பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 195

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல்! - 195
Published on
Updated on
4 min read

பெரும்பாலான நிருபர்கள், சிறையிலிருந்து விடுதலையாகி ஜெயலலிதா வெளிவருவது குறித்த செய்திகளைச் சேகரிக்க போயஸ் கார்டனிலும், மத்திய சிறைச்சாலை வாசலிலும் குழுமி இருந்தனர். அதனால், அறிவாலய செய்திகளைத் திரட்டும் தினசரிகளின் நிருபர்கள் மட்டுமே அங்கே இருந்தனர். அவர்களுடன் நானும் இணைந்து ஓர் ஓரமாக நின்றுக்கொண்டிருந்தேன்.

பொதுச் செயலாளர் க.அன்பழகன், நாஞ்சில் மனோகரன், ஆற்காடு வீராசாமி உள்ளிட்ட மூத்த திமுக தலைவர்கள் அனைவரும் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியுடன் ஆலோசனையில் இருந்தனர். முதல்வர் கருணாநிதி எப்போது வெளியே வருவார் என்று எதிர்பார்த்து நாங்கள் காத்திருந்தோம்.

முதலில் வெளியே வந்த ஆற்காடு வீராசாமி நேராக நாங்கள் குழுமியிருந்த இடத்திற்கு வந்தார். 'நிருபர் கூட்டம், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி எதுவும் கிடையாது' என்று தலைவர் சொல்லச் சொன்னார் என்று கூறிவிட்டு, எங்கள் பதிலுக்கு காத்திருக்காமல் திரும்பிச் சென்றுவிட்டார்.

அறிவாலயத்தின் வலப்புறக் கதவின் அருகில்தனது அறையிலிருந்து வெளியே வந்ததும் சட்டென ஏறிக்கொள்ள வசதியாக முதல்வரின் கார் நிறுத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் காவல் துறையினர் யாரும் நெருங்கிவிட முடியாதபடி நின்றுகொண்டிருந்தனர்.

ஏனைய நிருபர்கள் முதல்வர் பேசப்போவதில்லை என்று கேள்விப்பட்டதும் சோர்ந்து போனார்கள். எனக்கு மட்டும் ஒரு நம்பிக்கை இருந்தது. பத்திரிகையாளர்களைப் பார்த்துவிட்டால், அவர்களுடன் இரண்டு வார்த்தையாவது பேசாமல் முதல்வர் கருணாநிதியால் நகர முடியாது என்று எனக்குத் தெரியும்.

நான் எதிர்பார்த்தது போலவே நடந்தது. அறிவாலயத்திலிருந்து வெளியே வந்த முதல்வர் கருணாநிதி காரில் ஏறினார். கார் கிளம்பியது. நாங்கள் சற்று தள்ளி நின்றுகொண்டிருந்தோம். நகர்ந்த கார் சட்டென நின்றது. முதலில் அந்தக் காரை நோக்கி நகர்ந்தவன் நான்தான். என்னை முந்திக்கொண்டு மற்றவர்கள் விரைந்தனர்.

காரின் கண்ணாடியை இறக்கியபடி அனைவரும் அருகில் வருவதற்கு அவகாசம் கொடுத்தார் அவர். அவரிடமிருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டுமே வந்தது - 'சொல்வதற்கு ஒன்றுமில்லை!'

'முன்னாள் முதல்வர், அதிமுக பொதுச் செயலாளர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருந்தால் எப்படி?' - தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, பின்னால் நின்றுகொண்டிருந்த நான் கேள்வி எழுப்பினேன். யார் கேட்டது என்று சுற்றும் முற்றும் பார்த்தார். என்ன தோன்றியதோ இரண்டே வரியில் முதல்வர் கருணாநிதியிடமிருந்து பதில் வந்தது -

'முன்ஜாமீன் கோரி சிறைக்குப் போனார். இப்போது நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்!'

அவரது கார் நகர்ந்தது. என்னுடைய புல்லட்டை அறிவாலயத்திலேயே நிறுத்திவிட்டு, நானும் அவசர அவசரமாக அறிவாலயத்திற்குப் பின்னால் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

ஜெயலலிதாவையும், கண்ணப்பனையும் ஜாமீனில் விடுவதற்கு நீதிபதி வி. ரங்கசாமி, முதல்வர் கருணாநிதி தெரிவித்தது போல, பல நிபந்தனைகள் விதித்திருந்தார்.

