கோலிவுட் ஸ்டூடியோ!

கோலிவுட் ஸ்டூடியோ!

வணங்கான் ரிலீஸ்:

இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'வணங்கான்' திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி 'வணங்கான்' திரைப்படம் ரிலீஸ் குறித்த அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். இத்திரைப்படம் ஜூலையில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.

ரஜினியின் இமயமலை டூர்:

ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வரும் அக்டோபரில் திரைக்கு வருகிறது. தனது ஒவ்வொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், ரஜினிகாந்த் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

கடந்தாண்டும் பத்ரிநாத், பாபாஜி குகை ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தார். இந்த முறையும் பயணம் மேற்கொண்டுள்ள ரஜினி, குறிப்பாக குகைக்குச் செல்லும் வழிகளில் சாலையில் உறங்குவது, ரிஷிகளுடன் உரையாடுவது என எளிமையான வாழ்க்கையில் இருந்து வருகிறார். இந்தாண்டு முதலாவதாக உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள பத்ரிநாத் தளத்துக்குச் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளப் பக்கத்தில் பரவிவந்தன.

இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த் இமயமலைக்கு அருகிலிருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. இதுதொடர்பாக டெஹ்ராடுன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த், 'ஒவ்வொரு வருடமும் இந்தப் பயணம் எனக்குப் புதுவகையிலான அனுபவத்தைக் கொடுக்கிறது. அப்படியான விஷயங்கள்தான் என்னை இதுபோன்ற பயணத்தை மேற்கொள்ள உந்துதல் தருகின்றன. இந்த முறையும் இந்தப் பயணம் நல்லதொரு அனுபவத்தைக் கொடுக்கும்' என்றார்.

'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக்:

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் 2018-ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்தப் படத்திற்கு 'தடக் 2' எனப் பெயரிட்டிருக்கிறார்கள். கரண் ஜோஹர் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பாக பதிலளித்துள்ள மாரி செல்வராஜ், 'இந்தப் படத்துக்கு அவங்க ரைட்ஸ் வாங்கி பண்றாங்க. இதுல என்னுடைய பங்களிப்பு எதுவும் இல்லை' என்றார்.

ரஜினியுடன் இணையும் சத்யராஜ்:

38 வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் இணைகிறார் நடிகர் சத்யராஜ். இவர்கள் கடைசியாக 1986-ஆம் ஆண்டு 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'கூலி' திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இது தொடர்பான தகவலை நடிகர் சத்யராஜே சமீபத்தில் 'மழைப் பிடிக்காத மனிதன்' திரைப்பட நிகழ்வில் பகிர்ந்திருந்தார்

27 வருட இடைவெளிக்குப் பிறகு:

நடிகர் பிரபுதேவாவும் நடிகை கஜோலும் இணைந்த நடித்திருந்த 'மின்சார கனவு' திரைப்படம் 1997-இல் வெளியாகியிருந்தது. இத்திரைப்படத்தில் இந்த ஜோடி இணைந்து நடனமாடிய 'வெண்ணிலவே வெண்ணிலவே' பாடல்தான் இன்றைய தேதியிலும் பலரின் வாட்ஸ் அஃப் ஸ்டேடஸ். 27 வருட இடைவெளிக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்திருக்கிறது.

பாலிவுட் இயக்குநர் சரண்தேஜ் இயக்கும் 'மஹாராக்னி' திரைப்படத்தில் இந்த ஜோடி இணைந்திருக்கிறது. இத்திரைப்படத்தின் முதல் கண்ணோட்ட விடியோ சமீபத்தில் வெளியாகியிருந்தது. நடிகை கஜோல் இப்படத்தின் டைட்டில் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்.

அஜீத்குமாரைச் சந்தித்த சிரஞ்சீவி:

நடிகர் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷா நடித்துவரும் 'விஸ்வம்பரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதே இடத்தில் அஜித்குமார் நடிக்கும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. ஷூட்டிங் இடைவெளியில் இருவரும் சந்தித்தனர்.

இவர்கள் இருவரும் எடுத்துகொண்ட புகைப்படத்தை சிரஞ்சீவி தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், 'எங்களுடைய 'விஸ்வம்பரா' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு சர்ப்ரைஸ் விருந்தாளியாக அஜித்குமார் வந்திருந்தார். அவரும் எங்களுக்கு அருகிலேயேதான் படப்பிடிப்பை நடத்தினார்.

அவர் தெலுங்கில் அறிமுகமான 'பிரேம புஸ்தகம்' திரைப்படத்தின் பாடல்களை நான்தான் வெளியிட்டேன். இதுமட்டுமின்றி , நடிகை ஷாலினியும் என்னுடைய திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். சினிமாவில் அஜித்குமாரின் உச்சத்தை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்' எனக் கூறியிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com