தன்னிரக்கம்

'மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?' என்று சுதாகரன் படுக்கையைவிட்டு எழுந்து பாத்ரூம் போக விளக்கை எரிய விட்டபோது சுந்தரி கேட்டாள்.
தன்னிரக்கம்
Updated on
8 min read

'மணி மூணுதானே ஆகுது. அதுக்குள்ளேயும் ஏன் எழுந்திரிக்கிறீங்க?' என்று சுதாகரன் படுக்கையைவிட்டு எழுந்து பாத்ரூம் போக விளக்கை எரிய விட்டபோது சுந்தரி கேட்டாள். லைட்டை போட்டவுடன் எழுந்தாளா அல்லது தூங்காமலேயே புரண்டு கொண்டிருக்கிறாளா என்று சந்தேகம் வந்தது இவருக்கு. வயதாகிப் போனால் எல்லாமும் குறைந்துதானே போகிறது. ஆரோக்கியம், உணவு, உறக்கம் என்று.

'திரும்பிப் படுத்துக்கோ? வெளிச்சம் கண்ணுல படுறமாதிரி ஏன் கிடக்கே?'

'ஆமா. நீங்க இப்படி சீக்கிரமே எழுந்து கொட்டமடிக்கக் கிளம்புவீங்கன்னு கண்டனா நான்? படுங்க பேசாம? நாலு மணிக்கு எழுந்தாப் போதும்.'

'ஐயையோ.. தூங்கிப் போயிட்டேன்னா சங்கடம். அந்த டென்ஷன் ஆகாது. நான் அவ்வளவுதான். நீ தூங்கு. பல் தேய்ச்சிட்டு பால் காய்ச்சி காபி குடிச்சிக்கிறேன். அப்புறம் வா நீ.'

அவருக்கு எல்லாமே அரை மணி நேரத்துக்கு அல்லது ஒரு மணி நேரத்துக்கு முன்னமே அந்தந்த வேலைக்கேற்றாற்போல் முடிந்துவிட வேண்டும். அநாவசிய டென்ஷன் கூடாது. சின்ன வயசிலிருந்தே அப்படித்தான். அது இன்றுவரை விடாது தொடர்கிறது. சீக்கிரமே எழுவது மற்றவர்களுக்குக் குடைச்சலாகத் தெரிகிறது. என்ன செய்ய?

அன்று அவர் தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். அதற்காக இருபது நாள்களுக்கு முன்னேயே ரயிலில் டிக்கெட் ரிசர்வ் பண்ணி விட்டுக் காத்திருக்கிறார். ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டு வருகையில் மனசு 'திக்.. திக்..' என்கிறது. எதற்காக? ஊருக்குப் போக வேண்டுமே என்கிற அலுப்பு ஒரு பக்கம். அங்கே போய் சமைத்துச் சாப்பிட வேண்டுமே என்கிற சிரமம் இன்னொரு பக்கம். பேரனை விட்டுப் பிரிய வேண்டுமே என்கிற வருத்தம் வேறு. அவனுக்குத் தெரியாது இவர் சூட்கேஸை தயார் பண்ணியது. தேவையான துணிமணிகளை எடுத்துவைத்துக் கொண்டு மெத்தைக் கட்டிலுக்கடியில் தள்ளி விட்டார். அவன் பார்வையில் படாமல், பட்டால் சூட்கேஸை எடுத்து வைத்துக் கொண்டு தர மாட்டேன் என்பான். ' ஊருக்குப் போகக் கூடாது' என்று சொல்லி அழுவான். 'நானும் வருவேன்' என்பான். அந்த சுகமே தனிதான். நமக்காக ஒரு புதிய ஜீவன். மனது உருகித்தான் போகிறது.

காலையில் அஞ்சுக்கெல்லாம்தான் இவர் கிளம்பி விடுவாரே. அவன் ஆறரை ஏழு என்று எழுந்திருக்கையில் முதலில் சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கும். அழுது அடம் பிடிப்பான். வீட்டை ரெண்டாக்குவான். பிறகு பாட்டி சமாதானம் செய்ய மெல்ல, மெல்ல சரியாய்ப் போகும். வேறு வழி? பையனோடு இருப்பு என்று சென்னைக்கு வந்து விட்டாலும் இன்னும் சொந்த ஊரில்தான் வரவு செலவு, வங்கிக் கணக்கு வழக்கு எல்லாம். அங்கைக்கும் இங்கைக்கும் அல்லாடிக் கொண்டிருக்கிறார். அங்கு போகாமலும் இருக்க முடியவில்லை…இங்கேயே கிடக்கவும் இயலவில்லை.

