சத்யா முதல் கில்லி வரை... ரீ ரிலீஸ் யுகம்!

பழைய படங்களின் மறுமலர்ச்சி: ரசிகர்களின் திரையரங்க கொண்டாட்டம்
சத்யா முதல் கில்லி வரை... ரீ ரிலீஸ் யுகம்!

தமிழகத்தில் நட்சத்திர பின்புலத்துடன் படங்கள் வெளியாகாத நிலையில், ரீ-ரிலீஸ் படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன. திரையரங்குகளில் தாங்கள் காணத் தவறிய படங்களைப் பார்க்கும் ஆவல் ரசிகர்களிடம் இருப்பதை ஹவுஸ் ஃபுல் காட்சிகள் உறுதி செய்கின்றன.

உச்ச நட்சத்திரங்களின் படங்களோ, பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீடோ அடுத்த இரு மாதங்களுக்கு இல்லாத நிலை உள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதாலும், தேர்வுக் காலம் என்பதாலும் 'தங்கலான்' உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் ரஜினியின் 'அண்ணாமலை', தனுஷின் 'யாரடி நீ மோகினி', விஜய்யின் 'திருமலை', 'காதலுக்கு மரியாதை', 'ஷாஜஹான்' அஜித்தின் 'வாலி', 'பில்லா', 'சிட்டிசன்', விஜய் சேதுபதியின் '96', ஜீவாவின் 'சிவா மனசுல சக்தி', நிவின் பாலியின் 'ப்ரேமம்', சிம்புவின் 'விண்ணைத் தாண்டி வருவாயா', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' ஆகிய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில், ரசிகர்களின் வரவேற்பை பொருத்து காட்சிகளின் எண்ணிக்கை கூடியும், குறைந்தும் வருகின்றன.

ஆண்டுகள் பல உருண்டோடினாலும், தொலைக்காட்சியில் தீபாவளி, பொங்கல் பண்டிகை தொடர்ந்து விடுமுறை நாள்களில் போட்டுத் தீர்த்துவிட்டாலும், தியேட்டர் அனுபவம் என்பது வேறுதான் என்கின்றனர் ரீ ரிலீஸ் ஆகி வரும் படங்களை பார்க்கும் ரசிகர்கள்.

குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பரில் 'ஜப்பான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற இரு படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியான நேரத்தில், 'என் பங்குக்கு நானும் வசூல் செய்கிறேன்' என்று போட்டிபோட்டுக்கொண்டு வசூலை வாரி இறைத்தார்கள் ஆளவந்தானும், முத்துவும்.

அதேபோல காதலர்களுக்கான மாதமாகவே பார்க்கப்படும் பிப்ரவரியில், 'சிவா மனசுல சக்தி', '96',

'பிரேமம்', 'சீதா ராமம்' போன்ற படங்கள் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன.

காதலர்கள் கொண்டாடும் படங்கள் அனைத்தும் இந்த மாதம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு அதிரி புதிரி ஹிட் அடித்த படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதில் விஜய்யின் 'கில்லி' படம் தொடங்கி அஜித்தின் 'பில்லா' படம் வரை ரீ ரிலீஸாக இருக்கின்றன.

ராஜீவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல் மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் 1997-ஆம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தன. இன்றளவும் காதலர்களால் கொண்டாடப்படும் இத்திரைப்படம், இந்த மாதம் தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமார், மானு உள்ளிட்ட பலரது நடிப்பில் 1998-ஆம் ஆண்டு வெளியான 'காதல் மன்னன்' படம், நடிகர் அஜித்தின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது; காதலர்களுக்கு பிடித்தமான படமாக அமைந்தது. சரண் இயக்கத்தில் உருவான படத்தில் பரத்ராஜ், எம்.எஸ்.வி. இசையமைத்த பாடல்கள் பலரையும் சுண்டி இழுத்தன. இந்தப் படமும் இந்த மாதத்தில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிகிறது.

