உழைப்பு!

உழைப்பு!

தொழிலதிபர் ராம்சேகர், உழைத்து முன்னேறி இன்று சமூகத்தில் ஒர் உயர்ந்த அந்தஸ்துடன் வாழ்பவர். இரண்டு தொழிற்சாலைகளுக்குச் சொந்தக்காரர். உழைப்பவர்களுக்கு ஊதியத்தைத் தாராளமாக வழங்குபவர். ஏழையின் சிரிப்பில் உண்மையிலேயே இறைவனைக் காண்பவர். அவரது ஒரே மகன் மணீஷ். சாதாரண பள்ளிக்கூடம், தேவைக்கு மட்டும் வசதிகள், நல்ல படிப்பு என மணீஷை கண்டிப்புடன் வளர்த்து வந்தார். தனது பணமும், அந்தஸ்தும் மகனைத் தாக்கிவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமுடன் இருந்தார்.

'அப்பா, எனக்கு ஒரு ஸ்கூட்டி வாங்கித் தாங்கப்பா? பள்ளிக்கூடம், டியூஷன் என போவதற்கு வசதியாக இருக்கும்.''

மகனை ஏறிட்டுப் பார்த்த ராம்சேகர், 'ஏன், இப்ப இருக்கிற சைக்கிள் போதாதா?''

'இல்லப்பா, நிறைய பசங்க ஸ்கூட்டியில் வர்றாங்க, அதனால ஆசையா இருக்குப்பா?''

'தேவைக்கேற்பதான் ஆசை இருக்கணும் மணீஷ். அதிக வசதிகள், படிப்பிலிருந்து கவனத்தைத் திசை திருப்பிடும். ஆசைப்படு, அனைத்துக்கும் ஆசைப்படு, ஆனால் அதன் அவசியத்தையும், விளைவுகளையும் யோசித்துப் பார்.''

'.....''

'சரி, உனக்கு ஒரு சின்ன டெஸ்ட். திருடக் கூடாது, பொய் சொல்லக் கூடாது. நீயே ஒரு வேலை செய்து நூறோ இருநூறோ சம்பாதி. உழைப்பின் மதிப்பு அப்போ உனக்குத் தெரியும். அதற்குப் பிறகு ஸ்கூட்டியை பற்றி யோசிக்கலாம்.''

'வேலையா? எனக்கு யாரு, என்ன வேலை தருவாங்க?''

'யோசி. உன் ஃப்ரண்ட் மணிகண்டன் சுண்டல் விற்கறான்னு பாவப்படுவியே? அது ஒன்றும் மட்டமில்லே. உழைப்பு, எந்த வேலைன்னாலும் உழைப்பு..''

மாலையில் இரண்டு மணி நேரம் சுண்டல் விற்பது மணிகண்டனின் வாழ்க்கைப் பிரச்னை. 'ஏழ்மையிலும் கல்வி கற்க வேண்டும்' என்பது அவனது அம்மாவின் ஆசை. மணீஷும் மணிகண்டனும் நெருங்கிய நண்பர்கள். ஜாதி, மதம், பணம் போன்றவை குறுக்கே வந்து பிரிவினை செய்யாத மாணவப் பருவம். மணிகண்டன் தன் கடற்கரை அனுபவங்களை அவ்வப்போது மணீஷிடம் சொல்வான்...

'சுண்டல் தம்பி, இங்க வா?''

குரல் வந்த திசை நோக்கி ஓட்டமும் நடையுமாகக் கால்கள் கடற்கரை மணலில் புதைய விரைந்தான் மணிகண்டன். கையில் எவர்சில்வர் தூக்கு, அதன் காதில் சுருட்டி வைக்கப்பட்டுள்ள தமிழ் தினசரிகளின் செவ்வக நறுக்குகள். தொள தொளவென்று ஒரு அரை டவுசர், வேறு யாருக்கோ தைக்கப்பட்ட அரைக்கை சட்டை, காலில் ரப்பர் செருப்பு. வேகமாக வந்து மண்ணில் மண்டியிட்டு அமர்ந்தான்.

'சுண்டல் என்ன விலை?'' என்று கேட்டவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். உப்பும் மிளகும் கலந்த வண்ணத்தில் கோணலாய் வெட்டப்பட்ட முடி, முழங்கை மறைக்கும் அரைக்கை சட்டை. கால் மடக்கி அமர்ந்திருந்தவர் வெளியூர் மனிதர் என்பது மணிக்குப் புரிந்தது. அனுபவம்!