'பையனோடுதான் இருப்பேன்' என்று பிடியாய் உட்கார்ந்து விட்டாளே? மருமகப் பெண்ணும் எதுவும் சொல்வதில்லை. எங்கே சொல்ல? என்னத்தைச் சொல்ல? அதுதான் பொழுது விடிந்ததும்

விடியாததுமாய் வேலைக்கு என்று கிளம்பியாக வேண்டியிருக்கிறதே? கம்பெனி பஸ்ஸை பிடிக்க டாண் என்று காலை ஏழுக்கு ஸ்டாப்பில் இருந்தாக வேண்டும். ராத்திரி திரும்புகையில் மணி எட்டாகி விடும். ஓய்ஞ்சு உட்கார்ந்து, அய்யோடா? அப்பாடா! என்னவோ நடக்கிறது போங்கள். இதற்கு மேல் என்னத்தைச் சொல்ல? இயந்திர வாழ்க்கை என்றால் உண்மையில் இப்போதுள்ள ஐ.டி. இளைஞர்கள் இளைஞிகள் வாழ்கிறார்களே அதுதான். மூத்த தலைமுறைக்காலமான பத்து டூ அஞ்சு எல்லாம் என்றோ மலையேறி விட்டது.

நானே சொந்தமாய் சமையல் செய்து சாப்பிடுவது பற்றி சுந்தரிக்கு ஆதங்கம்தான். இந்த மனுஷன் என்னத்த சமைச்சான்? என்கிற அலட்சியம்.

'உங்களை யாரு சமைக்கச் சொன்னது? ஒரு மாமி இருக்காங்கன்னு சொன்னீங்களே.. அவுங்க கிட்டச் சொல்லிட்டா போச்சு. கொண்டு வந்துட்டுப் போறாங்க?'

எப்டியானாலும் டிபன் நான்தானே பண்ணியாகணும்? ஊர் போய் முதல் வேலையாய் மாவு அரைக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்து முட்டியது அவரை. போய் இறங்கியதும் இறங்காததுமாக அரிசியும் உளுந்தும் வாங்கப் புறப்பட வேண்டும். அப்படியே வாங்கி வந்தாலும் ஊறப்போடத் தண்ணீர் வேண்டும். அதற்கு வாசலில் வேன் வர வேண்டும். போய்ச் சேரும் நேரம் மதியம் ஒரு மணி. அவனோ காலை எட்டு எட்டரைக்கே ..கீ..கீங்.. என்று காது கிழிய உறாரன் அடித்துக் கொண்டு வந்து போயிருப்பான். பதப்படுத்தப்பட்ட தண்ணீர் என்று பெயர். மூணு நாள் கழிந்தால் புழு நெளிகிறது. அதற்குள் அதை முழுவதும் பயன்படுத்தியாக வேண்டும். எத்தனை தரம் எதிர் வீட்டில் தண்ணீர் கேட்பது? சட்டியைத் தூக்கிக் கொண்டு போய் 'யம்மா..பிச்ச போடுங்க.' என்பது போல்?

'ஒண்ணும் சங்கடப்படாதீங்க சார். .கூச்சப்படாமக் கேளுங்க.' என்று தான் சொல்கிறார்கள்.

'சார் ரொம்பக் கூச்சப்படுவாரு.. நாமளே கொண்டு போய்க் கொடுத்திடுவோம்.. பாவம்!' என்று தண்ணீரை ஒரு அளவுப் பாத்திரத்தில் தூக்கிக்கொண்டு வந்து 'இந்தாங்க பிடிங்க?' என்றா தருவார்கள்? அப்படியென்ன அவசியம் இருக்கிறது அவர்களுக்கு? பூட்டிக் கிடக்கும் வீட்டை யாரும் தூக்கிக் கொண்டு போகாமல் ஜாக்கிரதையாய் பார்த்துக் கொள்வதே பெரிது. ஆளிருக்கிறது என்பதற்கு அடையாளமாய் மாலையானால் வாசல் லைட்டைப் போடுவதும், பின்னர், பத்து மணிக்கு வந்து அணைப்பதும். யார் செய்வார்கள்? அந்த அளவை, கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா? மேலும் மேலுமா சிரமம் கொடுப்பது?

