பேல் பூரி

பேல் பூரி

கண்டது

(உதகை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'பிங்கர்போஸ்ட்''

-வெ.சென்னப்பன், உதகை.

(பட்டுக்கோட்டை அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)

'ஆலடிக்கு மூலை''

-டி.ரவிச்சந்திரன், பட்டுக்கோட்டை.

(தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)

'கூத்தடிப்பார்''

-சங்கீதசரவணன், மயிலாடுதுறை.

கேட்டது

(செங்கல்பட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் நண்பர்கள் இருவர் பேசியது)

'இட்லி, தோசை இரண்டுமே ஒரு கரண்டி மாவுதான். ஆனால் விலை வித்தியாசம் ஏன்டா?''

'இட்லி குறுகிய வட்டம். தோசை பெரிய வட்டம். குறுகிய மனப்பான்மை இருந்தால் மதிப்பு குறைவு. பரந்த மனப்பான்மை இருந்தால் மதிப்பு அதிகம். இதுதான்டா?''

-ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.

(திருச்சியில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஊழியரும், வாடிக்கையாளரும்..)

'என்னப்பா.. உருளைக்கிழங்கு எல்லாம் ரொம்ப சின்னதா இருக்கு..?''

'சார்.. இதெல்லாம் சப்போட்டா பழம்..''

-சிவம், திருச்சி.

(கோவை கஃபே ஒன்றில் காதலர்கள்...)

'ஒரு வழியாக நம்ம நீண்ட காதல், கல்யாணத்துல முடியப் போறது நல்லதாப் போச்சு..''

'அப்படியா டார்லிங்... உன் அப்பா சம்மதிச்சுட்டாரா?''

'ஆமாம். ஒரு பாரின் மாப்பிள்ளை.. வீட்டுல எல்லோருக்கும் பிடிச்சுப் போச்சு.. குட் பை...''

-எம்.பி.தினேஷ், கோவை.

யோசிக்கிறாங்கப்பா!

அவரவர் உழைப்பை வாடிக்கையாக்கினால் வெற்றி.

அடுத்தவர் முன்னேற்றத்தை வேடிக்கையாக்கினால் தோல்வி.

-பா.சக்திவேல், கோவை.

மைக்ரோ கதை

ஒருவன் தானும் தன் நம்பிக்கையும் அருகருகே நடந்து செல்வதாக உணர்வுப்பூர்வமாக நினைத்தான். ஒவ்வொரு தடவையும் அவன் நடந்து சென்றபோது, தரையில் இரண்டு ஜோடி பாதங்கள் தடம் பதித்திருப்பதைக் கண்டான்.

ஒரு சந்தேகத்தில் நடந்து வந்த பாதையைஅவன் திரும்பிப் பார்த்தபோது, சில இடங்களில் ஒரே ஒரு ஜோடி பாதங்கள்தான் இருந்தன. ஆழ்ந்து யோசித்தபோது, தான் துன்பமாக இருந்த நேரத்தில் தான் அது என எண்ணினான்.

அவன் தனது நம்பிக்கையை பார்த்து பெருமூச்சோடு, 'என்னோடு மகிழ்வான காலங்களில் தொடர்ந்து பயணம் செய்த நீ.. துக்க காலங்களில் என்னை விட்டு ஓடிச்சென்றிருக்கிறாயே ஏன் ?'' என்றான்.

அதற்கு நம்பிக்கையோ, 'நான் உன்னைவிட்டு ஒருபோதும் விலகியதே கிடையாது. துன்ப காலத்தில் நடக்க முடியாமல் படுத்துவிட்ட உன்னை, நான்தான் தூக்கி கொண்டு நடந்து வந்திருக்கின்றேன். நிதானமாகப் பார். அவை எனது காலடித்தடங்கள்'' என்றது.

-சேவு.முத்துக்குமார், காரைக்குடி.

எஸ்எம்எஸ்

எப்படி பேசுவது என்று கற்றுத் தர நிறைய பேர் இருக்கின்றனர்.

ஏன் பேசாமல் இருக்க வேண்டும் என்பதை வாழ்க்கையே கற்றுத் தரும்.

-ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப்புக்கு அடுத்தபடியாக பிரபலமாக இருக்கும் தகவல் பரிமாற்ற செயலிலான டெலிகிராமில் 15 புதிய அம்சங்கள் வெளியாகி உள்ளன.

பயனாளர்கள் தங்களின் பிறந்த நாளைக் குறிப்பிட்டிருந்தால், அன்றைய தினம் அவர்களின் டி.பி.யில் பிறந்தநாள் வாழ்த்துகளுடன் அனிமேஷன் இடம்பெறும். இதைப் பயனாளர்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப எடிட்டும் செய்துகொள்ளலாம். இதை வேண்டாம் என்று நினைப்பவர்கள் செட்டிங்ஸில் சென்று நீக்கியும் விடலாம்.

தேவையான சேனல்ஸ் குழுவில் இணைந்து கொள்ள ஏதுவாக சேனல்ஸ் என்ற தனி டேப்பையும் டெலிகாரம் அறிமுகம் செய்துள்ளது. நாம் இருக்குமிடத்தைக் கண்டறிய உதவும் லோகேஷன் ஷேரிங் சேவையை மேலும் எளிதாக்கி, நாம் இருக்குமிடத்திற்குள் நமது தொடர்பில் இருப்பவர்கள் யாராவது வந்தால் அலர்ட் தகவல் கிடைக்கும்.

நாம் பகிர்ந்த தகவலுக்கு பிறர் கருத்து தெரிவித்தால் அதற்கான நோட்டிபிகேஷன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

அதேபோல், சேனல்களில் பகிரப்பட்ட தகவலுக்கு எத்தனை கருத்துகள் பதிவிடலாம் என்ற கட்டுப்பாட்டையும் விதிக்கலாம். தகவலைப் பகிர்ந்தவரின் புரோபைல் புகைப்படம் வெளியாகும். கணினியில் இணையம் மூலம் பயன்படுத்தப்படும் டெலிகிராமில் சேனல்ஸ் வாயிலாகப் பயன்படுத்தப்படும் இணையத்துக்கான விளம்பர வருவாயை சேனல்ஸ் உரிமையாளர்கள் பெறலாம். இதுபோன்ற 15 புதிய சேவைகளை டெலிகிராம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவைகளைப் பெற செலிகிராம் செயலிலையை புதிய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து பயன்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com