'விசாரணை எப்போது என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட வேண்டும். அவர்கள் விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும்; நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சென்னையை விட்டு வெளியே செல்லக்கூடாது; சாட்சிகளைக் கலைக்கக் கூடாது, புலனாய்வைத் தடுக்கக்கூடாது; சட்டத்தின் செயல்பாடுகள் குறித்து நேரிடையாகவோ, மறைமுகமாகவோ விமர்சிக்கக்கூடாது' - உள்ளிட்ட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

போயஸ் கார்டனுக்குள் நுழைய முடியாதபடி தொண்டர்கள் குழுமியிருந்தனர். ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து போயஸ் கார்டனுக்கு செல்லும் பின்னி சாலையில், ஜெயலலிதாவின் கார் நுழைந்தால் வெடிப்பதற்கு தயாராக பல சரவெடிகளுடன் காத்துக்கொண்டிருந்தனர் தொண்டர்கள். அவர்களை அடையாளம் கண்டு, அந்த சரவெடிகளைப் பறிமுதல் செய்தது காவல் துறை. சில காவல் துறை அதிகாரிகளின் துணையோடு, அந்தக் கூட்டத்தில் நுழைந்து நகர்ந்து ஜெயலலிதாவின் வேதா இல்லம் வாயிலை நெருங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஜெயலலிதா இன்னும் வரவில்லை எனும்போது, அவர் வேறு ஏதாவது வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பாரோ என்கிற சந்தேகம் தொண்டர்களுக்கு எழுந்ததில் வியப்பில்லை. இப்போது போல செல்பேசி பயன்பாடு இல்லாத காலம். காவல் துறை அதிகாரிகள் தங்களது 'வாக்கிடாக்கி' மூலம் விசாரித்து அப்படி எதுவும் நடந்துவிடவில்லை என்று சொன்ன பிறகும், தொண்டர்கள் சமாதானம் அடைவதாக இல்லை. ஜெயலலிதாவை வாழ்த்தி எழுப்பப்பட்ட கோஷங்களைவிட, கருணாநிதிக்கு எதிரான கோஷங்கள்தான் அதிகமாக இருந்தன.

வேதா நிலையத்துக்குச் செல்லும் சாலையிலும், பின்னி சாலையிலும் யாரும் நடமாட முடியாத வகையில் காவல் துறையினர் ஒழுங்குபடுத்தி இருந்தனர். ம.நடராசனின் நண்பரான ஒரு காவல் துறை மேலதிகாரி, நான் ஓர் ஓரமாக நிற்பதைக் கவனித்துவிட்டார். அவரே வலிய என் அருகில் வந்து வேதா நிலையத்திற்குள் அழைத்துச் சென்றார்.

வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். அதிமுக அவைத் தலைவர் இரா.நெடுஞ்செழியன் நின்றுக்கொண்டிருந்தார். அங்கே நின்று கொண்டிருந்தவர்களில் அதிமுக தலைமைக் கழக அலுவலக

நிர்வாகி மகாலிங்கமும், ஜெயலலிதாவின் வீட்டில் பணியாற்றும் ராஜாம்மாளும் மட்டும்தான் நினைவுக்கு வருகிறார்கள். போர்டிகோவை தாண்டி வாசல் வராண்டாவில் ஓர் ஓரமாக நான் நின்று கொண்டேன்.

மாலை சுமார் 6 மணி இருக்கும். அதிர்வேட்டைத் தொடர்ந்து சரமாரியாக பட்டாசு வெடித்தது. 'புரட்சித் தலைவி அம்மா வாழ்க!' கோஷம் விண்ணைப் பிளந்தது. ஜெயலலிதாவின் கார் நெருங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டேன்.

வேதா நிலையத்தின் பிரதான வாயில் திறக்கப்பட்டு ஜெயலலிதாவின் கார் நுழைந்தது. தொண்டர்கள் சூழ்ந்து கொண்டனர். அவர்களை விலக்கி ஜெயலலிதாவை பத்திரமாக வராண்டாவிற்கு கொண்டுவருவதற்கு காவல் துறையினர் பட்ட பாடு சொல்லி மாளாது. அதிமுக நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் பாதுகாவலர்களும் அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைத்து அழைத்து வந்தனர்.

பூரணகும்ப ஆரத்தி எடுத்து ஜெயலலிதா வரவேற்கப்பட்டார்.

பூசணிக்காயில் கற்பூரம் வைத்து திருஷ்டி சுற்றி போடப்பட்டது. அதற்குப் பிறகு, இரா. நெடுஞ்செழியன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.

ஓர் ஓரமாக நின்றபடி நான் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். புன்னகையுடன், அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடி அவர்களது வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார் ஜெயலலிதா. அவரது முகத்தில் காணப்பட்ட மகிழ்ச்சியை நான் கவனிக்கத் தவறவில்லை. தேர்தல் தோல்வி, வழக்குகளைத் தொடர்ந்து தனக்கு இன்னும் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டதன் வெளிப்பாடாக நான் அதைப் பார்த்தேன்.

ஜெயலலிதா வீட்டிற்குள் போய்விட்டார். கூட்டம் கலையத் தொடங்கியது. நான் இரா.நெடுஞ்செழியனை நெருங்கினேன். அவரிடம் கருத்துக் கேட்க நான் முற்பட்டதும், அவர் சட்டென வீட்டிற்குள் சென்றார். உள்ளேபோய் தொலைபேசியில் ஜெயலலிதாவை தொடர்பு கொண்டாரா, இல்லை நேரில் சந்தித்தாரா என்று தெரியவில்லை. வெளியே வந்ததும் என்னை தலைமைக் கழகத்துக்கு வரும்படி சொல்லிவிட்டு காரில் கிளம்பிவிட்டார்.