ரயிலில் ஒரு தண்ணீர் பாட்டில் தர்றான். நீங்க இங்கேயிருந்து ஒரு பாட்டில் வெந்நீர் கொண்டு போறீங்க? ஏ.சி. ட்ரெயினில் அதிகம் குடிக்க மாட்டீங்க? இறங்கினவுடனே பத்து ரூபாயைக் கொடுத்து இன்னொரு ரயில் நீர் பாட்டில் வாங்கினா அன்னைக்குப் பொழுது ஆச்சு. நாளைக்குக் காலம்பற வேன்காரன் வந்துடப் போறான். பிறகென்ன? காசு செலவழிக்க ஒவ்வொண்ணுக்கும் யோசிச்சா எப்படி? கஞ்சப் பிசினாறி.

நினைப்பது எல்லாவற்றையும் சர்வ சாதாரணமாய்க் கேட்டு விடுகிறாள். போனது போக மிச்சம் என்பதுபோல. அப்படித்தான் இதையும் கேட்டாள்.

'உங்களை யாரு டிபன் பண்ணிக்கச் சொன்னது? அதையும் சேர்த்து அந்த மாமிகிட்டச் சொல்லிட வேண்டிதானே? சப்பாத்தியோ, தோசையோ கொண்டு வந்துட்டுப் போறாங்க?ஊருக்குத் திரும்புற அன்னைக்கு மொத்தம் எவ்வளவு ஆச்சுன்னு உருவிக் கொடுத்துட்டு வருவீங்களா? எல்லாத்துக்கும் யோசிச்சிக்கிட்டே இருக்கீங்களே? மிச்சம் பண்ணி என்னத்தக் கண்டீங்க? ஒரு ஸ்வீட் வாங்கி ஆசையா உள்ளே தள்ள முடியமா? ஆகாது உடம்புக்கு. மேலும் மேலும் சேமிச்சு என்ன பண்ணப் போறோம்? சேர்த்து வச்சதெல்லாம் போதும். அவுங்கவுங்க சம்பாத்தியம் இருக்குதானே. நாம தூக்கிக் கொடுக்கிறதுலயா வாழப் போறாங்க? நம்மளோட இதுநாள் வரையிலான சேமிப்பு நாம சாகுற வரைக்கும் நம்மைப் பாதுகாத்துக்கிறதுக்கு. முதல்லயே தூக்கிக் கொடுத்துட்டு ஓட்டாண்டியா அம்போன்னு நிக்கிறதுக்கில்லே.புரியுதா?'

பையன் இருக்கும்போதே அவன் காது கேட்கத்தான் இதையெல்லாம் சொல்கிறாள். மருமகளும் இருக்கிறதுதான். அவர்களும் கேட்கிறார்கள்தான். ஆனால் எதுவும் பதில் பேசுவதில்லை. எதையும் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கடைசியில் நம்ம கைக்குத்தானே வந்தாகணும்ங்கிற எண்ணமிருக்கலாம். அவள் அளவுக்கு கணீர்னு தன்னால் சொல்ல முடியாது. வாயே திறப்பதில்லையே?

திடீர்னு உடம்புக்கு வந்திடுச்சின்னா வைத்தியச் செலவுக்கு வேண்டாமா? லட்சம் லட்சமான்னா ஆகும். அதுக்குப் பையன்கிட்ட கையேந்துவீங்களா? உங்க சுய கெளரவத்துக்கு அதெல்லாம் ஒத்து வருமா? அதனாலதான் அப்டிச் சொல்றது.

'என்ன இப்படி பேசற? அவன் தனியா ஒரு வீடு கட்டணும்ங்கிறான். அதுக்கு நாம உதவாம வேறே யாரு உதவுவாங்க? வாகன இடமாப் பார்த்திட்டிருக்கான். அமைஞ்சதின்னா அட்லீஸ்ட் இடம் வாங்குறதுக்காவது நாம கொடுத்துதவ வேண்டாமா?'

'பொசுக்குன்னு நீங்களே எடுத்து நீட்டிட்டீங்கன்னா? தங்களோட சேமிப்பு, சேஃப்டின்னு அவுங்களுக்குத் தோணிடும். அவங்க பணத்தையே கொடுக்கட்டும். இருப்புல குறைஞ்சாத்தான் திரும்ப சேமிக்கணும்ங்கிற புத்தியும் அக்கறையும் வரும். அவுங்களா எதுக்கும் வாயைத் திறக்காத போது நீங்களே எதுக்கு முந்திரிக்கொட்டை மாதிரி முணுக் முணுக்குன்னு முன்னால போய் நிக்குறீங்க? யாரையும் அவ்வளவு சுலபமா நம்பிடாதீங்க? தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறுதான். அத மனசல வச்சிக்குங்க?'

