"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 199

அதிமுக கூட்டத்தில் சசிகலா கேள்வியால் ஏற்பட்ட பரபரப்பு
"பிரணாப்தா' என்கிற மந்திரச் சொல்! 199
Updated on
4 min read

ஆட்சிமன்றக் குழுக்கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டம் முடிந்தவுடன் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் இரா.நெடுஞ்செழியன், கா.காளிமுத்து, எஸ். திருநாவுக்கரசு, சேடப்பட்டி எஸ். முத்தையா உள்ளிட்டோருடன் நிருபர்களைச்சந்தித்தார் ஜெயலலிதா.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த எஸ்.செல்லத்துரையை, எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்தினார் அவர். விலைவாசிப் பிரச்னை, திமுக அரசு ஜெயலலிதாவுக்கும், அதிமுகவினருக்கும் எதிராக எடுக்கும் நடவடிக்கைகள், காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு அவர் மிகவும் நிதானமாகவும், பொறுமையாகவும் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

சற்றும் எதிர்பாராமல் தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றின் நிருபர், இடைமறித்து ஒரு கேள்வியை எழுப்பினார். அதை ஜெயலலிதாவும் எதிர்பார்க்கவில்லை, அங்கே குழுமியிருந்த ஏனைய நிருபர்களும் எதிர்பார்க்கவில்லை.

"சசிகலா பற்றிய கேள்வியைக் கேட்கக்கூடாது என்று கடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்...'' என்று அந்த நிருபர் தொடங்கியவுடன் எரிச்சலானார் ஜெயலலிதா.

"இப்போதும் கேட்கக்கூடாது என்று கூறுகிறேன். புதுக்கோட்டை வேட்பாளர் பற்றி ஆட்சிமன்றக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளைக் கூறுவதற்காகத்தான் இந்த சந்திப்பு. "சசிகலா பற்றி கேள்வி கேட்கத் தடை' என்று தலைப்புச் செய்தி போடுவதற்காக நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்...''

அந்த நிருபர் ஏதோ சொல்ல வாயெடுத்தார். அவரை ஜெயலலிதா பேசவிடவில்லை.

"நீங்கள் எந்தப் பத்திரிகையைச் சேர்ந்தவர்?''

அவர் சொன்னார்.

"உங்களிடமிருந்து வேறு கேள்வியை எதிர்பார்க்க முடியாது. இந்த சந்திப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம்.'' என்றபடி எழுந்து சென்றுவிட்டார் ஜெயலலிதா. (அந்த நிருபர் பெயரையும், பத்திரிகையின் பெயரையும் நான் பதிவு செய்ய விரும்பவில்லை.)

சசிகலா குறித்து அந்த நிருபர் கேள்வி எழுப்ப ஒரு காரணம் இருந்தது. அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த சசிகலா, வலிப்பு நோய் காரணமாக சென்னை அரசினர் பொது மருத்துவமனையில் (இப்போதைய ராஜீவ் காந்தி மருத்துவமனை) அனுமதிக்கப் பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதிகோரி அவரது கணவர் ம.நடராசன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதனடிப்படையில் அப்பல்லோ, விஜயா, மலர், தமிழ்நாடு மருத்துவமனைகளில் ஏதேனும் ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அவர் தேனாம்

பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதுகுறித்து கேள்வி எழுப்ப அந்த நிருபர் விழைந்திருக்கக் கூடும்.

சேலத்தில் பெங்களூர் அகல ரயில்பாதைப் போக்குவரத்துத் துவக்க விழாவில் கலந்துகொள்ள பிரதமர் தேவே கௌடாவுடன் ரயில்வே அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் வந்திருந்தார். தமாகா தலைவர் ஜி.கே. மூப்பனாரும், முதல்வர் கருணாநிதியும்கூட அந்த விழாவில் பங்கேற்றனர். விழா முடிந்து, ராம்விலாஸ் பாஸ்வான் தனது மனைவியுடன் சென்னை வந்தார்.

அவரைச் சந்திக்க அனுமதி கேட்டபோது, உடனே கிளம்பி வரும்படி உதவியாளர் தெரிவித்தார். லயோலா கல்லூரி அருகில் ஸ்டெர்லிங் ரோடிலிருந்த ரயில்வே விருந்தினர் விடுதியில் தங்கியிருந்த ராம்விலாஸ் பாஸ்வானை சந்திக்கச் சென்றேன்.

விடிந்தால் சங்கராந்தி (பொங்கல்) என்பதால், மாலை விமானத்தில் பாட்னாவுக்கு கிளம்புவதாக இருந்தார் அவர். தனது மனைவியுடன், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் காலையில் சந்தித்ததாகச் சொன்னார். எங்கள் பேச்சு ஐக்கிய முன்னணி அரசின் ஸ்திரத்தன்மை குறித்துத் திரும்பியது.

"ஆட்சி எப்படி நடந்து கொண்டிருக்கிறது?''

