
கலைக்கு மொழி எப்போதும் ஒரு தடையாக இருக்காது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம். க்ளைமாக்ஸ் காட்சியில் மேஜிக்குகளை சேர்த்து ஆடியன்ஸின் விசில் ஒலியையும், கைத்தட்டல்களையும் சம்பாதித்திருக்கிறது. இத்திரைப்படம் 2006-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளத்தில் இப்படி உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டப் படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
டிராஃபிக்
'ஹைபர் லிங்க்' திரைக்கதை ஃபார்மெட்டில் 2011-ஆம் ஆண்டு மலையாளத்தில் உருவாகி புதியதொரு கதை சொல்லும் பாணியை அறிமுகப்படுத்தியது 'டிராஃபிக்' திரைப்படம். மாலிவுட் இயக்குநர் ராஜேஷ் பிள்ளை இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஸ்ரீனிவாசன், குஞ்சாக்கோ போபன், ரஹ்மான் ஆகியோர் நடித்திருந்தனர். சென்னையில் ஒரு டிராஃபிக் சிக்னலில் நிகழ்ந்த ஓர் உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி இத்திரைப்படத்தை எடுத்தனர். இத்திரைப்படத்தை 2013-இல் தமிழிலும் ரீமேக் செய்தனர். அந்தத் திரைப்படம்தான் சரத்குமார், சேரன் ஆகியோர் நடிப்பில் உருவான 'சென்னையில் ஒரு நாள்'.
வைரஸ்
இயக்குநர் ஆஷிக் அபு இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இத்திரைப்படம் வெளியாகியிருந்தது. 2018-ஆம் ஆண்டு கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் காட்டுத்தீயைப் போலப் பரவியது. இந்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்திதான் 2019-ஆம் ஆண்டு டொவினோ தாமஸ், குஞ்சாக்கோ போபன், பார்வதி, ரேவதி ஆகியோர் நடிப்பில் இத்திரைப்படம் வெளியானது. நிபா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அளப்பரிய பங்காற்றிய விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் சமர்ப்பணம் செய்யும் வகையில் இப்படம் எடுக்கப்பட்டது.
மலையன் குஞ்சு
மலையாள இயக்குநர் சஜிமோன் பிரபாகரன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியாகியிருந்த திரைப்படம் 'மலையன் குஞ்சு.' பகத் பாசில், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். படத்தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், இயக்குநர், திரைக்கதாசிரியர் என பன்முகங்கொண்ட மகேஷ் நாராயணன்தான் இப்படத்தின் கதையை எழுதினார். 2020-ஆம் ஆண்டு கேரள மாநிலம் இடுக்கிப் பகுதியில் நிகழ்ந்த நிலச்சரிவுச் சம்பவத்தை மையப்படுத்திதான் இத்திரைப்படத்தைப் படமாக்கினார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் இடம் பெற்றிருந்த எமோஷனல் காட்சிகள் மக்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றன.
2018
இப்போது எந்த அளவுக்கு 'மஞ்சும்மல் பாய்ஸ்' திரைப்படம் கொண்டாடப்படுகிறதோ அதே அளவுக்கு அதிரடியான வரவேற்பை டொவினோ தாமஸ் நடிப்பில் 2023-இல் வெளியாகியிருந்த '2018' திரைப்படமும் பெற்றது.
மலையாள இயக்குநர் ஜூட் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் உருவாகியிருந்த இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களை நரேன், லால், கலையரசன் ஆகியோர் ஏற்று நடித்திருந்தனர். கடந்த 2018-ஆம் ஆண்டு எதிர்பாராத நேரத்தில் பொழிந்த அதிகப்படியான மழை கேரள மாநிலத்தில் பெருஞ்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் கேரள மக்கள் பெருந்துயத்தைச் சந்தித்தனர்.
இந்தத் துயர்மிகு உண்மைச் சம்பவத்தைத் தழுவிதான் '2018' திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வ எண்ட்ரியாக ஆஸ்கர் விருது போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது மலையாளத் திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது.
ரோமாஞ்சம்
சௌபின் சாகிர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடிப்பில் உருவாகி, கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'ரோமாஞ்சம்.' ஏழு இளைஞர்களை மையப்படுத்தி நகரும் இந்த நகைச்சுவை ஹாரர் திரைப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இப்படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் தன் ஏழு நண்பர்களுடன் நிஜ வாழ்வில் சந்தித்த நிகழ்வை வைத்துதான் இப்படத்தை எடுத்திருக்கிறார். நகைச்சுவையான ஹாரர் டிராக்கிற்காக இப்படம் மக்களிடையே பாராட்டைப் பெற்றது.
கன்னூர் ஸ்குவாட்
மம்மூட்டி நடிப்பில் வெளியான 'கன்னூர் ஸ்குவாட்' திரைப்படம் அதிரடியான வரவேற்பைப் பெற்றது. ஒளிப்பதிவாளர் ராபி வர்கீஸ் ராஜ் இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கன்னூர் மாவட்டத்தின் காவல் அதிகாரி ஸ்ரீஜித் நியமித்த கன்னூர் ஸ்குவாடின் காவல் அதிகாரிகள் சந்தித்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது.
மஞ்சும்மல் பாய்ஸ்
தற்போது நான்கு திசைகளிலும் 'மஞ்சும்மல் பாய்ஸ்' ஃபீவர்தான். 2003-ஆம் ஆண்டு (படம் நடப்பது 2006-இல்) எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள மஞ்சும்மல் பகுதியிலிருந்து நண்பர்கள் சிலர் கொடைக்கானல் குணா குகைக்குச் சென்றனர். அங்குள்ள குழியில் சிக்கிக்கொண்ட நண்பன் சுபாஷை குட்டன் காப்பாற்றினார். இந்த உண்மைச் சம்பவத்தை வைத்துதான் மலையாள இயக்குநர் சிதம்பரம் இப்படத்தை எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் குணா திரைப்படத்தின் 'கண்மணி அன்போடு காதலன்...' பாடலை வைத்து, பார்வையாளர்களைச் சிலிர்க்க வைத்தது படத்தின் முக்கிய ஹைலைட்!
-டெல்டா அசோக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.