யோசிக்கும் எல்லா விஷயங்களிலும் ஒரு தீர்மானம் இருந்தது சுந்தரிக்கு. ஊசலாட்டம் எல்லாம் தனக்குத்தான். இப்படிச் செய்யலாமா அப்படிச் செய்யலாமா?' என்று எந்த ஒரு விஷயத்திலும் முடிவெடுக்க முடியாமல் திணறும் தன்மை. மனிதனின் பாதிக் காரியங்கள் இப்படித்தான் கெடுகின்றன. அல்லது நடக்காமல் போகின்றன.

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. காபி குடித்து முடித்திருந்தார் சுதாகரன். சமீபமாக இந்த காபியும் தன் வயிற்றுக்கு ஆவதில்லை. உப்பென்று பெரிதாக்கி விடுகிறது. பசி மந்தித்துப் போகிறது. அடியோடு நிறுத்தி விடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறார். பிறகு காலை உற்சாகத்துக்கு என்னதான் செய்வது? உற்சாக பானம் என்று ஒன்று உள்ளதா என்ன? எல்லாம் நாமே நினைத்துக் கொள்வதுதான். அல்லது பழக்கத்துக்கு அடிமையாவதுதான்.

'உங்க பையன் டீதானே சாப்பிடுறான். அதுபோல நீங்களும் டீக்குப் பழகிக்குங்க? அது அவ்வளவா தொந்தரவு செய்யாது. ஆனா ஒண்ணு. அதையும் ஒண்ணு ரெண்டோட நிறுத்திக்கணும். மூணு நாலுன்னு தாண்டக் கூடாது. ரொம்பத் திக்காவும் குடிக்கக் கூடாது. முதல் முறையாப் போட்ட டீ தூள்லயே ரெண்டாம் டீயையும் போட்டு லைட்டாக் குடிக்கப் பழகிக்கணும். அப்பத்தான் வயித்துத் தொந்தரவு இல்லாம இருக்கும்.'

டீக்கு மாறி விடுவோமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் சுதாகரன். யோசனையில்தான் காலம் கழிகிறதேயொழிய, அந்த டிகாக்ஷன் காபியின் மணம் மூக்கிலேயேதான் நிற்கிறது. காபி மேக்கரில் பொடியைப் போட்டுத் தண்ணீர் ஊற்றும்போதே சொட்டுச் சொட்டாய் இறங்கும் அந்த திக்கான டிகாக்ஷன் மணம் அதென்ன இன்று நேற்றா வந்தடைந்தது? இளம் பிராயம் முதலே உயிரோடு உறவாடிக் கொண்டிருக்கிறதே? 'இன்டியன் காபி' என்று காபி கொட்டைக்கு வரிசையில் நின்று கெஞ்சிக் கூத்தாடி அரை கிலோவும் ஒரு கிலோவுமாக வாங்கி வந்து அதை அரைத்துக் காபி பொடியாக்கி. அந்த நாள்களில் அதுவே ஒரு பெரும் சாதனை. அதுவும் இல்லாமல் இருந்த காலமும் உண்டுதான்.

காபி பொடிக்கும், சர்க்கரைக்கும் காசில்லாமல் அப்பா கொண்டு வரும் கொஞ்சூண்டு துட்டில் எத்தனைக்கு முழம் போட்டிருக்கிறாள் அம்மா. அதுவும்தானே நடந்தேறியது. கஜ கர்ண வித்தை பயின்ற காலம் அது. அன்று கிடைத்த தண்ணீர் காபி பிறகு வந்த காலங்களில் இதக் கூடப் பிரியப்பட்ட மாதிரியான குவாலிட்டில குடிக்க உரிமையில்லையா? அப்புறம் எதுக்குத்தான் சம்பாதிப்பதாம் என்றாகிப் போனது. சின்னச் சின்ன ஆசை.. சிறகடிக்க ஆசை.!.

குளித்து முடித்து வெளியே வந்தார் சுதாகரன். அந்தக் காலை நேரத்தில் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளித்து ஃப்ரெஷ்ஷாக இருப்பது மனதுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது.

'இந்த பாருங்கோ? மூணு தோசை வச்சிருக்கேன். அடில மிளகாய்ப் பொடி போறுமா? இன்னொண்ணு வைக்கட்டுமா?' என்று கேட்டாள் சுந்தரி.

அவள் எழும் நேரத்தை அவளுக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. எப்பொழுது எழுந்தால் எப்பொழுது வேலை முடியும் என்கிற தீர்மானம் உண்டு.

