

கூடல் மாநகரான மதுரையை அடுத்த சோழவந்தான் அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் 1924 - ஆம் ஆண்டு ஜூன் 16 - ஆம் தேதி டி. ஆர். மகாலிங்கம் பிறந்தார். இவரது தந்தை பெயர் தென்கரை ராமகிருஷ்ணன். இதுதான் டி. ஆர். மகாலிங்கம் என அழைக்கப்பட காரணம்.
மகாலிங்கத்துடன் பிறந்தவர் ஆறு பேர். மற்ற ஐந்து பேரும் வேதம் படித்தவர்கள். நாடக நடிகர் ராமையாவின் உதவியுடன் ஜெகநாதர் ஐயரின் வாய்ஸ் கம்பெனியின் பாலமோகன காந்த சபாவில் மகாலிங்கம் சேர்ந்தார்.
அப்பொழுது டி. ஆர். மகாலிங்கத்தின் வயது 12. அதன் பிறகு யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நடத்திய வள்ளி திருமணத்தில் வேலனாக நடித்தார். அந்த காலகட்டத்திலேயே... டி. ஆர். மகாலிங்கம் பாடிய 'காயாத கானகத்தை' பாடல் நாடகம் பார்ப்பவர்களிடையே பெரிய கைத்தட்டலை வாங்கி கொடுத்தது.
1935 - ஆம் ஆண்டு மகாலிங்கம் கிருஷ்ண லீலாவில் கிருஷ்ணராக நடிக்கிறார். மகாலிங்கம் அபாரமாக பாடுகிறார் என்பது ஏ. வி. மெய்யப்ப செட்டியாருக்கு தெரிய வருகிறது. அந்தச் சமயம் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் 'நந்தகுமார்' என்ற படத்தை தயாரித்துகொண்டிருந்தார்.
'கிருஷ்ண லீலா' நாடகத்தை ஏவி. எம் பார்த்து டி. ஆர். மகாலிங்கத்தின் நடிப்பு பிடித்து விடவே உடனே டி .ஆர். மகாலிங்கத்தின் தந்தையைச் சந்தித்து மகனை நடிக்க வைக்க அனுமதி கேட்டு முதன் முதலாக 500 ரூபாய் முன் பணம் கொடுத்து தனது நந்தகுமார் படத்தில் நடிக்க வைக்கிறார் ஏவி.எம்.
'நந்தகுமார்' படத்தை தொடர்ந்து டி. ஆர். மகாலிங்கத்துக்கு 'பக்த பிரகலாதா', 'பூலோக ரம்பை', 'தாசி பெண்', 'மனோன்மணி' என பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்தன. ஆனால் இத்தனை படங்கள் வந்தாலும் இவருக்கு கிடைத்த கதாபாத்திரம் சிறு சிறு கதாபாத்திரங்களே.
1938 - ஆம் ஆண்டு ஏவி. எம்-யின் 'ஸ்ரீ வள்ளி' தயாரித்தபோது, வள்ளியாக நடிக்க குமாரி ருக்மணியை ஒப்பந்தம் செய்தார். முருகனாக யாரை நடிக்க வைக்கலாம் என யோசிக்கும்போது டி. ஆர். மகாலிங்கம் நினைவுக்கு வந்தார். 'சங்கீதத்தில் சாதனை புரிந்த எஸ். ஜி. கிட்டப்பாவின் குரல் போலவே இருக்கு. இந்தப் பையனையே முருகனா நடிக்க வையுங்க...' என மெய்ய செட்டியாருக்கு சிலர் யோசனை சொன்னார்கள். அதன்படியே 'ஸ்ரீ வள்ளி' படத்தில் வேலன், வேடன், விருத்தன் என மூன்று வேடங்களில் டி. ஆர். மகாலிங்கம் நடித்தார். இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 55 வாரங்கள் வெற்றிகரமாக திரையில் ஓடியது.
டி. ஆர். மகாலிங்கத்தின் இயல்பான நடிப்பு, இன்றியமையாத இசை பாடல்களும் படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தது.
இதையடுத்து டி. ஆர். மகாலிங்கம் நடித்த அடுத்த வெற்றி படங்கள் 'நாம் இருவர்', 'வேதாள உலகம்' இந்த இரு படங்களும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படங்களாக அமைந்தன. இந்தத் திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் பாரதியின் பாடலை கம்பீரமாக தனது குரலில் பாடி இருப்பார்.
டி . ஆர். மகாலிங்கம் தனது 17 வயதில் கோமதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 1950 - ஆம் ஆண்டு டி. ஆர். மகாலிங்கத்துக்குச் சொந்தமாக படம் எடுக்க ஆசை வந்தது. தனது ஒரே மகன் சுகுமாரின் பெயரிலேயே சுகுமார் புரொடக்ஷன்ஸ் என்ற கம்பெனியை தொடங்கி 'மச்ச ரேகை', 'மோகனசுந்தரம்', 'சின்னத்துரை' போன்ற படங்களைத் தயாரித்தார்.
டி. ஆர். மகாலிங்கம் 40 படங்களில் நடித்து, நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். 1978 - இல் உடல் நலக்குறைவால் 54 வயதில் ஏப்ரல் 21 -ஆம் தேதி டி. ஆர். மகாலிங்கம் காலமானார்.சுமார் 45 ஆண்டுகள் கலை உலகைத் தனது கம்பீரக் குரலால் கட்டுப்
படுத்தி வைத்திருந்த இந்த கானப்பறவை, 54-ஆவது வயதில் மரணத்தைத் தழுவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.