திருக்குறளின் பெருமை...

திருக்குறளின் பெருமை...
Updated on
2 min read

உலக மொழிகளில் கிறிஸ்தவ மறைநூலான பைபிளுக்கு அடுத்து அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட நூல் திருக்குறள். திருக்குறள் தமிழில் அச்சேறுவதற்கு முன்னரே 1730-இல் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் இரு நூல்களை மொழிபெயர்த்தார். அந்தக் காலகட்டத்தில் ஜெர்மானிய மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படி திருக்குறளை மொழிபெயர்த்தவர்கள் யார், யார்?, எந்தெந்த மொழிகளில் அச்சாகியிருக்கிறது போன்ற தகவல்களை முதல் முறையாக ஆவணப்படுத்தியிருக்கின்றனர் 'உலக மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு தொகுப்புத் திட்டக் குழுவைச் சேர்ந்த 'வலைத்தமிழ்' நிறுவனர் ச.பார்த்தசாரதி, என்.வி.கே..அஷ்ரப், சி.ராஜேந்திரன், இளங்கோவன் தங்கவேல், செந்தில் செல்வன்துரைசாமி, குமார் செல்வன் ஆகிய ஆறு தமிழ் ஆர்வலர்கள்.

இதுகுறித்து ச.பார்த்தசாரதியிடம் பேசியபோது:

'மயிலாடுதுறையில் ஏ.வி.சி. கல்லூரியில் நான் படித்தேன். அப்போது, கல்லூரி மாணவர்கள் நடத்திய 'இளந்தூது' இதழில் பணியாற்றியபோதே தமிழின் மீது பற்று அதிகரித்தது. அமெரிக்கா சென்று 18 ஆண்டுகளுக்கு மேல் வசித்துவருகிறேன். வலைத்தமிழ் என்பது தகவல் களஞ்சியமாக உருவாக்கப்பட்ட தளம். அதில், சேர்க்க வேண்டிய ஒரு தகவலாக 2018-இல் ஒரு பதிவை பதிந்தேன். அதில் கிடைத்த தகவலின்படி, 'திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை' என்பது அதிர்ச்சியை அளித்தது.

இதற்காக 'உலக மொழிகளில் திருக்குறள் தொகுப்புத் திட்டம்' என்ற ஒரு திட்டத்தை அறிவித்து அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் வசிக்கும் இளங்கோ தங்கவேலு, டெக்சாஸில் வசிக்கும் செந்தில் துரைசாமி உள்ளிட்டோரைக் கொண்டு ஓர் குழுவை அமைத்தோம். 2001-ஆம் ஆண்டு முதல் திருக்குறள் தொடர்பான தகவல்களை திரட்டி வரும் முனைவர் என்.வி.கே.அஷ்ரப், 'வள்ளுவர் குரல்' குடும்பத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், சென்னையைச் சேர்ந்த திருக்குறள் ஆர்வலர் அஜய்குமார் செல்வன் ஆகியோரும் எங்களுடன் இணைந்தனர்.

மொழிபெயர்ப்பு விவரங்களைத் தொகுத்தல், உறுதி செய்தல், ஒரு அச்சு நூலையாவது திரட்டி சென்னைக்கு கொண்டுவருதல் என திட்டமிட்டு, பல சவால்களை எதிர்கொண்டு தகவல்களைத் திரட்டினோம்.

தொடர்ச்சியாக, சென்னையில் ஆங்கிலத்தில் 'Thirukural Translations in World Languages' எனும் 212 பக்கங்கள் கொண்ட நூல் தயாரானது. இதனை 2024-ஆம் ஆண்டு பிப். 11-இல் நீதிபதி மகாதேவன் வெளியிட்டார். பிறகு அமெரிக்காவின் சிகாகோ, சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் என்று தமிழர்கள் வசிக்கும் நாடுகளில் நூல் அறிமுக விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரபி, அஸ்ஸாமி, அவதி, படுகா, வங்காளம், போஜ்பூரி, போடோ, மியான்மர், சீனம், கிரியோல், கசாக், டேனிஷ், டோக்ரி, டச்,ஆங்கிலம், ஃபிஜியன், ஃபின்னிஷ், பிரஞ்ச், காரோ, ஜெர்மன், குஜராத்தி, ஹிந்தி, இந்தோனேஷியன், ஐரிஷ், இந்தாலி, ஜப்பான், கன்னடம், காஷ்மீரி, கெமர், கொடவா, கொங்கனி, கோரகா, கொரியன், இலத்தீன், மைதிலி, மலாய், மலையாளம், மணிப்பூரி, மராட்டி, நேபாளி, ஒடியா, பெர்ஷியன், போலிஷ், பஞ்சாபி, ரஷியா, சம்ஸ்கிருதம், சந்தாலி, சௌராஷ்ட்ரா, சிங்களம், ஸ்பானீஷ், சுவாஹிலி, ஸ்வீடிஷ், தெலுங்கு, தாய், டோக்பிஸின், உருது, வாகிரி போலி என்று 58 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. வெளிவந்துள்ள 58 மொழிபெயர்ப்புகளில் 48 நூல்கள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் 10 நூல்கள் தேடுதல் பட்டியலில் உள்ளன.

இந்தியாவின் அலுவல் மொழிகளில் சிந்தியைத் தவிர அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் அலுவல் மொழிகளான 10 மொழிகளில் போர்ச்சுகீசு மொழியைத் தவிர, மற்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஐ.நா. அவையில் அலுவல் மொழியாக உள்ள ஆறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் திருக்குறள் மொழிபெயர்ப்பு மலையாளத்தில் 1595-ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது. இரண்டாவது மொழிபெயர்ப்பு இலத்தீன் மொழியில் 1730- ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது.

முதல் ஐந்து அதிக மொழிபெயர்ப்புகளைக் கொண்ட மொழிகளாக ஆங்கிலம் -130, மலையாளம் -30 , ஹிந்தி-20, தெலுங்கு-19 , பிரெஞ்ச் -16 என விளங்குகிறது.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் பேசும் சந்தாலி மொழி முதல் முதல்ஆப்பிரிக்க மொழியில் வெளிவந்துள்ள சுவாஸி வரை திருக்குறள் மத நூல்களுக்கு இணையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளை அந்தந்த மொழியில் பரிசாகப் பயன்படுத்த உலகின் பிற நாடுகள், இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்களுக்கும் கடிதம் எழுதி, மொழிபெயர்ப்பை அதிக மக்களுக்கு பயன்பாட்டில் கொண்டு சேர்க்க உள்ளோம்.

இந்தியாவின் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். யுனெஸ்கோவின் 'ஏங்ழ்ண்ற்ஹஞ்ங் க்ஷர்ர்ந் ர்ச் ஙஹய்ந்ண்ய்க்' அங்கீகாரம் பெற்று திருவள்ளுவர் சிலை அமைத்து ,

ஒவ்வொரு ஆண்டும் உலக சமூகம் கொண்டாடும் நிலையை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்' என்கிறார் பார்த்தசாரதி.

- கிரிஜா மகேஷ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com