'பதில் சொல்லுங்கோ? காதுல விழுந்துதா?'

'மூணே போதும்.அப்புறம் வயித்தக் கலக்கித்துன்னா சங்கடம்.. ரயில்ல டூ பாத்ரூம் போறதெல்லாம் அத்தனை சரிப்படாது. லக்கேஜை விட்டுட்டுப் போகணும். பயமாயிருக்கும். வேணாம்.'

'உங்களுக்கு எல்லாத்துக்கும் பயம். மனுஷா எல்லாரும் என்ன திருடாளா? நம்மள மாதிரிதானே மத்தவாளும். கொஞ்சம் பார்த்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போனா ஆச்சு. யாரையும் நம்புறதில்லே.'

'நம்ப முடியாதுடி. இந்தக் காலம் அப்படி. நாம யார்ட்டச் சொல்லிட்டுப் போறோமோ அவனே நம்ம பொட்டியைத் தூக்கிட்டுக் கம்பி நீட்டிடுவான் அல்லது யாராவது கவனிச்சிட்டிருந்தாங்கன்னா அவங்க அபேஸ் பண்ணிடுவாங்க? தலைக்கு மேலே வச்சதே இருக்கா? இருக்கான்னு தலையை நிமித்தி நிமித்திப் பார்க்க வேண்டியிருக்கு! நீ என்னமோ பேசறே?'

'அய்யே.. போதுமே உங்க பேச்சு! உங்கள மாதிரி நாலு பேர் பயந்தா போதும்.. அப்புறம் ட்ரெயினுக்கே நாளடைவுல கூட்டம் குறைஞ்சு போயிடும். திருட்டுப் போயிடும்னு.அப்டியெல்லாம் யாருமில்லை.. மனுஷாளை நம்பப் பழகிக்குங்கோ?'

'இனிமேலா? சொந்த பந்தங்களையே நம்ப முடில இந்தக் காலத்துல. பார்க்கப் போனா எங்க வந்து ஒட்டிண்டிடுவாளோன்னு அளந்து அளந்து பேசறாங்க? போன்ல பேசுறது கூட குறைஞ்சு போச்சு. இல்லன்னா ரொம்ப இஷ்டமா இருக்கிற மாதிரி... வாயால வழிய விடுறாங்க? எல்லாம் பொய்.அநியாய சுயநலம். அவனவனுக்கு அவனவன் பொண்டாட்டி, புள்ள. இது மட்டும்தான். தாய் தகப்பனக் கூட எவனும் கொண்டாடுறதில்லை. ஒரு மூலையில கிடந்துட்டுப் போகட்டும். இல்லன்னா முதியோர் இல்லத்துல சேர்த்துடுவோம்னு துணிஞ்சிடுறாங்க? இவனுங்களுக்கு வயசே ஆகாதா? நாளைக்கு இவனுங்களும் கிழப்பயலுக ஆக மாட்டாங்களா?மார்க்கண்டேயர்களா எல்லாரும்? அப்போ அவனவன் பிள்ளைக அவுங்களத் தூக்கி எறிஞ்சாங்கன்னா? எவனாவது இத யோசிக்கிறானா? முதியோர்களை மதிக்காத, கொண்டாடத் தெரியாத சமூகம் என்ன சமூகம்?'

'அது கெடக்கட்டும். இந்த எவர்சில்வர் சம்படத்துல சாதம் வச்சிருக்கேன். கொஞ்சமா பால் ஊத்தியிருக்கென். அங்க போய், போற வழிக்கு தயிர் பாக்கெட் வாங்கிட்டுப் போங்க. சாதத்தோட தயிரைக் கலக்கி சாப்பிடுங்க? ஊறுகாயும் தனியா சுத்தித் தர்றேன்.'

'ஏறக்குறைய எல்லாம் ரெடி. ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் தோசை மாவையும் ஊற்றி வைத்திருந்தாள். போய் இரண்டு நாளுக்குக் கவலையில்லை. பத்து வீடு தள்ளி மாவு விற்கிறார்கள்தான். ஏனோ அந்த மாவு வயிற்றுக்கு ஒத்துக் கொள்வதில்லை. அரைச்ச மாவையே அரைச்சு.. கரைச்ச மாவோட கரைச்சு. எதுக்கு அதையெல்லாம் சொல்லிக் கொண்டு, அவர்கள் பிழைப்பு அது.விற்றுத் தள்ளுகிறதே! அந்த பகாசுரக் கிரைன்டர் வாயிருந்தால் அழும். அவர்கள் தூங்கும்போதேனும் அதுவும் தூங்குமா என்பதே சந்தேகம்தான்!' 'ஒருவேளை அந்தச் சத்தம் இல்லையெனில் அவர்களுக்குத் தூக்கமே வராதோ என்னவோ? அப்படியும் இருக்கலாமே!'