ஆழாக்கு போன்ற குவளையைக் காட்டி, 'இதுல ஒரு அளவு சுண்டல் பத்து ரூவா'' என்றான்.

'தலை தட்டியா, கும்பாச்சியாவா?'' என்று கேட்டவரை அதிசயமாகப் பார்த்தபடியே மணிகண்டன்'கும்பாச்சியாகவே தர்றேன் சாமி.'' என்றான்.

'ம், பட்டணத்துல எல்லாமே ரொம்ப விலைதான். எங்கூர்ல, பத்து ரூவாய்க்குப் பத்துப் பேருக்கு சுண்டல் செய்துடலாம்!'' என்று தூரத்திலிருந்த சமாதிகளைப் பார்த்து, நடந்து வந்த களைப்பில் பத்து ரூபாய்க் காசு ஒன்றைக் கொடுத்து, சுண்டல் வாங்கிக் கொண்டார். மாலை மஞ்சள் வெயிலில் உட்கார்ந்திருந்த அவரது நிழல், நீண்டு கடல் அலை அருகில் சென்றுகொண்டிருந்தது.

மணிகண்டனோ அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு. தினமும் மாலையில் இரண்டு மணி நேரம் சுண்டல் விற்றால், கையில் நூறோ, இருநூறோ நிற்கும். ஒன்றுக்கும் உதவாத, குடிகார அப்பா. தினமும் வீட்டில் சண்டை. அம்மாவின் சம்பளப் பணத்தைப் பிடுங்க?, அவளுக்கு அடி, உதை. அம்மா செய்து தரும் சுண்டல் விற்றால், ஒரு வேளைக்கு சோறு கிடைக்கலாம். பத்தாம் வகுப்பு போய்விட்டால் சுண்டல் விற்க நேரமிருக்குமோ தெரியவில்லை. பசி வந்துவிட்டால், பத்தாவதும் பறந்து போய்விடுமோ?

'இப்ப எல்லாம் சுண்டலுக்கு மவுசு இல்லே சார். பாப்கார்ன், பிட்சா, பர்கர்னு அட்டை டப்பாவிலே விற்கிறாங்க. வண்டியில ஐஸ் கிரீம், மாங்கா பத்தை, வெள்ளரிப்பிஞ்சு, வறுத்த வேர்க்கடலைன்னு அவங்க வேற ஒரு பக்கம் போட்டி போடறானுங்க. பீச் உள்ள வரும்போதே, வண்டில சூடா மொளகா பஜ்ஜி, மசால் வடைன்னு சட்னியோட சப்ளை பண்றாங்க. எங்க பொழப்பு பேஜாருதான் சார். கடற்கரையே ஒரு 'பாஸ்ட் புட்' மால் மாதிரி ஆயிடுச்சு சார்'' என்று பொழுது

போகாமல், கேள்வி கேட்டுக்கொண்டிருந்த பிரஷ் தலை இளைஞனிடம் சொல்லிக் கொண்டிருந்தான் மணிகண்டன். 'வாய்க்கும் வயித்துக்கும் அல்லாடற பொழப்பு சார்'' என்று சொல்லியபடியே 'தேங்கா.. மாங்கா.. பட்டாணி.. சுண்டல்..'' என்று கூவிச் சென்றான் மணிகண்டன்.

அம்மாவை நினைத்து வருத்தப்படுவான் மணிகண்டன். அன்று காலை கூட, குடிக்கப் பணம் கொடுக்கவில்லை என அம்மாவை அடித்து, உதடெல்லாம் ரத்தம். மதியம் கூட அழுதபடியேதான் சுண்டல் செய்து கொடுத்தது அம்மா. 'நல்லா படிச்சு, வேலை செய்து அம்மாவை நல்லா வெச்சுக் காப்பாற்றணும்' என்று அடிக்கடி நினைத்துகொள்வான் மணிகண்டன்.

மேற்கிலிருந்து விழும் வெயிலின் வெப்பத்திலிருந்து காத்துகொள்ள ஒரு குடை. விரித்த குடையின் பின்னால் குசுகுசுவென பேச்சும், சன்னமான சிரிப்பும் கேட்டது. குடை வெயிலுக்காக இல்லை என்பது மணிக்குத் தெரியும். அவர்களுக்கு முன்னால் திடீரென்று சென்று, 'சுண்டல் வேணுமாக்கா?' என்று மணிகண்டன் கேட்பதில்லை. அது அநாகரீகம் என்பதால் மட்டும் அல்ல, அம்மாவுக்கு செய்து கொடுத்த வாக்கினாலும்தான்.

