பாலிவுட் ஸ்டூடியோ!
ஜான்வி அதிரடி!
ஷரன் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபல ஹிந்தி நடிகையான ஜான்வி கபூர், அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில், 'வரலாற்றின் எந்த காலகட்டத்துக்குச் செல்ல விரும்புகிறீர்கள்?' எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'தேசத் தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் சாதி குறித்த அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
சாதி குறித்த கண்ணோட்டத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அது காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையேயான உரையாடலையும், அவர்களின் திட்டங்கள் எவ்வாறு உருவாகின, அது எப்படி மக்களைப் பாதித்தது ஆகிய அந்த உரையாடல், ஒரு அழுத்தமான சொற்பொழிவாக இருக்கும்.
சாதிப் பிரச்னைகளில் அம்பேத்கர் - காந்தியின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவை. சாதி அடிப்படையில் அம்பேத்கரின் பார்வை ஆரம்பத்திலிருந்தே மிகவும் தெளிவானதாக இருந்தது. அதே நேரம், காந்தியின் சாதி குறித்த பார்வை மாறிக்கொண்டே இருந்தது. சாதியின் அடிப்படையிலான அந்த வாழ்க்கையை வாழ்ந்தவருக்கும், மூன்றாவது நபரின் பார்வையிலிருந்து அதைப் பற்றி அறிவதற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என் பள்ளியில் சாதி பற்றிய விவாதங்கள் நடந்ததில்லை. என் வீட்டிலும் சாதி பேசப்பட்டதில்லை. ஆனால் எனக்கு எப்போதும் வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்' எனப் பதிலளித்திருக்கிறார்.
அரசியலில் முழு கவனம்
அரசியல் கருத்துகளைப் பேசி தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வந்த பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நேரடியாக அரசியலுக்குள் பிரவேசித்திருக்கிறார். தன் சொந்த மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஜூன் 14-ஆம் தேதி திரையரங்கில் வெளியாவதாகத் திட்டமிடப்பட்டிருந்த அவரின் 'எமர்ஜென்சி' படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தைத் தழுவி எடுக்கப்பட்ட 'எமர்ஜென்சி' படத்தை கங்கனாவே இயக்கி நடித்திருந்தார். ஜான்சி ராணியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'மணிகர்ணிகா' படத்தைத் தயாரித்த 'மணிகர்ணிகா பிலிம்ஸ்' இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இப்படம் வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் 'மணிகர்ணிகா பிலிம்ஸ்', 'கங்கனா ரானவத் நாட்டிற்கான மிகப்பெரிய பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துத் தேர்தல் களத்தில் வேலை செய்துகொண்டிருக்கிறார்.
நாட்டிற்கான பணியே முதன்மையானது என்பதால் அதை முடித்துவிட்டு தனது 'எமர்ஜென்சி' படத்தில் கவனம் செலுத்துவார். இதனால், ஜூன் 14-ஆம் தேதி வெளியாகவிருந்த 'எமர்ஜென்சி' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் குறித்த மறு அறிவிப்பு வெளியாகும்' என்று அதிகாரபூர்வமாக தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
மனம் திறந்த ஜோதிகா!
1997-ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானவர் ஜோதிகா. ஆனால், அதன்பிறகு அவர் பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை.
தமிழில் 'வாலி' படம் மூலம் அறிமுகமாகி, முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். இதையடுத்து மலையாளம், தெலுங்கு எனப் பல மொழிகளில் நடித்தாலும் பாலிவுட் பக்கம் அவர் செல்லவில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் மீண்டும் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அந்த வகையில் 'சைத்தான்' படத்தையடுத்து மற்றொரு பாலிவுட் திரைப்படமான 'ஸ்ரீகாந்த்'திலும் நடித்துள்ளார். அது தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு குறித்தும் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்காமலிருந்தது குறித்தும் மனம் திறந்து பேசியிருக்கும் ஜோதிகா, 'எனது ஆரம்பக் கால சினிமா வாழ்வில் தமிழ் சினிமாவில் கிடைத்த வரவேற்பு எனக்குப் பாலிவுட்டில் கிடைக்கவில்லை.
பாலிவுட்டில்தான் நான் முதன்முதலில் அறிமுகமானேன். பாலிவுட்டைப் பொருத்தவரை ஒரு படம் ஹிட்டானால்தான் மறுபடியும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற ஃபார்முலா இருக்கிறது. அதனால் அதன் பிறகு பாலிவுட்டிலிருந்து எனக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை. தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புகள் கிடைத்ததும் அங்கேயே நிறையப் படங்களில் நடித்தேன். தமிழ் ரசிகர்களிடம் எனக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
என் படங்கள் வெற்றி பெறவில்லையென்ற போதும் கூட, என் திறமையைப் பார்த்து நிறைய வாய்ப்புகள் எனக்கு வந்தன. இதுதான் பாலிவுட்டிற்கும், தமிழ் சினிமாவிற்கும் இருக்கும் வித்தியாசம். அதன்பிறகு பாலிவுட்டில் இருப்பவர்களும் நான் தமிழில் மட்டும்தான் நடிப்பேன் என்று நினைத்துவிட்டார்கள். அங்கிருந்து யாரும் என்னை அணுகவில்லை.
அதனால்தான் இத்தனை ஆண்டுகள் பாலிவுட் படங்களில் நடிக்க முடியாமல் போனது. தற்போதுதான் பாலிவுட்டிலிருந்து என்னை அணுகினார்கள். கதைகள் கேட்டேன். பிடித்திருந்தது. தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வருகின்றன. அதனால், தற்போது பாலிவுட்டில் மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறேன்' என்று பேசியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.