'என்னப்பா..ரெடியா?' என்று கேட்டுக் கொண்டே பையன் விழிப்பு வந்து எழுந்து வந்தான்.

'அலாரம் வச்சிருந்தியா? கரெக்டா எழுந்திட்டியே?'

'ஆமாம்ப்பா.உன்னை எக்மோர் கொண்டு விடணும்ல?'

'அநாவசியமா உன்னைச் சிரமப்படுத்த வேண்டியிருக்கு. பேசாம ஏதாச்சும் டாக்ஸி புக் பண்ணினேன்னு வச்சிக்கோ? நாம்பாட்டுக்கு இங்க வாசல்லயே டாட்டா சொல்லிட்டுப் போயிப்பேன். ராத்திரியே புக் பண்ணிட்டா அவன்தான் காலையில டாண்ன்னு நாலே முக்கால் அஞ்சுக்கெல்லாம் வந்து நிக்கிறானே? வாடகைதான் தாறுமாறாக் கேட்பான். புக் பண்றபோது ஒண்ணு காண்பிக்கும். எக்மோர் போய் இறங்கிற போது வேறொண்ணைக் காண்பிக்கும். அவன் சொல்றதுதான்..கொடுத்ததுதான். வயித்தெறிச்சலா இருக்கும். இதென்னடா இது.. ட்ரெயின் டிக்கெட்டுல பாதியக் கேட்கிறானேன்னு...'

'எதுக்குப் புலம்புறே? நான்தான் கொண்டு விடுறேன்னு சொல்லிட்டேன்ல..அதுக்குத்தானே எழுந்திரிச்சேன். நம்மகிட்டயோ கார் இருக்கு. அப்புறம் எதுக்கு டாக்ஸில போகணும்? ஒண்ணும் பிரச்னையில்லப்பா? நீயா ஏதாச்சும் நினைச்சிக்காதே.. மனசைப் போட்டு உழட்டிக்காதே?'

'அதுக்கில்லே.. இப்படி நாலுக்கும் நாலரைக்கும் எழுந்திரிக்க வேணாமே.ஆறரை ஏழுன்னு தூங்கலாமே.. என்னால தூக்கம் கெடுதுதானே? ராத்திரி பன்னெண்டு.. ஒண்ணுன்னு வேலை பார்த்துட்டு வந்து விழறே? அதுதான் சங்கடமாயிருக்கு.'

'ஒரு சங்கடமுமில்லை.. எப்பயாச்சும் ஒருவாட்டிதானே? கிளம்பு..கிளம்பு..'

எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாயிற்றா என்று ஒருமுறை ரீவைன்ட் செய்து பார்த்துக் கொண்டார். பர்ஸ், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டுகள், பணம் பத்திரமா என்று பேன்ட் பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்துக் கொண்டார். சுந்தரி கொடுத்த டிபன் ஐட்டங்கள் ஒரு தனி பேக் முதுகில் சுமக்க அப்புறம் ஒரு சூட் கேஸ்.. அதில் பக்கவாட்டில் செருகிய வெந்நீர் பாட்டில். மொபைலைத் திறந்து ஒரு முறை டிக்கெட்டை சரி பார்த்துக் கொண்டார்.

எந்தக் கோச், எந்த சீட்.. என்பது அடிக்கடி மறந்து போகிறதே?

'ஸ்கிரீன் ஷாட் எடுத்து சேவ் பண்ணி வச்சுக்கோப்போ' என்று பையன் சொல்லியிருந்தான்.. ஜங்ஷன் போய் இன்னொரு முறை திரும்பவும் நிச்சயம் பார்க்க வேண்டியிருக்கும். கண்டிப்பாய் மறந்துதான் போகும். அந்தப் பதட்டமெல்லாம் வேண்டாம் என்றுதான் ரொம்ப முன்னதாகவே போய் நிற்பது.

கோச் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. பிளாட்பார பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப் படுத்திக் கொள்வதும் ஒருவகையில் நிம்மதிதான். ரயில் தனக்கு நேரம் கொடுப்பதற்குப் பதிலாக தான் அதற்கு நேரம் கொடுப்பது. அதில் ஒரு அலாதி திருப்தி. அப்படி அமர்ந்திருப்பதும், ரயில் ஏற வரும் பல்வேறு முகங்களை ரசித்துப் பார்ப்பதும் தனி சந்தோஷம்.

