ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பின்கழுத்து வலி குறைய வழி என்ன?

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பின்கழுத்து வலி குறைய வழி என்ன?

அலுவலகத்தில் அதிக நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதால் எனக்கு பின்கழுத்துத் தண்டுவட வலி ஏற்பட்டு அவதிப்படுகிறேன். அடிக்கடி பின்கழுத்தைப் பிடித்துகொள்ள வேண்டியிருக்கிறது. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ரிப்போர்ட்டில் 'சர்விகல் ஸ்பான்டிலிட்டிலிஸ் சர்விகல் கார்டு காம்பரேஷன்' என்று தெரியவந்துள்ளது. இதற்கு ஆயுர்வேத மருந்து உள்ளதா?

-மாணிக்கியம், சென்னை.

மிகவும் குளிரூட்டப்பட்ட அறையில் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு நீங்கள் குறிப்பிடும் வகையில் பின்கழுத்துத் தண்டுவட வில்லைகளில் ஏற்படும் அழுத்தம் காரணமாக, வலி ஏற்படக் கூடும். கழுத்தைச் சுற்றி மஃப்ளர் அணிந்து கழுத்து வில்லைகளில் குளிர்படாதவாறு பாதுகாத்துகொள்வது நல்லது.

அலுவலகத்தில் உணவு, நீர், செய்கைகள் அனைத்திலும் மிகவும் கவனம் கொள்ள வேண்டும். உணவில் வாயுப் பொருள்களைத் தவிர்த்து, சூடாகச் சாப்பிடுவதையும், குளிர்ந்த நீரைத் தவிர்த்து வென்னீர் அருந்துவதையும், ஒரே இடத்தில் அமர்ந்திராமல் நடுவில் எழுந்து சிறிது உலாவதுவதையும் கணினி முன் அமர்ந்து நெடுநேரம் வேலை செய்பவர்கள் கவனிக்க வேண்டும்.

ஒளவையார் கூந்தல் அல்லது முதியார் கூந்தல், உளுந்து, சித்தாமுட்டி வேர், பூண்டு, சித்தரத்தை, சுக்கு ஆகியவற்றை கஷாயம் வைத்து, பால் சேர்த்தோ அல்லது பால் கஷாயம் செய்தோ சாப்பிட பின்கழுத்துத் தண்டுவடப் பகுதியில் ஏற்படும் வலிகளுக்கு அனுபவத்தில் நல்ல பலனை அளிக்கிறது.

இம்மருந்தைத் தயாரித்து ஏற்கெனவே விற்பனையில் உள்ளதா? என்பதை நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்குப் பதில் ஆம் என்றால் அதன் பெயர் என்ன? என்றெல்லாம் விவரம் கூற வேண்டும். வாஸ்தவத்தில் இம் மருந்து விற்பனையிலுள்ளது என்று பெயரை எழுதினால், லேபில் மாற்றி ஒட்டி 'இதுதான் அது' என்று விற்பதைக் கேட்பதால், இங்கு பெயர் எழுத வாய்ப்பில்லை. அதற்காக மன்னிக்கவும்.

தலையை மெதுவாக மேலும் கீழும் ஆட்டி பின்கழுத்தைச் சுற்றியுள்ள தசை நார்களையும், நரம்புகளையும் தளர்த்தி அதன்பிறகு உங்கள் உடலுக்குத் தகுந்த வகையில், சில மூலிகைத் தைலங்களை, இளஞ்சூடாகத் தடவி, வென்னீர் ஒத்தடம் கொடுப்பதை, மாலையில் வீட்டுக்கு வந்த பிறகு செய்துகொள்வதை வழக்கமாக்கிக் கொண்டால், பின்னாளில் தண்டுவட அறுவைச் சிசிச்சைகளைத் தவிர்க்கலாம்.

மண்டை ஓடும், மூளையும் கனமான பகுதி என்பதால், அவற்றின் கனத்தை கழுத்துத் தண்டுவடம் தாங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், படுக்கையில் படுத்து தலையணை மீது தலையை வைத்துகொள்ளும்போது, கனம் முழுவதும் தலையைத் தாங்குவதால், கழுத்து தண்டுவடத்தில் ஏற்படும் ஓய்வு உங்களுக்கு நல்ல ஒரு நிவாரணத்தை அளிக்கும். அதனால் இரவில் அலுவலக வேலை முடிந்தவுடன் விரைவாக ஓய்வு எடுக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளவும். இரவு உணவையும் இளஞ்சூடாகவே படுப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே முடித்துகொள்ளவும்.

மூக்கினுள் விடும் மூலிகை மருந்துகள் தலையில் தடவிக் கொள்ள மூலிகைத் தைலங்கள், நீராவிக் குளியல், மூலிகைப் பற்றிடுதல் போன்றவை, விடுமுறை நாள்களில் நீங்கள் ஆயுர்வேத ஆஸ்பத்திரியில் செய்து கொள்வது மிகவும் நலம் தரும் முயற்சிகளாகும்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com