2024 தேர்தல்: வெற்றி,தோல்வி கண்ட திரையுலக பிரபலங்கள்!

2024 தேர்தலில் திரையுலக நட்சத்திரங்கள்: வெற்றியும் தோல்வியும்!
2024 தேர்தல்: வெற்றி,தோல்வி கண்ட திரையுலக பிரபலங்கள்!
Published on
Updated on
2 min read

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளி வந்த நிலையில் சினிமா நட்சத்திரங்களும், விளையாட்டு வீரர்களும் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்கள். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கங்கனா ரணாவத், ஹேமாமாலினி, நடிகர் சுரேஷ் கோபி ஆகியோரை முக்கிய தொகுதிகளில் களமிறக்கியது.

மற்றொருபுறம், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யூசுப் பதானையும், கீர்த்தி ஆசாதையும் மேற்கு வங்கத்தில் களமிறக்கியது. தமிழகத்தைப் பொறுத்தமட்டில், நடிகை ராதிகா சரத்குமார் விருதுநகரில் களமிறக்கப்பட்டார்.

நடிகர் மன்சூர் அலிகான் வேலூர் தொகுதியிலும், இயக்குநர் தங்கர் பச்சான் கடலூரிலும் களமிறங்கினார்கள்.

கடந்த சில ஆண்டுகளாகவே நடிகை கங்கனா ரணாவத் அரசியல் பேசி வந்தார். இவரை ஹிமாச்சல் பிரதேஷின் மண்டி தொகுதியில் பாஜக களமிறக்கியது. 'என் கைவசம் இப்போது அதிக திரைப்படங்கள் உள்ளன. அதனால் நான் சினிமாவை விட்டு இப்போது விலகமாட்டேன்' எனப் பேசியிருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது முதல் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நடிகை கங்கனா ரணாவத் வெற்றி பெற்று மண்டி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அரிதாகப் பூக்கும் பூவைப் போல இந்த முறை வெற்றி கண்டிருக்கிறார் நடிகர் சுரேஷ் கோபி. கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற கேரள மாநில சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு தோல்வியைக் கண்டிருந்தார். இந்த முறை மீண்டும் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி கண்டிருக்கிறார். மோடி தலைமையில் அமைந்திருக்கிற புதிய அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் பொறுப்பேற்றிருக்கிறார் சுரேஷ் கோபி.

மற்றொரு மலையாள நடிகரான கிருஷ்ணகுமார் பா.ஜ.க சார்பாக கொல்லம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார்.

நடிகர் முகேஷும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக அதே கொல்லம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்திருக்கிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க சார்பாக உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருந்தார் நடிகை ஹேமாமாலினி. தற்போது அதே தொகுதியில் பா.ஜ.க சார்பாகப் போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரைப் போலவே கடந்த இரு நாடாளுமன்றத் தேர்தலிலும் வடகிழக்கு டெல்லியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நடிகர் மனோஜ் திவாரி மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

இதே போல முன்னாள் கிரிக்கெட் வீரரான யூசுப் பதான், திரிணாமூல் காங்கிரஸ் சார்பாக மேற்கு வங்கத்தின் பக்ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கீர்த்தி ஆசாத்தும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி சார்பாக மேற்கு வங்கத்தின் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டிருக்கிறார்.

ஆந்திரா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது தெலுங்கு தேசம் கட்சி.

அந்தக் கூட்டணியில் இருக்கும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆந்திராவின் பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் பவன் கல்யாணும் வெற்றி பெற்றுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடிகர் சரத்குமார் தனது கட்சியை பா.ஜ.கவோடு இணைத்திருந்தார். அதன் பிறகு பா.ஜ.க சார்பாக விருதுநகர் தொகுதியில் களமிறக்கப்பட்ட நடிகை ராதிகா சரத்குமார், மூன்றாம் இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

இதே தொகுதியில் தே.மு.தி.க சார்பாகக் களமிறக்கப்பட்ட மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகனான விஜய பிரபாகரன் இரண்டாவது இடத்தைப் பிடித்து இருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கடலூர் தொகுதியில் களமிறக்கப்பட்ட இயக்குநர் தங்கர் பச்சான் தோல்வியடைந்திருக்கிறார்.

விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட இயக்குநர் களஞ்சியமும் வேலூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகானும் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com