பாரம்பரியம் காப்போம்...
அண்மைக்காலமாக, உடலுக்கு உறுதி தரும் முன்னோர்கள் வழிவந்த இயற்கை முறை உணவுகளையும், பயன் தரும் பாரம்பரியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் கிராமப்புறங்களில் மட்டுமின்றி, நகர்ப்புற மக்களிடையேயும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், நிம்மதியான உறக்கம் தரும் கயிற்றுக் கட்டில்களை ஏராளமானோர் தற்போது வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட வாழப்பாடியில் நாமக்கல், துறையூர், திருச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் முகாமிட்டு இரு சக்கர வாகனங்கள், சரக்கு ஆட்டோக்களில் கயிற்றுக்கட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் பகுதியைச் சேர்ந்த கயிற்றுக் கட்டில் வியாபாரி வெற்றியாளனிடம் பேசியபோது:
''கிராமப்புறங்களில் கடந்த முப்பது ஆண்டுக்கு முன்பு வரை, வீடுகள்தோறும் தாழ்வாரங்களிலும், விளைநிலங்களிலும் மரச்சட்டங்களால் பூட்டப்பட்டு நார் அல்லது நுôல் கயிற்றால் பின்னப்பட்ட கயிற்றுக் கட்டில்கள் காணப்பட்டன.
பணியை முடித்து வீட்டுக்கு வந்து உணவு உண்டதும், காற்றோட்டமாக வீட்டுக்கு வெளியே கயிற்றுக் கட்டிலில் படுத்து விவசாயிகள் ஓய்வெடுப்பது தனி சுகத்தை தந்தது.
நவீனத்தால் இரும்புக் கட்டில்கள், மரப் பலகை கட்டில்கள், பஞ்சு மெத்தைகளின் பயன்பாடும் அதிகரித்ததால், கயிற்று கட்டில்களின் பயன்பாடு பெருமளவில் குறைந்து போனது.
தற்போது மரச்சட்டம் பூட்டப்பட்ட கட்டில்கள் மட்டுமின்றி, குறைந்த விலையில் கிடைக்கும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்ட இரும்புச் சட்டங்கள் பொருத்தப்பட்ட கயிற்றுக் கட்டில்களை தேடிப்பிடித்து வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால், அவற்றின் உற்பத்தியும் விற்பனையும் பல மடங்கு உயர்ந்து வருகிறது. தற்போது கோடைக் காலம் என்பதால், விற்பனை மேலும் அதிகரித்துள்ளது.
மரச் சட்டங்களைவிட, சதுர, உருளை வடிவ இரும்புக் குழாய்கள், சட்டங்கள் பொருத்தப்பட்ட கட்டில்கள் எடை குறைவு. கையாளுவது எளிது. நீடித்து உழைக்கக் கூடியது என்பதாலும் இதனை பலரும் விரும்புகின்றனர்.
எங்கள் பகுதியில் கயிற்றுக் கட்டில்கள் தயாரிப்பானது குடிசைத் தொழிலாகும். கிராமத் தொழிலாளர்களைக் கொண்டு கயிற்றுக் கட்டில்களை உற்பத்தி செய்து, தமிழகம் முழுவதும் கயிற்றுக் கட்டில்களை கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறோம்.
குறைந்தபட்சம் ரூ.1,500 முதல் அதிகபட்சம் ரூ.3,000 வரை தரத்துக்கேற்ப கயிற்றுக் கட்டில்கள் விலை போகின்றன. இதனால், கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. முன்னோர்கள் பயன்படுத்திய பாரம்பரிய பொருள்களை மீட்டெடுத்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதில் மகிழ்ச்சியே கிடைக்கிறது'' என்கிறார் வெற்றியாளன்.
-பெ.பெரியார்மன்னன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.