இயக்குநர் பாலுமகேந்திராவின் பெயரில், சென்னையில் ஒரு நூலகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார் அஜயன் பாலா.
எழுத்தாளர், நடிகர், இயக்குநர் என பன்முகத் தன்மையோடு இயங்கிவரும் அஜயன் பாலாவிடம் நூலகத்தின் உருவாக்கம், செயல்பாடுகள் குறித்து பேசியபோது:
'நான் உதவி இயக்குநராக இருந்தபோது, திரைத்துறை குறித்த நூல்களைத் தேடிச் சென்று படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தேன். ஆனால், அப்போது அத்தகைய நூல்கள் நிறைந்த நூலகங்களும் இல்லை. காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் அளவுக்கு எனக்கு வசதியும் இல்லை.
இந்த நேரத்தில் திரைத்துறை தொடர்புடைய நூலகத்தை அமைக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. திரைத்துறையில் காலூன்றியவுடன் 2018-ஆம் ஆண்டில், ஒரு நூல் வெளியீட்டுப் பிரசுரம் துவக்கினேன். அதற்காக, சாலிகிராமத்தில் ஒரு சிறிய அறையை அலுவலகமாக வாடகைக்கு எடுத்தேன். அந்த அறையின் ஒரு பகுதியிலேயே நான் சேகரித்து வைத்திருந்த நூல்களை ஒரு அலமாரியில் அடுக்கி வைத்து, ஆர்வம் உள்ளவர்கள் படித்துப் பயன் பெற வசதியை ஏற்படுத்தினேன். அதற்கு 'பாலுமகேந்திரா நூலகம்' என்று பெயர் சூட்டினேன்.
ஒரு சிலர் தாங்கள் வைத்திருந்த நூல்களை நூலகத்துக்கு நன்கொடையாக அளித்தனர். இந்த நூலகத்தைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக, திரை உலகத்துக்குள் நுழைய விரும்புபவர்கள், உதவி இயக்குநர்கள் அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கினர்.
2020-ஆம் ஆண்டில் இயக்குநர் வெற்றிமாறன், வளசரவாக்கத்தில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருக்கும் தனக்குச் சொந்தமான ஃப்ளாட்டில் ஒரு முழுமையான நூலகம் அமைப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார். தொடக்க விழாவில், இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், ராம், நடிகர் சத்யராஜ், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தற்போது நூலகத்தில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான தமிழ் நூல்களும், ஆயிரத்து ஐநூறு ஆங்கில நூல்களும் இருக்கின்றன. திரைத்துறை நூல்களைத் தவிர நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகள் போன்ற ஏராளமான நூல்கள் இருக்கின்றன.
நூல்களை உறுப்பினர்கள் வீட்டுக்கும் எடுத்துகொண்டு போய் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுக்கலாம். உறுப்பினர்களுக்கான ஆண்டுக் கட்டணம் ஐநூறு ரூபாய் என வசூலிக்கிறோம்.
இயக்குநர் பாலுமகேந்திராவின் மறைவுக்குப் பின்னர், அவருடைய குடும்பத்தினர் சேகரிப்பில் இருந்த ஏராளமான நூல்களையும், குறுந்தட்டுகளையும் நன்கொடையாக வழங்கினர்.
நூலகத்தில், நடிப்பு, திரைக்கதை எழுதுதல், குறும்படம் எடுத்தல் உள்ளிட்டவற்றுக்கான பயிற்சிப் பட்டறைகளும் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பயிற்சிக்கும் 30 பேர் வரை ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இதுவரை நடிப்புப் பயிற்சிக்கு ஐந்து, திரைக்கதை எழுதுவதற்கு நான்கு, குறும்படத்துக்கு மூன்று என பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனு ராமசாமி, ராம், ஏ.எல்.விஜய், கோபி நயினார், ஒளிப்பதிவாளர்கள்ரவிவர்மன், செழியன், நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஜெய ராவ் உள்ளிட்டோர் பயிற்சி அளித்துள்ளனர். இங்கே குறும்படப் பயிற்சி பெற்ற மாணவர்களில் பலர் சிறப்பான பல குறும்படங்களை இயக்கி விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்று இருக்கின்றனர்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, விமர்சனங்களும், விவாதங்களும் நடக்கின்றன. வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்தாலும், நல்ல படங்களை எடுத்தவர்களை அழைத்து, அவர்களைப் பாராட்டுகிறோம்' என்கிறார் அஜயன் பாலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.