இறந்து போன குடும்ப உறவுகள், பிரசவத்தின்போது இறந்த கர்ப்பிணிகளின் நினைவாக, சாலையோரங்களில் சுமைதாங்கி கற்கள் அமைப்பது மரபு மாறாமல் இன்றளவும் தொடர்கின்றன. பயன்பாடு இல்லாவிட்டாலும், கிராமப்புற மக்களின் மனித நேயத்தை பறைசாற்றும் சின்னங்களாக இவை கம்பீரமாய் காட்சி அளித்து வருகின்றன.
நாகரிகம், பண்பாடு, கலாசார மாற்றத்தால், நகர்ப்புறவாசிகள் மட்டுமின்றி கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையிலும் மாற்றங்கள் தொடர்ந்து வருகின்றன. எத்தனை மாற்றங்கள் வந்தாலும், முன்னோர்கள் வழியாக பாரம்பரியம் மாறாமல் சில நிகழ்வுகளை கிராமப்புற மக்கள் இன்றளவும் மரபு மாறாமல் பின்பற்றி வருவதற்கு சுமைதாங்கி கற்களே சான்றாகும்.
இந்தக் கற்கள் அமைப்பது குறித்து பழனியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி யிடம் பேசியபோது:
'கிராமங்களில் போதிய போக்குவரத்து வசதியில்லாத காலக்கட்டத்தில், பெரும்பாலானோர் தலைச்சுமையோடு தங்கள் வசிப்பிடங்களுக்கு நடந்தே சென்றனர். தங்களது சுமையைத் துணையின்றி இறக்கி வைத்து இளைப்பாறவும், பின்னர் எவரது தயவுமின்றி எளிதாக துôக்கிச் செல்லவும் வசதியாக சாலையோரங்களிலும், பொது இடங்களிலும், செல்வந்தவர்களும்,கொடை உள்ளம் கொண்டவர்களும் சுமைதாங்கி கற்களை அமைத்தனர்.
இவ்வாறாக, சேலம் மாவட்டத்துக்கு வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர், ஆத்துôர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, பேளூர், அயோத்தியாப்பட்டணம், வீரகனுôர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் சுமைதாங்கி கற்கள் அமைப்பது இருநூறு ஆண்டுகளுக்கு மேலாக வழக்கமாக இருந்து வருகிறது.
குக்கிராமங்களுக்கும் கூட போக்குவரத்து வசதிகள் கிடைத்து விட்ட இக்காலத்தில், சுமைதாங்கி கற்களுக்கு தேவையும் பயன்பாடும் இல்லாமல் போனது. இருப்பினும், பெரும்பாலான கிராமங்களில் சமூக வேறுபாடின்றி குடும்ப உறவுகளின் நினைவாக, சுமைதாங்கி கற்கள் அமைப்பது மரபு மாறாமல் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
பிரசவிக்க முடியாமல் இறக்கும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி, குடும்பத்தில் ஒருவர் இறந்து போனாலும், சுமைதாங்கி கற்கள் அமைப்பது, இன்றளவும் மரபு மாறாமல் தொடர்ந்து வருகிறது.
வயிற்றில் குழந்தையை சுமந்து பிரசவிக்க முடியாமல் இறந்து போன கர்ப்பிணிகளின், குடும்பப் பாரத்தை சுமந்து இறந்து போன குடும்ப உறவுகள் நினைவாக சுமைதாங்கி கற்கள் அமைத்து, அடையாளம் தெரியாத மக்கள் தலைச் சுமையை இறக்கி வைத்து இளைப்பாற வழிவகை செய்தால், அவர்களது ஆன்மா அமைதி பெறும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம். சுமைதாங்கி கற்கள் அமைப்பதால் குடும்பத்துக்கு நன்மையும் ஏற்படும் என கருதுவதால் இன்றளவும் தொடர்ந்து வருகிறோம் ' என்கிறார் லட்சுமி.
-பெ.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.