'லட்சம் ரூபாய் கொடுத்தாலும், குடிகாரனுக்கு சுண்டல் விற்கக் கூடாது' என்பது அம்மாவின் மற்றொரு விதி. வீட்டுக் குடிகாரனை ஒன்றும்செய்ய முடியாததால் எழுந்த விரக்தியில் வந்த விதியது. மணிகண்டனுக்கும் குடிப்பவர்களைக் கண்டால் வெறுப்பே வரும்.

இரு அரசியல் கட்சித் தொண்டர்களிடையே வார்த்தைகள் தடிக்க, கைகள் ஓங்க, அடிதடியாகிப் போனது. அந்த இடம் ஒரு சிறு போர்க்களமானது. காதில் கேட்கக் கூசும் வார்த்தைகள். இரண்டு கட்சித் தொண்டர்களுக்குள்ளும் கை கலப்பு. போலீஸ் இன்னும் வரவில்லை.

தூரத்திலிருந்து பார்த்த மணிகண்டன், கலவரத்துக்கு எதிர் திசையில் சென்றான். அம்மாவின் மூன்றாவது விதி - கூட்டம், கலவரம் செய்பவர்களுக்கு நடுவில் சுண்டல் விற்கக் கூடாது!

மணிகண்டனின் கடற்கரை அனுபவங்களைக் கேட்கக் கேட்க, மணீஷுக்கு வியப்பாக இருக்கும். அவனைப் போலத் தன்னால் இப்படிச் சுயமாக உழைத்து, சம்பாதிக்க முடியுமா? அப்பாவின் குரல் மணீஷின் மனதில் ஒலித்தபடி இருந்தது.

என்ன வேலை செய்வது? அதற்கு, மணீஷுக்கு ஒரு வாய்ப்பு வந்தது! இரண்டு நாள்களாய்ப் பள்ளிக்கூடம் வரவில்லை மணிகண்டன். ஏதோ விஷக்காய்ச்சல் என்று சொன்னார்கள். மணிகண்டனின் வீட்டுக்குச் சென்ற மணீஷ், 'அம்மா, இன்னைக்கு மணிக்கு பதிலா, நான் போய் சுண்டல் வித்துட்டு வர்றேன்மா?''

நெருப்பை மிதித்தவள் போல் மணிகண்டனின் அம்மா பதறி, 'மணீஷ் கண்ணா, பெரிய வீட்டுப் பிள்ளை நீ. உனக்கேன் இந்த வேலை? வேணாம்பா?'' என்றாள்.

'மணிகண்டனைப் போலதான என்னையும் நெனைக்கிறீங்க? அப்ப என்ன தயக்கம்? மணிகண்டன் எனக்கு எல்லாம் சொல்லியிருக்கான். என்னால முடியுதான்னு பார்க்கிறேம்மா. என்னையும் உங்க பிள்ளை மாதிரி நெனச்சீங்கன்னா சுண்டலக் குடுங்கம்மா?''

'வேணாம் மணீஷ், கடற்கரை மணல் சுடும். மனிதர்களின் பார்வையில் ஒரு அலட்சியமும், கேவலமும் தெரியும். நாய்கள் சுத்தி வரும். போலீஸ் லட்டியும் சில சமயம் சுழன்று வரும்'' என்றான் ஈனசுவரத்தில் மணிகண்டன். மணீஷை சுண்டல் தூக்குடன் நினைத்துப் பார்க்கக் கூட மணிகண்டனுக்கு மனமில்லை.

'ஒரே ஒரு சான்ஸ் குட்றா மணிகண்டா. நானும் முயற்சி பண்ணறேன். வாழ்க்கைன்னாலே சவால்தானே?''

கால்பந்து விளையாடிய கடற்கரையில் கையில் தூக்குடன், 'தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல்' என முதலில் குரல் கம்மியும், பின்னால் கதறியும் கூவிக் கொண்டே சென்றான் மணீஷ். ஒவ்வொரு முறையும் மணிகண்டனின் மனதில் இருந்த வைராக்கியமும், வேகமும், வெறியும் தன்னுள்ளும் ஊறுவதை உணர்ந்தான் மணீஷ். 'நன்றிடா மணி, வாழ்க்கை இப்போது புரிகிறது'' மனதுக்குள் சொல்லிக்கொண்டான்.

