பாடல்கள் பிறந்த கதை...

பாடல்களின் பிறப்பிடம்: கண்ணதாசனின் தொடக்கநாட்கள்
பாடல்கள் பிறந்த கதை...

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படங்களின் பாடல்களை இப்போது கேட்டாலும் மனம் மயங்கும். அவ்வாறு சில பாடல்கள் உருவானவிதமும், அதன் ருசிகரத் தகவல்களையும் பார்ப்போம்:

காரைக்குடியில் இருந்து சென்னைக்கு கவிஞர் கண்ணதாசன் தனது டிரங்கு பெட்டியுடன் முதன்முதலில் வந்திறங்கியபோது, அவரை மெரினா கடற்கரையே வரவேற்றது. போக வேண்டிய இடத்துக்குச் செல்ல பயணக் கட்டணம் (25 பைசா) இல்லாததால், உழைப்பாளர் சிலையின் அடியில் தலைவைத்து படுத்தார். காவலர் வந்து, 'இங்கே படுக்கக் கூடாது' என்று அப்புறப்படுத்தினார். அப்போது தலையில் டிரங்கு பெட்டியைச் சுமந்து நடந்தே சென்றார் கண்ணதாசன். இவ்வாறாக, சென்னையில் வாழ்க்கையைத் தொடங்கிய கண்ணதாசன் சாதித்ததும், சொந்தத் திரைப்படத்தைத் தயாரித்தார். முதல் காட்சி உழைப்பாளர் சிலைக்கு முன்பாக இரவுக் காட்சிப் பாடல்.

'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்துவிட்டால் தலையில் எந்தச் சுமையையும் தாங்கலாம்..'

எனும் ஜெமினி கணேசன் பாடுவது போன்ற பாடல் படமாக்கப்பட்டது. அப்போது, சாலையில் கார்கள் ஓட வேண்டுமே என்று படக் குழுவினர் சொல்ல, கண்ணதாசனின் எட்டு கார்கள் உலா வந்தன. இதை சொன்னவர் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்.

'வீர அபிமன்யு' படத்தில் வரும் கண்ணதாசன் எழுதிய 'பார்த்தேன்.. ரசித்தேன்... பக்கம் வர அழைத்தேன்...' எனும் பாடலில் 65 இடங்களில் 'தேன்' சேர்த்து எழுதப்பட்டிருக்கும். ஒரு சொல்லை மீண்டும், மீண்டும் பயன்படுத்தி தமிழின் சுவை உணரும்படி . 'அத்திக்காய் காய்...', 'வான் நிலா நிலா அல்ல...' என்று சில பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

கேரள நடிகர் டி.கே.பாலச்சந்திரன், 'மக்கள் கலா மன்றம்' என்ற ஒரு நாடகக் குழுவையும் நடத்திவந்தார். அந்தக் குழுவைச் சேர்ந்த நித்தியானந்தம் என்பவர், விவசாயக் குடும்பம் தொடர்புடைய 'கண்ணின் மணிகள்' எனும் நாடகத்தை எழுதினார். திண்டுக்கல்லில் 1954-இல் நடைபெற்ற விவசாயிகள் சங்க மாநாட்டில், இந்த நாடகம் நடத்தப்பட்டது. அதில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காவலர் வேடத்தில் நடித்தார். அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்காமல் நின்றுகொண்டிருந்ததால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிரித்துவிட்டனர். 'ஏன் அடிக்கவில்லை' என்று கீழே வந்தவுடன் கேட்டனர். இதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 'வேஷம்தான் போட்டேன். ஆனால் அடிக்கும்போது பாவம் டி.கே.பாலசந்தர். பலமில்லாத ஆள். அவரை அடிக்கச் சொன்னா.. அதான் அடிக்க முடியவில்லை' என்றார்.

அந்த நாடகத்தில்,

'தேனாறு பாயுது

செங்கதிரு சாயுது- ஆனாலும்

மக்கள் வயிறு காயுது...'

எனும் இந்தப் பாடல் குறித்து திரைத்துறையினர் அறிந்தவுடன், அடுத்த சில மாதங்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு பல திரைப்படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைத்தது. 1953-54-களில் அதிக பணம் பெற்றதும் இவர்தான். அந்தக் காலகட்டத்தில், ஜனசக்தி அலுவலகத்தின் கிழக்குப் பக்கத்தில் இவரும், ஓ.ஏ.கே. தேவரும் அறை எடுத்து தங்கியிருந்தனர். இதற்கு பின்னர்தான் ஜீவாவுடன் கல்யாணசுந்தரத்துக்கு நட்பு ஏற்பட்டது.

'கொஞ்சும் சலங்கை' படத்தில், 'சிங்கார வேலனே தேவா...' என்ற பாடலுக்கு நாகசுரம் வாசித்தவர்தான் காருகுறிச்சி அருணாசலம். 'கர்நாடக இசைப்பயிற்சி நிலையத்தை' கோவில்பட்டியில் அமைக்க, பத்து ஏக்கர் நிலத்தை அருணாசலத்துக்கு தமிழ்நாடு அரசு அளித்தது. 1964-ஆம் ஆண்டு ஏப். 7-இல் அவர் மறைவுற்றபோது, அதே இடத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

-தங்க.சங்கரபாண்டியன், பொழிச்சலூர்.

'பார்த்திபன் கனவு' திரைப்படமானபோது, அதற்கு வசனம் எழுதும் பொறுப்பை விந்தனுக்கு கல்கி அளித்தார். வசனமும் சிறப்பாகப் பேசப்பட்டது. அதோடு அந்தத் திரைப்படத்தில், 'இதயவானில் உதய நிலவே! எங்கே போகிறாய்..' என்ற இனிமையான பாடலை எழுதும் வாய்ப்பும் விந்தனுக்கு கிடைத்தது. பின்னாளில், 'குலேபகாவலி' படத்தில் வரும் 'மயக்கும் மாலைப் பொழுதே நீ போ! இனிக்கும் இன்ப இரவே நீ வா', 'கூண்டுக்கிளி' படத்தில் வரும் 'கொஞ்சும் கிளியான பெண்ணை..' போன்ற சிரஞ்சீவி பாடல்களை எழுதி புகழ் பெற்றார் விந்தன். அவர் எழுதிய பாடல்கள் பத்து. வசனம் எழுதிய படங்கள் ஏழு.

'பெற்றால்தான் பிள்ளையா?' படத்தில் இடம்பெற்ற 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...' பாடல் காட்சிப்படி தங்கவேலு பாடுவதாக கவிஞர் வாலி எழுதியிருந்தார். காட்சியை மாற்றி தான் பாடுவதாக அமையுங்கள் என எம்.ஜி.ஆர். கூறினார்.

'ஏன்' என்று இயக்குநர் கேட்க, அதற்கு எம்.ஜி.ஆர்., தங்கவேலு பாடுவதாக காட்சி அமைத்தால், நகைச்சுவையாக மக்கள் எண்ணிவிடுவர்.

நல்ல பாடல். நான் பாடினால் மக்களும் குழந்தைகளும் ஏற்றுகொள்வார்கள்' என்றார். இதை சரியென இயக்குநரும் ஏற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com