'பத்திரமாப் போயிட்டு வாப்பா. சமைக்க முடிலன்னா சிரமப்படாதே! அம்மா சொன்ன அந்த மாமிட்ட வாங்கி சாப்பிடு.. இல்லன்னா ஓட்டல்ல போய் சாப்பிடு. காசு செலவழியுமேன்னு பார்க்காதே.. உன் பென்ஷன் காசுல ஒரு ஐயாயிரம் கூட மாசம் கூடி நீ செலவு பண்றதில்லை.. எனக்குத் தெரியும். அப்படியெல்லாம் இருக்கணும்னு அவசியமில்லை. விருப்பப்பட்டதை வாங்கிச் சாப்பிடு.. சுணங்காதே.. எல்லா டிரான்சாக்ஷனையும் சென்னைக்கு மாத்திட்டு, அந்த வீட்டையும் பேசாம வித்துடலாம்.அதான் முப்பது வருஷத்துக்கு மேலே குடியிருந்தாச்சில்லை.. போறாதா. சொல்லிட்டேதான் இருக்கேன்..நீதான் கேட்கமாட்டேங்கிறே? அலையாமக் கொள்ளாம சிவனேன்னு சென்னையிலேயே கிடக்கலாம்தானே? சரிகவனமாப் போ. ரயிலில் ஏறி இறங்குறபோது ஜாக்கிரதை. ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போ? பஸ்ல போகாதே! இந்த லக்கேஜையும் வச்சிட்டு பஸ்ல போகக் கூடாது. எங்கேயாவது விழுந்து வப்பே புரியுதா?'

சுற்றிலும் பலரும் இதைக் கவனித்துக் கொண்டிருப்பது கொஞ்சம் லஜ்ஜையாக இருந்தது இவருக்கு. பேசிப் பேசியே என்னைத் தொண்டு கிழம் ஆக்கிடுவாங்க போல்ருக்கு.!

'பத்திரமாப் போயிட்டு வாப்பா. டாட்டா.. பை.. பை..'

இறக்கி விட்டானோ இல்லியோ? பறந்து விட்டான். பின்னால் அலறும் வண்டிகளின் சத்தம் அப்படி விரட்டுகிறது. தூரத்தே போகும் காரையே பார்த்துக் கொண்டு ஒரு நிமிடம் நின்றார் சுதாகரன். நீண்ட பெருமூச்சு கிளர்ந்தது.

மனுஷனுக்கு வயசாகக் கூடாது. ஊரிலிருக்கும் வீட்டை விற்பது, கணக்கு வழக்குகளை சென்னைக்கு மாற்றுவது என்று எல்லாவற்றிலும் தலையைக் கொடுக்கிறார்கள். உரிமையுண்டுதான். அவளும் கேட்டுக் கொண்டிருக்கிறாளே? அவள் பாடு ஜாலி. கழிந்து விடும். தன் பாடு? இப்படியும் ஒரு சந்தேகம் வரத்தானே செய்கிறது?

நாளைக்கு இவனே என்னை வெளியே போ என்றால் நான் எங்கு போய் நிற்பதாம்? நடக்காது என்று எப்படிச் சொல்வது? எதுவும் நடக்கலாமே? சேச்சே.. நம்ம பையன் அப்டியெல்லாம் இருக்க மாட்டான்! இப்படி நினைக்க இவர் தயாரில்லை. காலம் யாரையும் எங்கேயும் புரட்டிப் போடும். தூக்கி வீசும்.

'இங்க வந்துடு' என்று சொல்வதற்கு நான் கட்டிய அந்த மாளிகைதானே இன்றும் காத்துக் கொண்டிருக்கிறது? அது அவருக்கு ஒரு கோயில். அங்கிருந்தால் அப்படியொரு நிம்மதி மனதுக்கு. சொல்லப் போனால் அவரின் ஆரோக்கியமே அங்குதான். இவ்வளவு எதற்கு?