நடிகர் கார்த்திக்கு அறிமுகப் படமாக அமைந்த 'பருத்திவீரன்' படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. 2007-ஆம் ஆண்டு பிப்ரவரி 23 -இல் படம் வெளியானபோது சுமார் 300 நாள்களுக்கு மேல் தியேட்டர்களுக்கு ஓடியது. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடிப்பில் ஆக்ஷன் - ரிவேஞ்ச் ஜானரில் உருவான படம், இந்த மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜித், நயன்தாரா காமினேஷனில் விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் உருவான 'பில்லா' திரைப்படம் 2007-ஆம் ஆண்டு வெளியானது. என்னதான் நடிகர் ரஜினியின் 'பில்லா' பட ரீமேக் என்றாலும், ஏ.கே. ஸ்டைலில் உருவான படம் நல்ல வரவேற்பையே பெற்றது.

இந்தப் படம் எப்போது ரீ ரிலீஸ் ஆகும் என்று பலராலும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் 'கில்லி'. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான இத்திரைப்படம் 'அதிரி புதிரி' ஹிட் அடித்தது. விஜய்யின் கெரியரை 'கில்லி' படத்துக்கு முன்பு, அதற்கு பின்பு என்று பிரிக்கும் அளவுக்கு பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது கில்லி.

இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17-ஆம் தேதி வெளியாகும் என தெரிகிறது. இதனைப் பின்பற்றி பல முக்கிய திரையரங்குகள் தொடர்ந்து படங்களை ரீ- ரிலீஸ் செய்து வருகின்றனர். சமீபத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்', '3', 'மயக்கம் என்ன', 'சிவா மனசுல சக்தி' ஆகிய திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் அமோக வரவேற்பைப் பெற்றது. ஸ்கிரீன், க்யூப் என தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்டாலும் ரீல் புரொஜெக்டர் மூலம் மார்ச் மாதத்தில் பழைய படங்களை ரீ- ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருக்கிறது.

சென்னை ஜி.கே. தேவி கருமாரி திரையரங்கம். ரீல் - புரொஜெக்டரில் இன்றைய தேதியில் படங்களை ரிலீஸ் செய்வதில் பல சிக்கல்களும் இருக்கின்றன. ஒலி அமைப்பு தொடங்கி படங்களின் மற்ற தொழில்நுட்பம் என அனைத்தும் மெருகேறிவிட்டது.

ஏற்கெனவே முன்னணித் தொழில்நுட்பங்களில் படத்தைப் பார்த்து பழகிய பார்வையாளர்களுக்கு இப்படியான பழைய தொழில்நுட்பங்கள் வித்தியாசம்தான்.

இதுகுறித்து ஜி.கே. திரையரங்க உரிமையாளர் ரூபனிடம் பேசியபோது:

'முந்தையத் திரைப்படங்களின் டிஜிட்டல் பதிவுகள் இல்லை. அதை நாம் மீண்டும் ரிலீஸ் செய்ய வேண்டுமென்றால் பழைய புரொஜெக்டரைப் பயன்படுத்துவதுதான் ஒரே வழி. நாங்களும் பழைய ரீல் புரொஜெக்டரைப் பாதுகாப்பாக வைத்திருந்தோம். அது இப்போது எங்களுக்கு உதவுகிறது. 'காதல் மன்னன்', 'ஆசை' திரைப்படங்களை ரீல் மூலமாக காட்சிப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். சத்யா, வறுமையின் நிறம் சிவப்பு ஆகிய திரைப்படங்களையும் ரீல் மூலமாக வெளியிட முயற்சி செய்து வருகிறேன்.

திரையரங்கத்திலுள்ள இன்றைய தொழில்நுட்பங்களுக்கு மக்கள் பழகிவிட்டதால் ரீல்களில் உருவாக்கப்பட்ட படங்களைப் பார்க்கும்போது இப்போது இருப்பதைவிட வேறுபாடு நிச்சயமாகத் தெரியும். ஆனால், கிளாசிக் தமிழ் திரைப்படங்களை பார்ப்பதற்கு இதுதான் ஒரே வழி' என்கிறார் ரூபன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com