ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு குறைய வழி என்ன?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வயிறு குறைய வழி என்ன?

வயிறு சுருக்கம் பெற ஆயுர்வேத சிகிச்சை

என் கணவருக்கு வயது முப்பத்து ரெண்டு. ஐ.டி.யில் வேலை செய்கிறார். வாரத்தில் நான்கு நாள்களாவது வீட்டில் இருந்தபடியே அலுவலக வேலை செய்வதால், அவருக்கு வயிற்றுப் பகுதியில் சதை போட்டு வயிறு பெரியதாகத் தெரிகிறது. கை, கால் எல்லாம் சாதாரணமாக இருந்தாலும், வயிறு பெரியதாக இருப்பதால் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறது. உள்மருந்து சாப்பிட மாட்டார். அவருடைய வயிறு குறைய வழி உள்ளதா?

-சிவரஞ்சினி, போரூர்.

'உத்வர்த்தனம்' எனும் வெளிப்புறச் சிகிச்சை உங்கள் கணவருக்கு உதவிடக் கூடும். அவரை மல்லாக்கப் படுக்க வைத்து, வயிற்றின் கீழ்ப்பகுதியில் இருந்து மேல்நோக்கித் தேய்த்துவிடும் சிகிச்சை முறைதான் இது. இந்தச் சிகிச்சை முறையின் பயன்கள் என்ன என்பதை சம்ஸ்கிருதத்தில் கூறப்பட்டிருப்பதால், அதைத் தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியமிருக்கிறது.

-உத்வர்த்தனம் கபஹரம்- கபதோஷத்தின் ஆதிக்ய குணங்களாகிய நெய்ப்பு, குளிர்ச்சி, கனம், மந்தம், வழுவழுப்பு, கொழுகொழுப்பு, நிலைப்பு ஆகியவற்றை உத்வர்த்தன சிகிச்சை மூலமாகக் கரைத்து வெளியேற்றிவிடலாம். கபமும், மேதஸ் எனும் உடல்கொழுப்பும் ஒரே குணங்களைக் கொண்டவை என்பதால், கபத்தைக் குறைப்பதால் உடலிலுள்ள 'துர்மேதஸ்' எனும் கெட்ட கெழுப்பையும் இந்தச் சிகிச்சையின் வழியாக நீக்கிவிடலாம்.

-மேதஸ;ப்ரவிலாயனம்- தோலின் உட்புறத்தில் பரவி நிற்கும் ஊளைச் சதையை தன் சூடான வீரியத்தினால் உருக்கி வெளியேற்றும் திறன் கொண்டதால், வயிற்றிலுள்ள தேவையற்ற கொழுப்புச் சதையை அகற்றிவிடும். கன்னம், கழுத்து ஆகிய பகுதிகளில் ஊளைச் சதை தொங்கும் நபர்களுக்கும் இது பயன்படும்.

-ஸ்திரீகரணமங்கானமாம்- உடல் உறுப்புகளை வலுவாக்கும் திறன் உடையது. கால் பாதங்களில் வலுவற்ற நிலை உடையவர்களுக்கு இதன் மூலம் கால்களை வலுவூட்டலாம்.

-த்வக்பிரசாதகரம்பரம்- தோலின் நிறம், பொலிவு, செயல்திறன் ஆகியவற்றை வலுவாக்குவதில் மிகவும் சிறந்த சிகிச்சை முறையாகும்.

-தயிரின் மேற்பகுதியில் நிற்கும் ஆடையை அகற்றி, தயிரின் மொத்த அளவுக்கு கால் பங்கு தண்ணீர்விட்டு, நன்றாகச் சிலுப்பிக் கிடைக்கும் மோரில் நபருக்குத் தகுந்தவாறு கொள்ளுப் பொடியைக் கலந்து சூடாக்கி, முன்குறிப்பிட்டதுபோல, வயிற்றின் கீழிருந்து மேலாக, சூடு பறக்கத் தேய்த்துவிடும் உத்வர்த்தன சிகிச்சை முறையால் பலரும் பயன் அடைந்துள்ளனர். தயிரில் நிற்கக் கூடிய தண்ணீருக்கு 'மஸ்து' என்று பெயர். அந்த மஸ்து நீரில் ஆயுர்வேத மூலிகைப் பொடிகளைக் கரைத்து முகத்தில் கீழிருந்து மேலாகத் தேய்த்து, அரை மணி நேரம் ஊறிய பிறகு முகத்தைக் கழுவிவிடுவதால் முக வசீகரம், தொங்கு சதை கரைதல், முகப் பொலிவு, நல்ல நிறம் போன்றவற்றைப் பெறலாம்.

உங்கள் கணவருக்கு உள்மருந்து சாப்பிடுவதில் ஆர்வமில்லை என்றாலும் சில சமையறைக் குறிப்புகளால் அவர் பயனடையலாம். ஒவ்வொரு உணவுக்குப் பிறகு நூறு மில்லி தண்ணீரில் ஐந்து மில்லி லிட்டர் கலப்படமற்ற தூய்மையான தேனைக் கரைத்துக் குடிக்கலாம். உடலிலுள்ள ஊளைச் சதை கரையும்.

துவரம் பருப்பு, பயத்தம் பருப்பு, கருப்பு கொண்டைக் கடலை, பச்சைப் பயிறு, கொள்ளு, ராஜ்மா ஆகியவற்றை சமபங்கு சேர்த்து, கஞ்சி காய்ச்சி வடிகட்டி சூடாறியவுடன் ஐந்து மில்லி தேன் கலந்து காலை உணவாகப் பருகலாம்.

பகல் தூக்கம், புலால் உணவு, அடுமனை (பேக்கரி) உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். மாலை நடைப்பயிற்சி செய்தல், யோகா பயிற்சியில் ஈடுபடுவதும் நல்லது. சதையைக் கரைக்கும் தரமான ஆயுர்வேத மருந்துகளை எழுத முடியாதபடிக்கு உங்கள் கேள்வி அமைந்துள்ளதால், கைகள் கட்டிப் போட்ட நிலைக்கு ஆளாகிவிட்டது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com