'அம்மா! அப்பா தனியா அலையறா? அது எனக்குப் பிடிக்கல..நீயும் கூடப் போயிட்டு வா.. இந்த வயசுல அப்பாவத் தனியா அனுப்பறதுக்கே எனக்கு இஷ்டமில்லை. ஒருத்தருக்கொருத்தர் துணை.. அப்பப்போ ஒரு மாசம் போய் இருந்திட்டு வாங்கோ? இங்கே நாங்க எப்டியோ சமாளிச்சிக்கிறோம். எங்களுக்கும் பழகணும்ல..தனியா இருந்து செய்து பார்த்தாத்தானே கஷ்ட நஷ்டங்கள் புரியும்? நாளைக்குக் குழந்தைன்னு ஒண்ணு வந்திடுச்சின்னா இன்னும் கஷ்டமில்லையா? அதுக்குள்ளேயும் எங்களுக்கு கொஞ்சமாச்சும் எக்ஸ்பீரியன்ஸ் ஆக வேண்டாமா? கிளம்பு..கிளம்பு..நீயும் அப்பா கூடப் போறே?' என்று சொல்லவில்லையே? இன்றுவரை ஒரு வார்த்தை இது குறித்துப் பேசியிருப்பானா? அம்மா புடவைத் தலைப்பைப் பிடித்துக் கொண்டே அலைகிறான் இன்றும்.

என்னிடம் இவ்வளவு பேசும் இவன் தன் அம்மாவிடம் ஏன் என் சார்பாய்ச் சொல்ல மாட்டேனென்கிறான்? என் சார்பென்ன.. பொதுச் சார்பு. அதுதானே சரி.. சின்ன வயதிலிருந்தே அம்மா கோண்டுதான் அவன். இன்று மனைவி என்று ஒருத்தி வந்து விட்ட பின்பும் அப்படியே இருந்தால்?

'அட அவன்தான் வேண்டாம்.. இவளுக்காவது தெரிய வேண்டாமா?'

'பேசாம அமுந்து கிடங்கோ. ரெண்டு மாசத்துக்கு ஒரு தரம் நாம ரெண்டு பேருமே போவோம். நானும் உங்க கூட வர்றேன். வீட்டையும் சுத்தம் பண்ணிட்டு லோக்கல் வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு வரலாம். எல்லா கோயில்களுக்கும் போயிட்டு சாவகாசமாத் திரும்பலாம். ஒண்ணும் கெட்டுடாது! சந்தோஷமாப் போயிட்டு வரலாம்' என்று சொல்லவில்லையே?

'நான் இங்கதான் இருப்பேன். என் பையனோடுதான் இருப்பேன். அங்க வரலை. என்னால முடியலை.!' திட்டமிட்ட திடமான வார்த்தைகள். முடியலை என்பது பொய். இங்கு கிடந்து மாங்கு மாங்கு என்று வேலை செய்ய மட்டும் முடிகிறதா?'

'நான் மட்டும் என்ன எள வட்டமா? அலையறதுக்கு? எனக்குதான் முடியலை. ஊர்ப்பட்ட டிரான்சாக் ஷனையும் வீட்டையும் அங்க விட்டுட்டு அம்போன்னு இங்கயே குந்தியிருக்க முடியமா? அந்த வீட்டோட கதி என்னாகுறது? பூட் பங்களாவா ஆயிடும் ! பேய்தான் குடியிருக்கும் அப்புறம்!'

என் பேச்சுக்கு எந்த எதிர்வினையும் இல்லை. என்ன உலகமடா இது?

அம்மாவின் இந்தப் பிடிவாதப் பேச்சை அவனும் அமைதியாய் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான். என்னிடம் பேசும் உரிமை கூட அவனுக்கு அம்மாவிடம் இல்லையோ? இதை அவன் பெண்டாட்டி கவனித்துக் கொண்டேயிருப்பாள் என்பது அவனுக்குத் தெரியாதா? ஆனாலும் அவன் அம்மா கோண்டுதான்.

'நான் ஊருக்குக் கிளம்பும்போதெல்லாம் வேண்டியதைப் பார்சல் பண்ணி ஆளைக் கிளப்புவதில்தான் சுந்தரி குறியாய் இருக்கிறாள். என்னத்துக்கு இப்படி அலையறேள்?' என்று கரிசனமாய் ஒரு வார்த்தை இல்லை இன்றுவரை. 'வீடுவரை உறவு. வீதி வரை மனைவி! எத்தனை நாளைக்கு என்று பார்க்கிறேன்?' தனக்குள் ஆதங்கமாய் முனகிக் கொண்ட சுதாகரனுக்குள் நீண்ட ஏக்கப் பெருமூச்சொன்று கிளர்ந்தது.

எதிரே தன் வயதொத்த தம்பதியர் சிலர் ஜோடி ஜோடியாய் அமர்ந்திருப்பதை அவரின் ஏக்கப் பார்வை தீர்க்கமாய்க் கண்ணுற்றது. லேசாகக் கண்கள் கலங்கியது அப்போது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com