
உலகம் முழுவதும் அறியப்பட்ட கதாபாத்திரம் ஜேம்ஸ் பாண்ட். இந்தக் கதாபாத்திரத்தைப் படைத்தவர் இயன் பிளெமிங்.
இங்கிலாந்து எம்.பி.யின் மகன்தான் இயன்பிளெமிங். கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு இரண்டாம் உலகப் போரில் கடற்படை உளவுத் துறையில் பணியாற்றினார். இவருடைய தலைமையில்'ஆபரேஷன் கோல்டன் ஐ' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. இவரின் மேற்பார்வையில் மேலும் இரு உளவுப் பிரிவு குழுவினர் இயங்கினர். இந்த விவரங்களை மையமாக வைத்துதான் பிற்காலத்தில் தன்னுடைய கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் பிளெமிங் வடிவமைத்தார்.
இவருடைய காதலியுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டவுடன் கவனத்தை மாற்றிக் கொள்வதற்கு அவர் எழுதியதுதான்'கேசினோராயல்' என்ற முதல் ஜேம்ஸ்பாண்ட் நாவல், முதல் நூல் உடனடியாக விற்றுத் தீர, அடுத்தடுத்து மூன்று முறை மறுபதிப்பு செய்யப்பட்டது.
முன்னதாக, தன் கதாநாயகனுக்கான பெயரை யோசித்தபோது புகழ்பெற்ற பறவையின ஆய்வாளரான ஜேம்ஸ்பாண்ட் நினைவுக்கு வர, அவரது பெயரையே சூட்டினார். இந்த நூலை தட்டச்சு செய்தவர் அவருடைய செயலாளராக இருந்த ஜான்ஹோவே என்ற சிவப்புக் கூந்தலுடைய பெண். இவரை மனதில் வைத்துதான் ஜேம்ஸ்பாண்டின் உளவுத் துறை செயலாளர் வடிவமைக்கப்பட்டார்.
இரண்டாவது உலகப் போரில் தன்னோடு பணியாற்றிய மேலதிகாரியை மனதில் வைத்து உளவுத் துறைத் தலைவரான'எம்' கதாபாத்திரத்தை அமைத்தார்.
11ஆம் வயதில் ஒரு விபத்தில் பெற்றோரை இழந்த ஜேம்ஸ், தனது அத்தையின் பராமரிப்பில் வளர்கிறார். ஜெர்மன், பிரெஞ்ச் மொழிகளில் புலமை பெற்ற அவர், நடத்தை காரணமாக வேறு பள்ளிக்கு மாற்றப்படுகிறார்.
குத்துச்சண்டை, ஜூடோவில் சிறந்து விளங்கிய ஜேம்ஸ் தன்னுடைய தந்தையின் நண்பர் உதவியுடன் கடற்படையில் சேர்கிறார். இதன்பிறகு அவருடைய திறமைகளை உலகமே அறிந்து வியக்கிறது. பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான ஹோகி கார்மைக்கேலின் உருவத்தை மனதில் கொண்டு தன்னுடைய குணநலன்களுடன் ஜேம்ஸை பிளெமிங் உருவாக்கினார்.
ஜேம்ஸின் சூதாடும் வழக்கம், புகைப்பது, ஹோட்டல்கள், மதுபானங்கள் தேர்வு போன்ற அனைத்து விஷயங்களும் பிளெமிங்கின் சொந்த விஷயங்களைப் பிரதிபலிப்பவைதான். இப்படிதான் ஜேம்ஸ்பாண்ட் கதை உருவானது.
'வாய்னிச்' என்ற கைப்பிரதி நூல் அச்சடிக்கப்படாத, இன்னும் யாராலும் விளக்கம் சொல்ல முடியாத வடிவங்களாலும், படங்களாலும் எழுதப்பட்டுள்ளது. இது எப்போது எழுதப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கதிரியக்க கார்பன் தேதியாக்க மூலமாக, இது எழுதப்பட்ட காலம் 15ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று அறியப்படுகிறது. இது இத்தாலி மறுமலர்ச்சி காலத்தில், வடக்கு இத்தாலியில் எழுதப்பட்டுள்ளது.
பதிப்பாளர் ஒருவரிடம் 1912ஆம் ஆண்டு வில்பிரடு வாய்னிச் என்பவர் கைப்பிரதி நூலை வாங்கினார். இதில், காணாமல் போன, பக்கங்களைத் தவிர, 240 பக்கங்கள் இந்தக் கைப்பிரதியில் மீதம் இருக்கின்றன. இதில் உள்ள எழுத்துகள் இடமிருந்து வலமாக எழுதப்பட்டுள்ளன.
2013ஆம் ஆண்டு மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சொற்பொருள் ஆய்வாளர்கள் இதனை காகிதங்களில் அச்சடித்து நூலாக்கி, இதில் கண்டுள்ள விஷயங்கள் சந்தேகக் குறியில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் என்று கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.