

நாற்பத்து எட்டு வயதான எனது வலதுபுற சிறுநீரகத்தில் 18 மி.மீ. கல்லடைப்பு பிரச்னை இருக்கிறது. உடல் சோர்வு, இடுப்பு வலியும் உள்ளன. சிறுநீரகத்தில் சிறிது வீக்கமும் இருக்கிறது. இவை குணமாக ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?
-டி.வசந்தா, கோவில்பட்டி.
சிறுநீரகக் கற்களை உடைத்து சிறுநுண்ணியக் கற்களாக்கி வெளியேற்றக் கூடிய செயலை நெருஞ்சில் விதை, பாஷாணபேதி எனும் கண்பூளைப் பச்சிலை (கல்லுருக்கி) மூலிகைகள் செய்துவிடும் திறனுள்ளவை. வகைக்கு ஐந்து கிராம் எடுத்து அரை லிட்டர் தண்ணீருடன் கலந்து, கொதிக்கவிட்டு கால் லிட்டராகச் சுண்டியதும் வடிகட்டி, அதில் பாதியை காலையிலும், மீதி பாதியை மாலையிலும் வெறும் வயிற்றில் சுமார் மூன்று வாரங்கள் சாப்பிட்டு வர கற்கள் உடைந்து வெளியேறும்.
மண் பானைத் தண்ணீரில் நீர்க் காய்களான பூசணி, வெள்ளரி, புடலை, பீர்க்கு, பரங்கி போன்றவற்றின் விதைகளைப் போட்டு ஊறவைத்து, மறுநாள் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனால் கற்கள் வெளியேறுவதுடன் சிறுநீரகத்தின் செயல்பாடும் மேம்படும். இதைக் குடிக்கும் நாள்களில் உணவில் கால்சியம் எனும் சுண்ணாம்புச் சத்து நிறைந்த பால், முட்டை, புலால் உணவுகளை நீக்க வேண்டும்.
முன்குறிப்பிட்ட நெருஞ்சில் விதை, கல்லுருக்கி மூலிகைகளுடன் விலாமிச்சை வேர், முன்னைவேர், நத்தை சூரி, ஆடாதோடை, அழிஞ்சில், கருங்குறிச்சி, முக்காவேளை (கொழுஞ்சில்), விஸ்வாமித்திர புல், புல்லுருவி, வேழம்புல், சம்பா பயிரின் வேர், ஆற்று நாணல் , ஓட்டுப் புல், கம்பு, வையாழந்தை என்ற பெருவாகை, பெருங்குறும்பை, நீர் ஆரல், வேலிப் பருத்தி, மருதம்பட்டை ஆகிய மூலிகைகளைச் சேர்த்து தயாரித்து விற்கப்படும் அற்புதமான கஷாயம் இருக்கிறது.
காலை, மாலை என இரு வேளை வெறும் வயிற்றில் சாப்பிட, கொழுப்பு, கபம் ஆகியவற்றால் உண்டான மூத்திரக் கடுப்பு, மூத்திரக் கல், வயிற்றுக் கட்டிகள், வாதத்தால் உண்டான இடுப்பு வலி, கல்லடைப்பு, சர்க்கரை வியாதியினால் ஏற்படும் சிறுநீரகப் பாதிப்புகள், நீர்ச் சுருக்கு, சிறுநீர்க் கூட்டல் ஆகிய நோய்களைப் போக்கும்.
பசு நெய்யை உருக்கி, பத்து மில்லி (இரண்டு தேக்கரண்டி அடி) காலை, இரவு உணவுக்கு முன், பின் என இரு வேளைகள் சாப்பிட வேண்டும். இதனால் சிறுநீரகக் கல் கரையும் என்ற மிகவும் சுலபமான சிகிச்சை முறையையும் ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது.
உடலின் உட்புறக் கட்டிகள், கற்கள் போன்றவை உடைந்து வெளியேற பசுவின் சிறுநீர் நல்லதொரு மருந்தாகப் பயன்படுகிறது. சுமார் 15- 20 மில்லி காலை, இரவு உணவுக்குப் பிறகு சாப்பிடலாம். இதன்மூலம் கேன்சர் உபாதைகளும் குணமாவதாக ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.
காலையில் மாவுப் பொருள்களுக்கு மாற்றாக, நீங்கள் பார்லியைக் கஞ்சியாக்கிக் குடிக்கலாம். ஐம்பது கிராம் கொள்ளுக்கு பத்திரட்டி தண்ணீர் சேர்த்து பாதியாக வற்றியதும் வடிகட்டி சிறிது இந்துப்பு கலந்து, ஒரு நாளில் பல தடவை சிறிது, சிறிதாகப் பருகி வர வேண்டும். இதனால், பித்தப் பை , சிறுநீரகக் கல் உடைந்து வெளியேறுவதை அனுபவத்தில் காண்கிறோம்.
(தொடரும்)
பேராசிரியர் எஸ். சுவாமிநாதன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.