கோலிவுட் ஸ்டூடியோ!

கோலிவுட் ஸ்டூடியோ!
ESHAAN GIRRI

கார்த்தியின் அடுத்தடுத்த திட்டங்கள்!

கார்த்தியின் 25-ஆவது படமான 'ஜப்பான்' தோல்விக்குப் பிறகு , அடுத்தடுத்த படங்களான 'மெய்யழகன்' , 'வா வாத்தியாரே' ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனையடுத்து அவர் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் இரண்டாம் பாகத்திலும், 'சர்தார் 2'விலும் நடிக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. அவரது லைன் அப்கள் குறித்த அப்டேட் இனி:

கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' படத்தில் வித்தியாசமான காம்பினேஷனில் நடிகர்கள் இருக்கிறார்கள். வில்லனாக அரவிந்த்சாமியுடன் முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் ஆகியோரும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே வீச்சில் நடந்து முடிந்திருக்கிறது. '96' பிரேம்குமார் இயக்கியுள்ள இப்படம், எமோஷனலான ஒரு கதையாக உருவாகியிருக்கிறது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

'96' கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார். படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதும், அதன் டீசரை வெளியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.

நலன் குமாரசாமியின் இயக்கத்தில் 'வா வாத்தியாரே' படத்தில், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ் எனப் பலரும் நடித்து வருகிறார்கள். கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடிக்கும் போதே, இதன் படப்பிடிப்பும் ஆரம்பித்தது. அதன் பின்னர், இரண்டு ஷெட்யூல் படப்பிடிப்பிற்குப் பின்னர் கார்த்தியும் பிரேம்குமாரின் படத்துக்குச் சென்றார். அதனை முழுவீச்சில் முடித்துகொடுத்து விட்டு, மீண்டும் இதன் படப்பிடிப்பைத் தொடர்ந்தார்.

இதன் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நிறைவடையும் என்கிறார்கள். 'வா வாத்தியாரே' படத்தை முடித்துகொடுத்துவிட்டு உடனடியாக 'சர்தார் 2' படத்துக்கு வருகிறார் கார்த்தி. கார்த்தியின் திரைப்பயணத்தில் தோற்றத்தை மாற்றி நடித்த படங்களின் பட்டியலில் 'சர்தார்' படத்திற்குத் தனியிடம் உண்டு. இதன் வெற்றியைத் தொடர்ந்து 'சர்தார் 2'வைத் தொடங்குகிறார்கள்.

மனம் திறந்த சமந்தா!

'நீ தானே என் பொன்வசந்தம்', 'நான் ஈ', 'கத்தி', 'தெறி', 'மெர்சல்', '24', 'ஜானு', 'காத்துவாக்குல ரெண்டு காதல்', 'யசோதா', 'சகுந்தலம்', 'குஷி' என தமிழ், தெலுங்கு படங்களைத் தாண்டி, தற்போது ஹிந்தி வரை சென்று தனக்கெனத் தனி ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார் நடிகை சமந்தா.

பல்லாவரம் டூ பாலிவுட் வரையிலான அவரது திரைத்துறைப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்ததில்லை. 22 வயதிலிருந்தே கடுமையான உழைப்பு, திறமை, பலப் போராட்டங்கள். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து மீண்டு தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பாட்காஸ்ட் ஒன்றில் பேசி வரும் சமந்தா, தனது திரைத்துறைப் பயணம் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசியதாவது:

'என்னுடைய குழந்தைப் பருவத்தில் நான் சொகுசாக இருந்ததில்லை, நிறைய கஷ்டங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். அதனால், எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துவிட வேண்டும் என்பதில்தான் என் முழு கவனமும் இருந்தது. என்னை நானே ஊக்கப்படுத்திக் கொள்வேன், கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு நானே சொல்லிக் கொள்வேன்.

என்னுடைய 22-23 வயதில் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தேன். அந்த சமயத்தில் இந்தத் துறை பற்றியெல்லாம் பெரிதாக ஏதும் தெரியாது. கடுமையாக உழைக்க வேண்டும், எப்படியாவது சாதித்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் மனதில் இருந்தது. திரைத்துறையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு அதைத் தக்க வைக்க இன்னும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. கடுமையாக உழைத்தால்தான் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். நாம் தொடர்ந்து போராடிக்கொண்டே இருக்க வேண்டும், போராட்டமும், உழைப்பும் மட்டுமே என்றும் நிலையானது'' என்கிறார் சமந்தா.

அஜித் பட டைட்டிலில் அருண் விஜய்!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் 'ரெட்ட தல' என்ற படத்தில் நடிப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே தகவல்கள் வெளியாகின. அது அப்போது நடக்கவில்லை. தற்போது அருண் விஜய்யின் 36-ஆவது திரைப்படத்துக்கு அந்தத் தலைப்பை வைத்திருக்கின்றனர். ஏ.ஆர்.முருகாதஸிடம் உதவி இயக்குநராக வேலைப் பார்த்த 'மான் கராத்தே' இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் இயக்குகிறார். இப்படத்தில் நடிகை சித்தி இத்னானி, தான்யா ரவிசந்திரன் உள்ளிட்டோர் நடிக்க, சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

சென்னையில் நடைபெற்ற டைட்டில் வெளியீட்டு விழாவில் அருண் விஜய் பேசியதாவது:

'படத்தோட கதை எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. நான் எப்பவும் ஒரு பார்வையாளராக உட்கார்ந்துதான் கதை கேட்பேன். அந்த நேரத்தில் என்னை அந்தக் கதை ஆச்சரியப்படுத்துச்சுனா, அந்தப் படத்தைப் பண்ணுவேன். இந்தப் படத்துல ஒரு கூடுதல் ஸ்பெஷல் இருக்கு. 'தடம்' படத்துக்குப் பிறகு இதுல இரட்டை வேடங்களில் நடிக்கிறேன்.

இந்தப் படத்துக்கான தலைப்பைப் பேசும்போது 'ரெட்ட தல'ங்கிற டைட்டில் சொன்னாங்க? இயக்குநர் அந்த ரெண்டு கதாபாத்திரங்களையும் வித்தியாசமான முறையில எழுதியிருந்தார். இந்தக் கதைக்கு அந்த டைட்டில்தான் சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டோம். இந்தப் படத்தை படத்தொகுப்பாளர் ஆண்டனிதான் எடிட் பண்ணப்போறாரு. 'என்னை அறிந்தால்' திரைப்படத்துல நான் ஓடி வர்ற ஒரு காட்சியை இப்போ வரைக்கும் பலர் பாராட்டுறாங்க. அதுக்கு காரணம் எடிட்டர் ஆண்டனி. அவர் டேபிளில்தான் அந்த மேஜிக் நடந்துச்சு'' என முடித்துகொண்டார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் அருண் விஜய் பேசுகையில்,

'தல'ங்கிறது ரொம்பவே பவர்ஃபுல்லான டைட்டில். இந்தத் திரைப்படத்தோட கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு வலிமையான தலைப்பு தேவைப்பட்டுச்சு. இந்தத் திரைப்படத்தோட தலைப்பை 10 வருஷமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வச்சிருந்தார்ன்னு சொன்னாங்க. எங்களுக்காக இந்தத் தலைப்பைக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவிச்சுகிறேன். இந்தப் படத்தோட பர்ஸ்ட் லுக்கை அஜித் பார்த்திருந்தால் நிச்சயமாகப் பாராட்டுவார். இந்த டைட்டிலை பார்த்ததும் அவர் இதை பத்தி யோசிச்சிருப்பார்னு நினைக்கிறேன்''.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com