கோலிவுட் ஸ்டூடியோ!

மயோசைட்டிஸ் மீறி மீண்டும் சமந்தா சினிமாவில் ஒளிர்வு!
கோலிவுட் ஸ்டூடியோ!

நோய் பாதிப்பு; மீண்டும் பேசிய சமந்தா!

மயோசைட்டிஸ் பாதிப்பால் வெளிநாடுகளில் சிகிச்சை எடுத்தவுடன் நீண்ட நாள்களாக ஓய்விலிருந்து கடந்த ஆண்டுதான் படங்களில் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை சமந்தா. அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த 'குஷி' படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதையடுத்து ஆங்கில வெப்சீரிஸான ஹிந்தி ஸ்பின் ஆஃப் வெர்ஷனில் நடித்தவர், கொஞ்ச நாள்கள் எந்தப் படங்களிலும் கமிட்டாகாமல் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறியிருந்தார்.

தற்போது உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'ஹெல்த் பாட்கேஸ்ட்' ஒன்றைத் தொடங்கி அதில் மயோசைட்டிஸ் நோய், அதிலிருந்து கடந்து வந்த பாதை குறித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றின் விழாவில் பேசிய சமந்தா, 'மயோசைட்டிஸ் நோயால் நான் பாதிக்கப்பட்டதைச் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு அப்போது இருந்தது. அந்தச் சமயத்தில் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்தப் படம் ரிலீஸாக வேண்டிய நேரத்தில்தான் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். பட வெற்றிக்காக புரோமோஷன் பணிகளில் என்னை ஈடுபடுமாறு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். அதனால் நான் ஒரு நேர்காணலுக்கு ஒப்புக்கொண்டேன். அதிக அளவு மருந்துகளை அப்போது எடுத்துக் கொண்டிருந்தேன். அந்த நேர்காணலில் என்னுடைய தோற்றம் எப்போதும் போல் இல்லை. அதனால்தான் மயோசைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டது குறித்து பொது வெளியில் அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டேன். அந்தச் சமயத்தில் சிலர் என்னை 'சிம்பத்தி குயின்' என்று அழைத்தார்கள்.

ஒரு மனிதராக, நடிகையாகப் பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறேன். எனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில், என்னைப் பற்றி தவறாகப் பேசுவதையும், எழுதுவதையும் தேடுவேன். அதிலிருந்து சில விஷயங்களை மாற்றிக்கொள்வேன். இங்குப் பலர் சிரமங்களில் இருக்கும்போது அதனை வெளிப்படுத்த ஒரு வடிகால் தேவை. அந்த வகையில் சோஷியல் மீடியாதான் சிறந்த வழி என்று நான் நினைக்கிறேன்'' என்றார்.

அந்தப் பாடல் இருவருக்குமானது!

இளையராஜாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்கவுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில்:

'இப்போது பேசுபொருளாகியிருக்கும் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு...' பாடல் குணாவுக்கும், அபிராமிக்கும் நடக்கும் காதல் பாட்டு என்று எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், அது எனக்கும் இளையராஜாவுக்குமான காதல் பாடல். என் கண்மணிக்கு நான் எழுதினேன், அவர் அதற்கு இசையமைத்தார்.

இளையராஜாவின் கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று எனக்குத் தெரியாது. இப்படத்தை இயக்குவது கஷ்டம்தான். ஆனால், நான் முதன்முறை பாடும்போது இளையராஜா என்னிடம், 'யாரைப்போலவும் பாட முயற்சிக்க வேண்டாம். அதுவாக வரும் பாடுங்கள்' என்றார். அதைத்தான் நான் உங்களுக்கும் சொல்கிறேன்.

இளையராஜா வாழ்க்கையைப் படமாக எடுக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அவரது வாழ்க்கையை எட்டு பாகங்களுக்கும் மேல் எடுக்கலாம்.

அதனால், அவரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்களோ அப்படியே எடுங்கள். அதைத்தான் இளையராஜாவும் உங்களுக்கு அறிவுரையாகச் சொல்வார். இப்படத்தைப் பார்த்துவிட்டு குறை கூறுபவர்கள் கூறட்டும். 'இளையராஜா ஆறடி இல்லை, அதைவிடவும் குறைவுதான்' என்றெல்லாம் கூட குறை சொல்வார்கள். ஆனால், அவரின் பாடலின் ஒரு அடியைக் கேட்டால் குறைகளெல்லாம் தெரியாது.

இளையராஜா பற்றி இசைக் கலைஞர்கள் சொல்லும் கதை, இயக்குநர்கள் சொல்லும் கதை, இசை தெரிந்தவர்கள் சொல்லும் கதை, இசை தெரியாதவர்கள் சொல்லும் கதை என ஒவ்வொருவர் கோணத்திலும் பல கதைகள் இருக்கின்றன. இது இளையராஜா பற்றிய கதையல்ல, 'பாரத ரத்னா' இளையராஜா பற்றிய கதை' என்று பேசியிருக்கிறார் என்கிறார்.

தியான பயிற்சியாளராக லிங்குசாமி!

'ஆனந்தம்', 'பையா', 'ரன்', 'சண்டக்கோழி' என பல படங்களை இயக்கிய அவர், 'பையா 2' படத்தை இயக்கும் வேலைகளில் இருக்கிறார். கடந்த 25 வருடங்களாக யோகா, தியானம், சைக்கிளிங்.. என ஆரோக்கியமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இப்போது தனது யோகா குருவான தாஜியின் தியான சங்கமத்தில் பங்கேற்று தியான பயிற்சியை அளித்துவரும் லிங்குசாமியிடம் கேட்டபோது, வீடியோ ஒன்றை அனுப்பி வைத்தார். 'என்னுடைய நண்பர்களிடம் தியானத்தை பத்திப் பேசினால், 'என்ன சார் இந்த வயசிலேயே பேசுறீங்க.. அதெல்லாம் வயசான காலத்துல பண்ற விஷயமாச்சே?'னு சொல்வாங்க. பொதுவான கருத்து எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் நான், 'வாழும் காலத்தில்தான் தியானம் தேவை' என்று சொல்வேன், வாழ்வில் நடக்கும் நல்லது, கெட்டது எதுவானாலும் அதை எதிர்கொள்ள தியானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

எனக்கு என் வாழ்வில் மிகப்பயனுள்ளதாக இருந்திருக்கிறது. நான் 25 வருடமாக தியானம் செய்து கொண்டிருக்கிறேன். நான் இப்போது டிரெயினராகவும் ஸ்ரீ ராமசந்திரா மிஷனின் தியான அமைப்பில் இருக்கிறேன். என் குருநாதர் தாஜியின் யோகா கூடம் ஒன்று ஹைதராபாத்தில் இருக்கிறது. அங்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் அமர்ந்து தியானம் செய்யலாம். என் குருநாதர் தியானம் குறித்து ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி நடத்த வேண்டும், அது தான் எனது கனவு என அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அவரது நீண்டநாள் கனவு இப்போது நனவாகிறது.

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்கவுள்ளனர். இது மிக அரிய சந்தர்ப்பம் இந்நிகழ்ச்சியில் நானும் கலந்துகொள்கிறேன். இந்த மகா சங்கமத்தில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டுமென்பது, எனது விருப்பம். 'குளோபல் ஸ்பிரிச்சுவாலிட்டி சங்கமம்' அனைவரும் வாருங்கள் பயன் பெறுங்கள் நன்றி'' என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com