"நான் முன்பு ஒருமுறை உங்களிடம் சொன்னது போலத்தான். பாஜகவுக்கு ஆதரவின்மையும், காங்கிரஸின் பலவீனமும்தான் எங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. சீதாராம் கேசரி தலைவராகி இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம். அவர் நம்பத்தகுந்தவர் அல்ல. பிரதமராகும் ஆசை அவருக்கு நிறையவே இருக்கிறது...''

"நீங்கள்தான் ஜனதா தளத்தின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர். இதுவரையில் அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என்று சொல்கிறார்களே...''

"அறிக்கை வெளியிடவில்லை, அவ்வளவுதான். அறிக்கை வெளியிட வேண்டாம் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். நான் மட்டுமல்ல, முலாயம்சிங் யாதவும் அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தேன். அது வெளியில் தெரியவில்லை.''

"பிரதமர் ஏன் உங்களை வாழ்த்துத் தெரிவிக்க வேண்டாம் என்று தடுத்தார்?''

"லாலு யாதவ் வேண்டாம் என்று சொல்லி இருப்பார். அதை அவர் என்னிடம் தெரிவித்திருப்பார்.''

"முதல்வர் கருணாநிதியை சந்தித்தீர்களே, அவர் ஏதாவது சொன்னாரா?''

"நாங்கள் அரசியல் பேசவில்லை. என்னவென்று பேசுவது; அவருக்கு தெரியாததா எனக்குத் தெரிந்துவிடப் போகிறது? தில்லியில் நடக்கும் ஒவ்வொரு அசைவையும் மாறன்ஜி அவருக்குத் தெரிவித்து விடுவார். காங்கிரúஸô, பாஜகவோ ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்பது மட்டும்தான் அவரது விருப்பமாக இருக்கும். பொதுவாக, அரசியல் நிலவரம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம்.''

"என்னவென்று?''

"ஐக்கிய முன்னணி ஆட்சி கவிழ்ந்தால் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைவதைத் தவிர வேறு வழியில்லை. அப்படி அமையாமல் தேர்தல் வந்தால் பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிடும். எனது கருத்தை முதல்வர் கருணாநிதியும் அமோதித்தார்.''

"பிகாரில் சி.பி.ஐ.க்கு எதிராக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் எல்லாம் நடக்கிறதாமே... மத்தியப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றத்தில் தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று முறையிட்டிருக்கிறார்கள் போலிருக்கிறது...''

"கால்நடைத் தீவன ஊழலில் இருந்து லாலு பிரசாத் யாதவ் தப்பிக்க முடியாது என்றுதான் நினைக்கிறேன். சி.பி.ஐ.யை நடவடிக்கை எதுவும் எடுக்காமல், பிரதமரும், ஐக்கிய முன்னணி அரசும் வழக்கை நீர்த்துப்போக வைக்க வேண்டும் என்று முதல்வர் லாலு யாதவ் விரும்புகிறார். ஆனால், நீதிமன்றம் இந்தப் பிரச்னையை விடுவதாக இல்லை.''

"லாலு யாதவ் கைது செய்யப்படுவாரா?''

"அதற்கு உடனடியாக வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆட்சி கவிழ்ந்தால் ஒருவேளை அவர் கைது செய்யப்படலாம்... அப்படி இல்லாமல், அவர் கைது செய்யப்பட்டால் இந்த ஆட்சியை அவர் கவிழ்க்க முற்படலாம்.''

"எந்த அச்சுறுத்தலுக்கும் சிபிஐ பணியாது என்றும், ஊழலில் தொடர்புள்ளவர்கள் மீது வரிசையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் சிபிஐ இணை இயக்குநர் பிஸ்வாஸ் கூறியிருப்பதை கவனித்தீர்களா? இதெல்லாம் இயக்குநர் ஜோகிந்தர்சிங்குக்கு தெரியாமலும், பிரதமர் கௌடாவின் ஆசீர்வாதம் இல்லாமலும் நடைபெறுமா?''

"அப்படியெல்லாம் நினைக்காதீர்கள். உள்துறை அமைச்சராக இருப்பவர் தோழர் இந்திரஜித் குப்தா. இன்றைய எல்லா அரசியல் தலைவர்களையும்விட மூத்தவர், மரியாதைக்குரியவர், அப்பழுக்கற்றவர். அவரிடம்போய், விசாரணையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று யாராவது சொல்லிவிட முடியுமா? பிரச்னையே அதுதான். தோழர் இந்திரஜித் குப்தா இருக்கும் தைரியத்தில்தான் இயக்குநர் ஜோகிந்தர்சிங் ஃபோபர்ஸ் கோப்புகளைத் தேடிப் போகிறார். இணை இயக்குநர் பிஸ்வாஸ் கால்நடைத் தீவன ஊழலை விசாரிக்கிறார்...''

"ஆட்சி கவிழ்ந்துவிடாதா?''

"அதைப்பற்றி இந்திரஜித் குப்தாவுக்கு என்ன கவலை? ஆட்சிக்காக சமரசம் செய்து கொள்பவர் அல்லவே அவர். முதல்வர் கருணாநிதிக்கும் அவரைப் பற்றிய கவலை இல்லாமல் இல்லை.''

