ஐந்து தலைமுறைகளாக நகை அச்சுகள் சேகரிப்பு

தஞ்சாவூர் நகை அச்சுகளின் பாரம்பரிய பயணம்
ஐந்து  தலைமுறைகளாக நகை அச்சுகள் சேகரிப்பு

கலைகளின் தாயகமாகப் போற்றப்படும் தஞ்சாவூரில் தலையாட்டி பொம்மை, ஓவியம், வீணை, கலைத்தட்டு, நெட்டி வேலைப்பாடு, கண்ணாடி கலைப்பொருள்கள் உள்ளிட்டவை பிரபலம். இவை தவிர, தனி நபர் கலைகளும் ஏராளமாக உள்ளன. இந்த வகையில், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மானோஜியப்பா வீதியைச் சேர்ந்த அறுபத்து இரண்டு வயதான ஆர். சீனிவாசன், ஐந்தாவது தலைமுறையாக நகை அச்சுகளைச் சேகரித்து, பராமரித்துவருகிறார். இதுவரை 15 ஆயிரத்துக்கும் அதிகமான நகை அச்சுகளை உருவாக்கி, கண்ணாடிப் பெட்டிகளில் பாதுகாத்து வருகிறார்.

அவரிடம் பேசியபோது;

'இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த எனது தாத்தாவின் தாத்தாவான கோவிந்தசாமி ஆச்சாரி நகை அச்சு தயாரிக்கும் தொழிலைத் தொடங்கினார். இவரைத் தொடர்ந்து தாத்தாவின் அப்பா, தாத்தா ஜி. கிருஷ்ணசாமி ஆச்சாரி, அப்பா கே. ராமச்சந்திரன் ஆகியோரும் இந்தத் தொழிலை மேற்கொண்டு வந்தனர். தற்போது நான் ஐந்தாவது தலைமுறை.

இந்தக் கலையைப் பாதுகாப்பதற்காகவே, போக்குவரத்துக் கழகத்தில் கிடைத்த வேலையையும் தவிர்த்துவிட்டேன்.

இரும்புகளில் செய்யப்பட்ட இந்த அச்சுகள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் உள்ளன. தங்க நகைகளை உருக்கி, இந்த அச்சுகளைப் பயன்படுத்திதான் விதவிதமான ஆபரணங்களைச் செய்கிறோம். பாரம்பரியமாக அச்சுகள் செய்வதால், நகை வேலை செய்யும் கைவினைக் கலைஞர்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்வது வழக்கம். இந்த அச்சுகளை நான் வீட்டிலேயே தயார் செய்கிறேன்.

சுதந்திரப் போராட்டத் தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு, பாலகங்காதர திலகர் உள்ளிட்டோரின் உருவம் பொறிக்கப்பட்ட அச்சுகளும் உள்ளன.

தங்கச் சங்கிலி, வளையல்களில் பயன்படுத்தக் கூடிய தசாவதாரம் செட், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் பயன்படுத்தும் தாலி வகைகளின் அச்சுகள், நின்ற நிலையிலுள்ள விநாயகர், ராமர், கிருஷ்ணர், நர்த்தன கிருஷ்ணர், புல்லாங்குழல் கிருஷ்ணர், ஆஞ்சனேயர், ஐயப்பன், கருடாழ்வார், வேளாங்கண்ணி மாதா, சிலுவை, முஸ்லிம்கள் பயன்படுத்தும் கல்சர் மாலை அச்சுகள் உள்பட பல்வேறு வகையான அச்சுகளும் இருக்கின்றன. காசு மாலை, ஒட்டியாணம், தங்கச் சங்கிலி, பழங்கால சங்கிலிகள், டாலர்கள், தோடு, நெற்றிப் பொட்டுக்குரிய அச்சுகளும் உள்ளன. மயில், ஆடு, கன்றுடன் கூடிய பசு, சிங்கம், புலி, மீன் போன்ற விலங்குகளின் அச்சுகள் கூட அடக்கம். இவையெல்லாம் கையால் செய்யப்பட்டவை.

இதுபோல 15 ஆயிரத்துக்கும் அதிகமான நகை அச்சுகள் உள்ளன. இந்த அளவுக்கு வேறு யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை.

மிகவும் பழைமையான இந்த அச்சுகள் கொண்ட எங்கள் வீடு, தற்போது பாரம்பரிய நிலையமாகப் போற்றப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பெரியகோயில், அரண்மனை வளாகத்தைப் பார்த்துவிட்டு, இங்கும் வந்து நீண்ட நேரம் ஆர்வத்துடன் பார்த்து வியக்கின்றனர்.

தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் மாதம்தோறும் நடத்தும் பாரம்பரிய நடைப்பயணத்தில் இந்த நகை அச்சுகளையும் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எங்களிடம் நகை அச்சுகளை வாங்கிச் செல்கின்றனர். கரோனா காலத்துக்குப் பின்னர், நகை அச்சு செய்வதற்கான ஆர்டர்களும் குறைந்துவிட்டன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக நகை விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டதாலும், நகைக் கடைகளிலும் விற்பனை குறைந்துள்ளதாலும் எங்களுக்கு முற்றிலுமாக வேலை இல்லை.

இதனிடையே, இயந்திர அச்சுகளின் வருகையும் அதிகரித்துவிட்டதால், எங்களது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அச்சுகளைத் தொடர்ந்து பராமரித்து பாதுகாப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. தற்போது நானும், எனது மனைவி சாந்தியும் பராமரித்து வருகிறோம். இதைப் பராமரிக்க வங்கிக் கடனுதவியை எதிர்நோக்கியுள்ளோம். மேலும், இதை அரண்மனை வளாகத்தில் அருங்காட்சியகமாக வைத்து பாதுகாக்க அரசு உதவி செய்ய வேண்டும்'' என்றார் சீனிவாசன்.

- வி.என். ராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com