ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாமதமான செரிமானம் எதனால்?

செரிமான கோளாறுகள்: ஆயுர்வேத தீர்வுகள்
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தாமதமான செரிமானம் எதனால்?

மிகவும் தாமதமான செரிமானம், குமட்டல், வாந்தி, ருசியின்மை, வாயில் வழுவழுப்பு, இனிப்புச் சுவை வாயினுள் ஏற்படுதல், இருமல், எச்சில் ஊறித் துப்புதல், ஜலதோஷம் என்றெல்லாம் எனக்கு அடிக்கடி ஏற்படுகிறது. இது எதனால்? மருந்து உள்ளதா?

-ரஞ்சனி, செய்யாறு.

'கிராணி' அல்லது 'க்ரஹணி' எனும் உபாதையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதையே இவை குறிப்பிடுகின்றன. செரிப்பதில் கடினமான உணவுப் பொருள்கள், நிறைய எண்ணெயில் பசை நிறைந்த உணவு வகைகள், மிகவும் குளிர்ந்த வீரியமுடைய பதார்த்தங்கள், அதிக அளவில் உணவைச் சாப்பிடுதல், உணவை உண்ட உடனே படுத்துறங்குதல் போன்றவற்றால் கபம் எனும் தோஷமானது சீற்றமுற்று, பசியை நீர்க்கச் செய்து, நீங்கள் குறிப்பிடும் வகையில் உபாதைகளைத் தோற்றுவித்துவிடுகிறது.

இதயத்தில் இனம் புரியாத வலி, வயிறு ஸ்தம்பித்த நிலையுடன் கனமாகத் தோன்றுதல், துர்நாற்றத்துடன் கூடிய இனிப்பான ஏப்பம், சோர்வு, புணர்ச்சியில் விருப்பமின்மை, மப்பும் வழுப்புடன் உடைந்த நிலையில் மலம் கனமாக வெளியேறுதல் போன்ற உபாதைகளும் சிலருக்கு காணப்படும், உடல் இளைக்காது. ஆனாலும், வலுவின்மையும் சோம்பலும் தென்படும்.

வயிறும் சிறுகுடலும் சந்திக்கும் பகுதியில் அமைந்திருக்கும் பகுதியில் ஏற்படும் கோளாறினால் மேற்குறிப்பிட்ட உபாதைகள் தோன்றுகின்றன. ஐந்து கிராம் திப்பிலி, ஐந்து கிராம் கடுகு ஆகியவற்றை மைய அரைத்து, சூடான இருநூறு மில்லி தண்ணீரில் கரைத்துக் குடித்து வாந்தி செய்வதன் மூலம் வயிற்றின் மந்த நிலை மாறி, பசியைத் தூண்டும் திரவம் சீராகும். பெருங்குடலில் மப்பு நிலையால் ஏற்படும் கணம், வாயுத் தேக்கம் போன்றவை மாற, பசியைத் தூண்டி, பேதியை ஏற்படுத்தும் கடுக்காய், இந்துப்பு போன்றவை சேர்க்கப்படும் 'வைஷ்வானரம்' எனும் சூரண மருந்தை வென்னீருடன் கரைத்து அருந்த வேண்டும்.

இப்படி வயிற்றுப் பகுதியை நன்றாகச் சுத்தப்படுத்திய பிறகு, எளிதில் செரிக்கக் கூடிய புழுங்கலரிசிக் கஞ்சியுடன் கலந்த 'தாளீசாதிவடகம்' எனும் மருந்துடன் காலை உணவை அமைத்துகொள்ள வேண்டும். மதியம் மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சூடான ரஸத்தை பழுங்கலரிசி சாதத்துடன் கலந்து, ருசிக்காக சுட்ட அப்பளம், கருவேப்பிலை துவையல் என்ற வகையில் உண்பது நல்லது.

மாலை வேளையில் எதுவும் சாப்பிடமால், இரவு பசி வரும் வரை காத்திருந்து, தயிரை நன்கு கடைந்து மோராக்கி, அதில் சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து, நல்லெண்ணெய்யில் தாளித்த கடுகு, கடலைப் பருப்பு, வெந்தயம், வரமிளகாய் சேர்த்து, பச்சரிசி சாதத்துடன் சாப்பிட உகந்தது. உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் அமர்ந்திருந்து, அதன்பிறகு நூறடியாவது நடந்து இடதுபுறம் சரிந்து படுத்துறங்குதல் நல்லது.

கறிவேப்பிலை, கடுக்காய், சுக்கு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் 'காலசாகாதி கஷாயம்', அஷ்டசூரணம் எனும் பொடி மருந்து, முஸ்தாரிஷ்டம், சீரகாத்யாரிஷ்டம், வில்வாதி லேஹியம், தாடிமாதிக்ருதம் எனும் நெய் மருந்து போன்றவை நீங்கள் குணப்படும் கிராணி உபாதையை குணப்படுத்தும் தரமான மருந்துகளாகும்.

எந்த வகையிலும் பசி கொட்டும்விடாமல் பாதுகாத்துகொள்ள வேண்டிய நிர்பந்தம், உங்கள் உபாதைக்கு அவசியத் தேவையாகும். மேற்குறிப்பிட்ட மருந்துகள் பசியின் சீரான தன்மைக்காகவே குறிப்பிட்டுள்ளன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com