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக மாநில, தேசிய அரசியல் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

"சேலத்தில் மூப்பனாரை சந்தித்தீர்களா? ஏதாவது சொன்னாரா?''

"நிகழ்ச்சியில் சந்தித்தேன். அவ்வளவுதான். நான் அதிகம் பேசவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அவரிடம் நெருக்கம் கிடையாது. ஆனால், இந்திய அரசியலின் போக்கை அவர் நிர்ணயிக்கக்கூடும் என்பது மட்டும் நிச்சயம்.''

"எதனால் சொல்கிறீர்கள்?''

"மூப்பனார்ஜி மட்டும் காங்கிரஸில் இணைவதாக முடிவெடுத்தால், அடுத்த நிமிடமே தேவே கௌடா பிரதமராகத் தொடர மாட்டார். சீதாராம் கேசரியும் பிரதமராக முடியாது.''

"அப்படியானால் யார் பிரதம ராவார் என்று நினைக்கிறீர்கள்?''

"சோனியா காந்தியின் ஆசியுடன் மூப்பனார்ஜி பிரதமராக முடியும். அதற்கு அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சம்மதிப்பார்களா, கருணாநிதி அனுமதிப்பாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. முதலில் அவரே அதற்குத் துணிவாரா என்றும் தெரியாது. ஆனால் அதற்கான முயற்சிகள் நடக்கின்றன என்பது மட்டும்

எனக்குத் தெரியும்...''

"எதைவைத்துச் சொல்கிறீர்கள்?''

"சற்று முன்னால் ரஜினி ரஞ்சன்ஜியிடம் பேசினேன். அவர் சென்னை வந்திருக்கிறார். அதிலிருந்து எனக்கு அப்படியொரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது...''

ராம்விலாஸ் பாஸ்வானிட மிருந்து நான் விடைபெற்றுக் கொண்டேன்.

ரஜினி ரஞ்சன்ஜி என்று அவர் குறிப்பிட்டது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவருமான ரஜினி ரஞ்சன் சாஹூ. பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஜினி ரஞ்சன் சாஹூ, மகாத்மா காந்தியால் நிறுவப்பட்ட சாம்பரான் காந்தி ஆசிரமத்தில் படித்து வளர்ந்தவர். விடுதலைப் போராட்டத்துடன் தொடர்புடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ரஜினி ரஞ்சன்ஜியும், அவரது சகோதரர் ஷஷி ரஞ்சன் சாஹூவும் பிகார் மாநில காங்கிரஸ் கட்சியிலும், இந்திரா காந்தியுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். ரஜினி ரஞ்சன் சாஹூ, ஜார்ஜ் பெர்ணான்டஸுக்கு எதிராக முசாஃபர்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்றாலும், இரண்டு முறை காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அகில இந்திய காங்கிரசின் மேலிடப் பிரதிநிதியாக அவர் சென்னை வந்திருந்தார். அதனால்தான் பிகார் மாநிலத்தவரான ராம்விலாஸ் பாஸ்வானுடன் பேசி இருக்கிறார். பாஸ்வான் தெரிவித்ததை உறுதிப்படுத்துவதாக அமைந்தது, ரஜினி ரஞ்சன் சாஹூவின் சென்னை விஜயம்.

அவர் மயிலாப்பூர் வாரன் சாலை வீட்டில் ஜி.கே.மூப்பனாரை சந்தித்தாரா என்று தெரியவில்லை. ரகசிய சந்திப்பு நிகழ்ந்ததா என்று விசாரித்துப் பார்த்தேன். தகவல் கிடைக்கவில்லை.

அவரையே நேரில் சந்தித்து விடுவது என்று கருதித் தொடர்பு கொண்டேன். "தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நிருபர்களை சந்திக்க இருக்கிறேன். அங்கே வந்துவிடுங்கள்.'' என்று சொல்லி தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

நான் அவரை மீண்டும் அழைத்தேன். பத்திரிகை யாளர் சந்திப்புக்கு முன்னால் இரண்டே இரண்டு கேள்விகள் என்றபோது, தயக்கத்துடன் ஒத்துக்கொண்டார்.

"ஐக்கிய முன்னணி அரசு பற்றிச் சொல்லுங்கள்?''

"நீண்ட காலத்துக்கு நீடிக்காது.''

"அப்படியானால் யார் ஆட்சி அமைப்பார்கள்?''

"நாடாளுமன்றத்தில் பாஜகவால் தனது பெரும் பான்மையை நிரூபிக்க முடியாது.அதனால் ஆட்சி அமைக்கக் காங்கிரஸ்தான் அழைக்கப்படும்.''

"காங்கிரஸ் அழைக்கப்பட்டால் யார் பிரதமர்?''

"உங்களது இரண்டு கேள்விகள் முடிந்து விட்டன. கட்சி அலுவலகத்துக்கு வாருங்கள். நிருபர் கூட்டத்தில் தெரிவிக்கிறேன். இப்போது கேட்ட கேள்விகளை நீங்கள் அங்கே மீண்டும் எழுப்புங்கள்...''

தொலைபேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com