அங்கே இருப்பதில் அர்த்தம் இல்லையென்பதால், மீண்டும் அறிவாலயம் சென்று எனது புல்லட்டை எடுத்துக்கொண்டு லாயிட்ஸ் சாலையில் (இப்போது அவ்வை சண்முகம் சாலை) உள்ள அதிமுக தலைமைக் கழகத்துக்குச் சென்றேன். அங்கே கூடியிருந்த நிருபர்களுக்கு நெடுஞ்செழியன் பேட்டி அளிக்க இருப்பதாகச் சொன்னார்கள். நான் காத்திருந்தேன்.

நிருபர்களைச் சந்திக்க வந்த நெடுஞ்செழியனின் பார்வை என்மீது விழுந்ததும், அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. எனது வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜெயலலிதாவின் உத்தரவின்படி அவர் நிருபர் கூட்டம் நடத்துகிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

'கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்களை, சாட்சிகளை கலைத்துவிடக்கூடாது என்பதற்காக காவலில் வைத்து விசாரணை நடத்துவார்கள். ஜெயலலிதா மீதான குற்றங்கள் புகார்களின் அடிப்படையிலானவை. விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன் என்று அவர் கூறிய பிறகும், அவரைச் சிறையில் அடைத்தது பழிவாங்கும் நடவடிக்கை' என்றார் நெடுஞ்செழியன்.

'அப்படியானால் என்ன செய்திருக்க வேண்டும்?' என்று கேட்டேன் நான்.

'முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவைக் கைது செய்து, உடனே ஜாமீனில் விடுவித்தது போல ஜெயலலிதாவையும் விடுவித்திருக்க வேண்டும். இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்காக கருணாநிதி மிகப் பெரிய விலை கொடுக்கப்போகிறார் என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'

'நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?'

'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதுதான் எனது பதில்...'

அதிமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் ஜி.சுவாமிநாதன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும், அடுத்த இரண்டு நாள்கள் ஜெயலலிதா ஓய்வு எடுக்கப் போவதாகவும் தலைமைக் கழகத்தில் தெரிவித்தார்கள். இனியும் அங்கிருப்பதில் பயனில்லை என்று கருதி, நான் தி.நகரிலுள்ள எனது அலுவலகத்திற்குத் திரும்பிவிட்டேன்.

தில்லியில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டிருந்தன. பத்திரிகை நண்பர்கள் மூலம் நிகழ்வுகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராக சீதாராம் கேசரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்கிற செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.

ராஜேஷ் பைலட் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, கேசரியின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டது என்றும், அதனால் அவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் ஒரு நண்பர் தெரிவித்தார். நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீதாராம் கேசரிக்கு முதல் வாழ்த்து தெரிவித்தவர் முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் என்று அந்த நண்பர் சொன்னபோது என்னால் அதை நம்பவே முடியவில்லை.

என்ன நடந்தது என்பதை அந்த நண்பர் விவரித்தார். ஐந்து உறுப்பினர்கள் குழுவின் சார்பில் எம்பிக்களை சந்தித்துப் பேசிய டாக்டர் மன்மோகன் சிங், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று பெரும்பாலானோர் விரும்புவதாகவும், கட்சித் தலைவரான சீதாராம் கேசரியே நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகவும் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததாகவும் சொன்னதன் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

சரத் பவார், பிரணாப் முகர்ஜி, கருணாகரன், விஜய பாஸ்கர ரெட்டி ஆகியோர் முன்மொழிய, வயலார் ரவி, ஜிதேந்திர பிரசாதா ஆகியோர் வழிமொழிய சீதாராம் கேசரி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜேஷ் பைலட்டிற்கு ஆதரவு தெரிவித்திருந்த சுரேஷ் கல்மாதி, ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட நரசிம்ம ராவ் ஆதரவாளர்களான 12 எம்பிக்கள் மன்மோகன் சிங் குழுவினரைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

ஸ்ரீகாந்த் ஜிச்கர், ஜனார்த்தன பூஜாரி, வி.என்.காட்கில் என்று பலரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன்; கிடைக்கவில்லை. சரி, ராஜேஷ் பைலட்டையே அழைத்துக் கேட்டுவிடுவோம் என்று அழைத்தேன். அவர் வீட்டில் இல்லை என்று தகவல் வந்தது.

தி.நகரிலுள்ள எனது அலுவலகத்திலிருந்து அண்ணா நகர் மேற்கு விரிவாக்கத்திலிருந்த எனது வீட்டுக்கு நான் திரும்பியபோது, நள்ளிரவு கடந்திருந்தது. ராஜேஷ் பைலட் ஏன் பின்வாங்கினார் என்று தெரியாமல் நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.

இரவு சுமார் 2 மணிக்கு தொலைபேசி ஒலித்தது. எதிர்முனையில், தில்லியிலிருந்து ராஜேஷ் பைலட்...

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com