பாலிவுட் ரவுண்ட் அப்!

கௌரி கானின் புதிய உணவகம் மற்றும் பாலிவுட் பட அப்டேட்டுகள்!
பாலிவுட் ரவுண்ட் அப்!

ஷாருக்கான் மனைவி தொடங்கிய ரெஸ்டாரன்ட் !

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காதல் மனைவி கௌரி கான், மும்பையில் இன்டீரியர் டிசைன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பாலிவுட்டில் ஆலியா பட், கரண் ஜோகர், மலைகா அரோரா, அனன்யா பாண்டே உள்ளிட்டோரின் வீடுகளுக்கும், பலருடைய அலுவலகங்கள், ரெஸ்டாரன்ட்டுகளுக்கும் இன்டீரியர் டிசைனிங் செய்து கொடுத்திருக்கிறார்.

அதோடு ஷாருக்கான் நடிக்கும் பெரும்பாலான படங்களை கௌரிகானே தயாரிக்கிறார். புதிதாக அவர் மும்பையில் தாங்கள் வசிக்கும் பாந்த்ரா பகுதியில், 'ரெஸ்டாரன்ட் டோரி' -யை அண்மையில் தொடங்கியிருக்கிறார்.

இதற்காக கௌரிகான் தனது ரெஸ்டாரன்ட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். தயாரிப்பாளர் கரண் ஜோகர், ஹ்ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி சுசானே மற்றும் அவரது காதலன் அர்ஸ்லான், நடிகர் சஞ்சய் கபூர் உட்பட ஏராளமான பிரபலங்களும், கௌரிகானின் நெருங்கிய தோழிகளும் கலந்து காண்டனர்.

கௌரி கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெஸ்டாரன்ட்டின் இன்டீரியரைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.

தங்க வர்ணத்தில் சிவப்பு, பச்சை நிற மின் விளக்கில் ரெஸ்டாரன்ட் மின்னுகிறது. மும்பை மக்கள் தனது ரெஸ்டாரன்டிற்கு வரும்படி கௌரிகான் அழைப்பு விடுத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பு மட்டுமல்லாது, சொந்தமாக ஐ.பி.எல். கிரிக்கெட் அணியையும் வைத்திருக்கிறார். மும்பையில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஏற்கெனவே சொந்தமாக ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார்.

பாலிவுட் பிரபலங்கள் பலரும் ரெஸ்டாரன்ட்களில் முதலீடு செய்திருக்கின்றனர்.

இது பிரசாரப் படம் இல்லை, விழிப்புணர்வு படம்! - 'ஆர்டிகில் 370' குறித்து பிரியாமணி!

ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில், பாலிவுட் நடிகை யாமி கெளதம், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஆர்டிகில் 370'. ஜம்மு காஷ்மிருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டப் பிரிவு 370-ஐ நீக்கியதை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை வளைகுடா நாடுகள் தடை செய்திருக்கின்றன.

நெட்டிசன்கள் பலரும் பா.ஜ.க.வின் செயலை நியாயப்படுத்தவும், வரும் மக்களவைத் தேர்தலுக்கு பிரசாரமாகவும் இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது என்று எதிர்தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகை பிரியாமணி பேசுகையில், 'சிலர் இப்படத்தை பிரசாரப் படம் என்று சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு விழிப்புணர்வு படம். இப்படத்தை நாங்கள் எடுக்கும்போது இது போன்ற ஒரு வரலாற்று நிகழ்வை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்களுடைய நோக்கமாக இருந்தது. இந்தச் சட்டப்பிரிவை நீக்கும் பணி வெற்றியடைவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எல்லாம் எடுக்கப்பட்டன என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தப் படத்தை நாங்கள் எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்படக்கூட வாய்ப்புகள் இருந்தன. ஆனால் எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடக்காத வகையில் படம் எடுக்கப்பட்டிருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.

என் மகள்கள் இதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை -நடிகை குஷ்பு!

'அர்ஜுன் ரெட்டி' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவான 'அனிமல்' படம் ரிலீஸானது முதலே கடும் விமர்சனங்களைச் பல தரப்பினரிடமிருந்து பெற்று வருகிறது. இதில், தேவையற்ற அதீத வன்முறை, அடாவடியான ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாகப் பலரும் விமர்சித்தனர்.

இப்படம் ஒருபுறம் வசூலைக் குவித்தாலும், மறுபுறம் பலரது கண்டனங்களையும், கடுமையான விமர்சனங்களையும், குறிப்பாக இளைய தலைமுறையினரின் மனதில் தவறானத் தாக்கத்தை ஏற்படுத்துவதாகப் பலரும் கூறிவருகின்றனர். பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இப்படத்தைக் கடுமையாக விமர்சித் திருந்தனர்.

இதுகுறித்துப் பேசிய ரன்பீர், 'அனிமல்' திரைப்படம் நச்சுத்தன்மை கொண்ட ஆணாதிக்கம் பற்றிய ஓர் ஆரோக்கியமான உரையாடலைத் தொடங்கி இருக்கிறது' என்றார்.

இந்நிலையில் குஷ்பு சமீபத்தில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், 'அனிமல்' படத்தைக் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசுகையில், 'நான் இன்னும் அனிமல் திரைப்படத்தை பார்க்கவில்லை. ஆனால், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக, திருமண வாழ்வில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், முத்தலாக் போன்ற பல வழக்குகளை நான் பார்த்திருக்கிறேன். 'அனிமல்' போன்ற பெண்கள் மீதான வெறுப்பைப் பரப்பும் திரைப்படம் வசூலில் மிகப் பெரிய சாதனை செய்யும் படங்களில் ஒன்றாக மாறினால், அதை வெற்றி பெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்தித்தாக வேண்டும்.

'அர்ஜுன் ரெட்டி' , 'கபீர் சிங்' படங்களிலும் இதேபோன்ற பிரச்னைகள் இருந்தன. இதற்கு நான் இயக்குநரைக் குறை சொல்லமாட்டேன்.

ஏனென்றால், அவரைப் பொருத்தவரை வெற்றிதான் முக்கியம். 'சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைப் பற்றி பேசுகிறோம்' என்று அவர்கள் சொல்வார்கள். மக்களும் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள்.

என் மகள்கள் இதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால், அது எதைப் பற்றி பேசுகிறது என்பதை அறிய விரும்பிய அவர்கள் 'அனிமல்' படத்தை பார்த்துவிட்டு 'அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள்' என்று என்னிடம் கூறினார்கள். இப்படிப்பட்ட படங்களுக்கு பார்வையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும்போது ' நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்' என்று அதிருப்தி தோன்றுகிறது' என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com