வெற்றிக்குப் பின்னால்....

வறுமையை வென்று ஐ.ஏ.எஸ். ஆன கந்தசாமியின் பயணம்
வெற்றிக்குப் பின்னால்....
Published on
Updated on
2 min read

சாதனையாளர்களின் வெற்றிக்குப் பின்னால் பல்வேறு சோதனைகள் இருக்கும். அப்படி ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றுள்ள கந்தசாமியின் வெற்றியும் அப்படிதான்!

விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தையைப் பூர்விகமாகக் கொண்ட சங்கரசுப்புவுக்கு, கைத்தறி நெசவு பரம்பரைத் தொழிலாகும். அவர் திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்பட்ட பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பு ஆலையில் தொழிலாளியாக 1965-இல் சேர்ந்தார். இந்த ஆலைதான் மாதச்சம்பளம் வாங்கும் பல ஆயிரம் குடும்பங்களைச் சார்ந்து பல தொழில்கள் வளர்வதற்கு காரணமாக இருந்தது.

1975-ஆம் ஆண்டு ஏப். 18-இல் சங்கரசுப்பு- மல்லிகா தம்பதியின் மகனாய் பிறந்தார் கந்தசாமி. பிளஸ் 2 படிப்பை மில் எதிரே உள்ள காமராஜர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்தார்.

தன்னைப் போல் ஆலை மேற்பார்வையாளராக கந்தசாமி உருவாக வேண்டும் என்கிற எண்ண ஓட்டத்தில், அவரைஅருப்புக்கோட்டை ஸ்ரீ செளடாம்பிகா பாலிடெக்னிக் கல்லூரியில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி டிப்ளமோ படிப்பில் சேர்த்து விட்டார் சங்கசுப்பு.

தொழிலாளிகளின் வயிற்றில் சம்மட்டி அடியாய் அவ்வப்போது' லே ஆஃப்' என்ற பிரச்னை விழுந்துகொண்டே இருக்கும். இதன் விளைவாக ஆலைத் தொழிலாளிக்கு கிடைத்து வரும் ஊதியத்துக்கு ஆபத்து வந்துவிடும். இந்த வறுமைப் பின்னணியை அனுபவித்து வளர்ந்த காரணத்தால், பாலிடெக்னிக்கில் படிக்கும்போதே அரசு ஊழியராகும் ஆசை ஆழ் மனதில் வேரூன்றி வளர்ந்திருந்தது கந்தசாமிக்கு!

அதனால் படித்துகொண்டே டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயாராகினார். டிப்ளமோ படித்து முடித்ததும், அரசு வேலையில் கடையநல்லூரில் முதன் முதலாகச் சேர்ந்து விட்டார். படிக்கும்காலத்திலேயே கற்பனை உலகில் உதித்த நயமான கவிதைகளை அவ்வப்போது நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது கந்தசாமியின் பிடித்தமானது. மற்றொரு பக்கம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி வாயிலாக, இளங்கலை, இரு முதுகலைப் பட்டங்களைப் பெற்று வாழ்க்கைத்தரம் உயர படிக்கட்டுகளாய் உருவாக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க அலுவலகம் சார்பாக நடத்தப்பட்ட இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி வகுப்பில் திறம்பட பல ஆயிரம் ஏழை மாணவர்களுக்கு பாடங்களைக் கற்பித்தார்.

2008-இல் தான் பயிற்றுவித்த மாணவர்கள் பலருடன், தானும் குரூப் 2 பரீட்சையில் தேர்ச்சி பெற்றார். 2009-இம் ஆண்டு டிசம்பரில் குரூப் - 1 தேர்ச்சி பெற்று, திருவள்ளுர் மாவட்டத்துக்கு உள்பட்ட பொன்னேரி கோட்ட வருவாய் அலுவலராய் பொறுப்பேற்றார்.

2011-12-ஆம் ஆண்டுகளில் அந்தப் பகுதி செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாய் பணியாற்றிய வட மாநில தொழிலாளிகள் 250 பேரை அதிரடியாக மீட்டு, அவர்களைச் சொந்த ஊருக்கு கெளரவத்தோடு அனுப்பி வைத்தார்.

2014-17-இல் பேரிடர் மேலாண்மைத் திட்ட இணை இயக்குநராகவும், மதுரை மாவட்டத்துக்கு உள்பட்ட அலங்கநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குநராகவும், 2018-19-இல் தேனி மாவட்ட வருவாய் அலுவலராகவும் தனித்துவமாய் பணியாற்றினார்.

அடுத்து வருவாய் பேரிடர் மேலாண்மைத் திட்ட துணை ஆணையர் பொறுப்பிலும் தனது திறமையை செயல்வடிவில் காட்டினார். 2019-20-இல் தேசிய நெடுஞ்சாலை ஆணைய திண்டுக்கல் சிறப்பு நிலை கோட்ட வருவாய் அலுவலராய் பொறுப்பேற்றார்.

2020-22 காலகட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்ட மாநில திட்ட மேலாளராகினார். 2024-ஆம் ஆண்டு ஏப்ரலில் தனது கடின உழைப்புக்கு சான்றாக பதவி உயர்வு பெற்று இன்று ஐ.ஏ.எஸ். தகுதி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com