குடைக்குப் பின்னால் சென்றவன் முதலில் அதிர்ச்சியடைந்தான். உள்ளிருந்த அக்கா கண் காட்ட, அருகிலிருந்தவர், இரண்டு பொட்டலம் சுண்டல் வாங்கிக் கொண்டார். 'ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு குடையும் அதன் பின்னால் கொஞ்சம் நிழலான நினைவுகளும் இருக்கும்போல' என நினைத்தபடி, கடற்கரை மண்ணில் கால் புதைய நடந்தான். படகுக்கருகில் குடித்துவிட்டு, விழுந்து கிடந்தவனைத் தாண்டிச் சென்றான். எத்தனை மனிதர்கள், எத்தனை சுபாவங்கள். ஒவ்வொரு பொட்டலம் விற்கும்போதும் மனதின் ஒவ்வொரு சாளரமாகத் திறந்தது.

'டாய்... வெட்டுடா அவனை..'' என்று கத்தியபடி ஓடி வந்த கும்பலைக் கண்டு மணீஷ் ஒதுங்கும்முன், அவனை யாரோ கீழே தள்ளிவிட, தூக்கில் மீதியிருந்த சுண்டல் மணலில் விழுந்து கலந்தது. துண்டுக் காகிதங்கள் காற்றில் பறந்தன.

சுதாரித்து எழுந்தவன், 'கால் சட்டையில் அதுவரை சம்பாதித்தப் பணம் சரியாக இருக்கிறதா?' என்று தொட்டுப் பார்த்துகொண்டான். முழங்கையிலும், காலிலும் சிராய்ப்புகள் எரிந்தன. காலித் தூக்கை எடுத்துகொண்டு, மணிகண்டனின் வீட்டை நோக்கி ஒருவித மனச்சோர்வுடன் நடந்தான். உழைத்து மணியின் அம்மா செய்து கொடுத்த சுண்டலை வீணாக மண்ணில் கொட்டிவிட்டோமே என்ற எண்ணம் அவனை வருத்தியது.

மணிகண்டனின் அம்மாவுக்கு உடம்பு நடுங்கியது. 'வேணாம்னு சொன்னேனே கண்ணா, இப்படி அடிபட்டுக்கிட்டு வந்து நிக்கறயே'' என்று கண்ணில் நீர் வழிய, சிராய்ப்புகளுக்கு விளக்கிலிருந்து எண்ணை தடவினாள்.

மணீஷ் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து, 'கடைசியில் நான்கைந்து பொட்டல சுண்டல் கொட்டிடுச்சும்மா. அம்பது ரூபா போல நஷ்டம்..'' என்று வருந்தினான் மணீஷ்.

'இல்லப்பா, எப்பவும் கிடைக்கிற லாபத்துல அம்பது ரூபா குறைவு, அவ்வளவுதான்'' என்று சொல்லி தயாராய் வைத்திருந்த பலகாரத்தை மணீஷுக்குக் கொடுத்தாள். சாப்பிட்டபடியே கையிலிருந்த சிராய்ப்பைப் பார்த்தான். வலியோ, எரிச்சலோ இல்லாதது வியப்பாக இருந்தது.

'இந்தாப்பா நூற்றி இருபது ரூபாய். இன்னைக்கு நீ சம்பாதிச்சது..''

மணீஷுக்கு மகிழ்ச்சியாக இருந்தது - முதல் சம்பளம்! ஒரு நிமிடம் மணிகண்டனின் அம்மாவைப் பார்த்தபடி நின்றான் மணீஷ்.

'வேணாம்மா. இது எனக்கு ஒரு அனுபவம், பாடம். இந்தப் பணத்தை மணிக்கு குடுப்பீங்களா இல்ல அவன்தான் கேட்பானா? நான் வேற, மணி வேற இல்லம்மா?'' மறுத்தான் மணீஷ்.

'அப்படியில்லைப்பா. உழைப்புக்கு எப்பவும் மரியாதை செய்யணும். அம்மாவோட அன்பளிப்பா வெச்சுக்கோ?''

தான் பெற்ற முதல் சம்பளத்தை மணீஷ் எடுத்துகொண்டு, தனது தந்தை ராம்சேகரிடம் சென்று அளித்தான். மகனை ஆரத் தழுவிக்கொண்டார். 'மணீஷ் எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா. உனக்கு என்ன கலர் ஸ்கூட்டி வேணும்?''

'வேண்டாம்பா, எனக்கு சைக்கிளே போதும்.''

டாக்டர் ஜெ.பாஸ்கரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com