழகா இருக்க வேண்டாமா? சப்பாத்தி எப்படி கருகிடுச்சு பாரு ! நீ இப்போ இருக்கிற மாதிரியே எப்பவுமே அழகாயிருக்க மாட்டே! ஹம் ... வயசானா உன் மூஞ்சியும் இப்படித்தான் நசுங்கிக் கருகிப் போயிடும். ஆமா.. செய்ற வேலையிலே அக்கறை இருக்கணும். சும்மா மினுக்கிக்கிட்டு வந்தா மட்டும் போதாது !'' ராகினியின் வார்த்தைகள் நெருப்பு மழையெனப் பொழிந்தது.

மாயாவின் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர்த் துளிகள் அவளது கால் கட்டை விரலைச் சரணடைந்தன .

'அழகாப் பொறந்தது என் தப்பா? ஏழையாயிருந்தா அழகாயிருக்கக் கூடாதா? நாளையிலிருந்து நான் இங்கே வரமாட்டேன். வரக் கூடாது' என்று மனசுக்குள் பொங்கினாள் மாயா .

குருமா சமைத்த பாத்திரம் , சப்பாத்திப் பலகை, கல், கரண்டி எல்லாவற்றையும் தேய்த்துக் கழுவி வைத்து விட்டுக் கிளம்பினாள். சுகந்தி இன்னும் கீழே வரவில்லை. இங்கே நடந்த கந்தக யுத்தத்துக்கு மெளன சாட்சி வெங்கடேசன் மட்டுமே !

'வரேன் தீதி..'' என்று பொதுவாய்ச் சொல்லிவிட்டு வேகமாய் வெளியேறினாள் மாயா .

மறுநாள் காலையில் வெங்கடேசன் ராகினியை தேஜாஸ் ரயிலில் திருச்சிக்கு அனுப்பி வைத்தார். மாலை ஐந்து மணிக்கு வந்து விடும் மாயா ஐந்தரை மணியாகியும் வரவில்லை. ஆறும் ஆகிவிட்டது. 'ஏன் வரவில்லை' என்று தெரியாமல் கவலையுடன் கணவரிடம் கேட்கிறார் சுகந்தி.

'இரண்டு நாளா ரோகிணி அத்தை மாயாவை வறுத்து எடுத்துட்டாங்க? நேற்று ரொம்ப மோசமாப் பேசி அவளைக் காயப்படுத்திட்டாங்க . அதுனாலதான் அவளுக்குக் கோபமோ என்னமோ...'' என்று ஆரம்பித்து முழு விவரங்களையும் ஒப்பித்தார்.

'ஐயோ, ஏங்க நீங்க இதை முன்னமேயே என்கிட்டே சொல்லலை ?''

'அத்தைதான் உன் கூடவே இருந்தாங்களே..''

'இப்ப பாருங்க ? பத்த வச்சிட்டு அவங்க பாட்டுக்கு ட்ரியோன்னு போய்ட்டாங்க? நான் போய் மாயாவைக் கூட்டிக்கிட்டு வர்றேன்.''

' நீ எதுக்கு அவ வீட்டுக்குப் போகணும் ? இன்னைக்குக் கடையில் வாங்கிக்கலாமே ?''

'என்னங்க நீங்க? சப்பாத்தியா இங்கே பிரச்னை? பாவம் மாயா, அவ சின்னப் பொண்ணுதானே. வயித்துக்கில்லாமதானே ஊரு விட்டு ஊரு வந்து நம்ம கிட்ட வேலைக்கு வருதுங்க . நீங்க அஞ்சு நிமிஷம் இருங்க. நான் போய் மாயாகிட்டே பேசி, ஆறுதல் கூறி கூட்டி வர்றேன்.''

'அவளைத் தேடி நீயே அவ வீட்டுக்கு அவசியம் போகணுமா ? நான் வேணும்னா போய் சொல்லிக் கூட்டி வர்றேனே ?''

'இல்லை, நானே போய்ட்டு வர்றேன். பாவம் ! வேலைக்கு வந்துட்டதுனால மட்டும் அவளுக்கு சூடு, சொரணை, கோபம் எல்லாம் இல்லாமப் போயிடுமா? அவளும் மனுஷிதானே? நம்மைப் போலதானே அவளும் ?''

கதவைத் திறந்து மாயாவின் வீடு நோக்கி வேகமாக நடந்தாள் சுகந்தி.

அத்தை அளித்த காரவனில் மன்னாடேயின் பாடல் ஒலித்தது. கேரவனை வெற்றுப் பார்வை பார்க்கிறார் வெங்கடேசன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com