திரைக்கதிர்

புதுச்சேரி சிறுமி வன்புணர்வு: யுவன் கண்டனம், சினிமா உலகின் புதிய பரிமாணங்கள்
திரைக்கதிர்
www.kollypics4u.com
Updated on
1 min read

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவத்திற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜாவும் சிறுமியின் கொலை தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

"இந்தியாவில் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை தீராப் பிரச்னையாக இருக்கிறது. 28.9% குழந்தைகள் ஏதோ ஒரு வகையான பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு பற்றி சொல்லிதர வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு நற்குணங்களைப் போதித்து வளர்ப்பதும் அவசியம். புதுச்சேரி சிறுமியைக் கொலை செய்தவர்கள் போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பல தீமைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம் என்பது புரிகிறது'' என்றார்.

----------------------------------------------

சூர்யாவின் "கங்குவா' டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இயக்குநர் சிவா, சூர்யா இருவரின் திரைப்பயணத்தில் இந்தப் படம் ஒரு மைல் கல் எனச் சொல்கிறார்கள். ஒவ்வொரு பிரேமையும் செதுக்கி வருகிறார்கள். 10 மொழிகளில், 3டி தொழில் நுட்பத்துடன் ரெடியாகி வருகிறது. படத்தின் பெரும் பகுதியான காட்சிகள் போர்க்களம் நிறைந்த காட்சிகள் என்பதாலும், படத்தில் யானை, முதலை, புலி, கழுகு ஆகிய விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றன என்பதாலும் கிராபிக்ஸ் பெரும் பங்கு வகிக்கிறது. கிராபிக்ஸ் பணிகள் சர்வதேச தரத்தில் இருக்க மெனக்கெட்டு வருகிறார்கள்.

----------------------------------------------

சமீபத்தில் வெளியான "வடக்குட்டி ராமசாமி' படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் மகிழ்ச்சியில் இருக்கிறார் சந்தானம். இதனிடையே "டிடி ரிட்டர்ன்ஸ்' படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்குகிறார். இனி வரும் அடுத்தடுத்த படங்களிலும் காமெடி களைகட்டும் என்கிறது அவரது வட்டாரம். அன்புச்செழியன் தயாரிப்பில், "இந்தியா பாகிஸ்தான்' பட இயக்குநர் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுவும் காமெடி படமாகும். முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டது. டப்பிங்கையையும் நிறைவு செய்து கொடுத்துவிட்டார். . கோடை கொண்டாட்டமாக ஏப்ரலில் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து மே மாதத்தில் "டிடி ரிட்டர்ன்ஸ்' இரண்டாம் பாகம் படப்பிடிப்பை ஆரம்பிக்கிறார்கள்.

----------------------------------------------

"இந்தியன் 2'வின் படப்பிடிப்பு மொத்தமுமே நிறைவடைந்து விட்டது என்றும், அதன் அடுத்த பாகமான "இந்தியன் 3'யின் வேலைகளில்தான் ஷங்கர் இப்போது இருக்கிறார் என்கிறார்கள். சித்தார்த், பிரியா பவானி சங்கர் காம்பினேஷனில் "இந்தியன் 3'க்கான புரொமோஷன் பாடல் ஷூட்டும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் அனிருத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகளும், எடிட் ஷூட்டில் படத்தொகுப்பு வேலைகளும் மும்முரமாகப் போய்க் கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே படத்தை மே மாதம் திரைக்குக் கொண்டு வருவது உறுதிதான் என்கிறார்கள். முதல் பாகமான "இந்தியன்' திரைப்படம் கடந்த 1996-ஆம் ஆண்டு மே மாதம் 9 }ஆம் தேதி வெளியானது. எனவே "இந்தியன் 2'வையும் அதே தினத்தில் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com