இசை ஸ்பெஷல்!

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி. பிரகாஷ்: இசை உலகின் புதிய சர்ச்சைகள்!
இசை ஸ்பெஷல்!
Published on
Updated on
2 min read

கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோரின் சமீபத்திய பதிவுகள் இங்கே...

சர்ச்சைகளுக்கு இளையராஜா பதிலடி!

அண்மையில் கவிஞர் வைரமுத்து இசையைவிட பாடல் வரிகள்தான் பெரிது என்று பேசியதால், 'இசை பெரிதா, பாடல் வரிகள் பெரிதா' என்ற சர்ச்சையைக் கிளப்பியது. பலரும் பேசியது சமூக ஊடங்களில் வைரலாகி இருந்தது. இதுகுறித்து தொலைகாட்சிகளில் விவாதங்களும் அரங்கேறி வந்தன.

இதற்கிடையில் ரஜினி - லோகேஷ் கூட்டணியில் உருவாகும் 'கூலி' படத்தின் டைட்டில் ரிவீலிங் விடியோவில், இளையராஜாவின் 'வா... வா... பக்கம் வா...' பாடல் இடம் பெற்றிருந்ததற்குக் காப்புரிமை கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதாக கோலிவுட்டில் சர்ச்சை கிளம்பியது.

இதையடுத்து இளையராஜா தன் பாடலுக்குக் காப்புரிமை கேட்பது சரியா, தவறா என்றெல்லாம் பலரும் பேச, அது கோலிவுட்டில் விவாதப் பொருளாக மாறியிருந்தது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் விடியோ ஒன்றைத் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார் இளையராஜா. அதில், 'என்னைப் பற்றிய விடியோக்கள், செய்திகள் தினமும் வருவதை நண்பர்கள் மூலம் தெரிந்து கொள்கிறேன். இவற்றில் எல்லாம் நான் கவனம் செலுத்த மாட்டேன். மற்றவர்களின் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னுடைய வேலையில்லை.

என்னுடைய வேலையில் கவனம் செலுத்துவதுதான் என்னுடைய வேலை. நீங்கள் என்னை இப்படி வாழ்த்திக் கொண்டிருக்கும் சமயத்தில், நான் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்வது, விழாக்களில் பங்கேற்பது என என் வேலையை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் நான் ஒரு சிம்பொனியை கம்போஸ் செய்து முடித்து விட்டேன்.

35 நாள்களில் ஒரு சிம்பொனியை முழுவதுமாக முடித்திருக்கிறேன் என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த மகிழ்ச்சியான செய்தியை என்னுடைய ரசிகர்களுக்கு உற்சாகத்துடன் சொல்லிக் கொள்கிறேன்' என்று கூறியிருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் உருக்கம் !

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆசியாவிலேயே மிகப் பெரிய ஸ்டூடியோ ஒன்றை துபையில் அமைந்துள்ளார். உலகின் விலையுயர்ந்த இசைக் கருவிகள், ரெக்கார்டர்கள், மிக்ஸர்கள், தேவைக்கேற்றவாறு அறையின் உயரத்தையும், அகலத்தையும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமளவுக்கு அதிநவீன வசதிகள் அனைத்தும் அங்கிருக்கின்றன.

ஆரம்பக் காலங்களில் சின்ன ஏ.சி. அறையில் மிக்ஸர்களை வைத்துகொண்டு ஸ்கோரிங், ரெக்கார்டிங் செய்வதற்குக் கூட எதையும் வாங்க முடியாமல் எதிர்காலத்தை இறைவனிடம் ஒப்படைத்துவிட்டு உட்கார்ந்திருந்த ரஹ்மான், இன்று உலகின் மிகப் பெரிய, அதிநவீன ஸ்டூடியோவில் தனது இசை மூலம் எல்லோரின் ஆன்மாக்களை வருடிக் கொண்டிருக்கிறார்.

நாட்டின் இசையை உலக அரங்கில் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த இசைப் பயணம் பற்றிய சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், தனது வாழ்க்கையை மாற்றிய தருணம் பற்றிய நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது, 'நான் முதன் முதலில் ஸ்டூடியோ அமைத்தபோது என்னிடம் சுத்தமாகப் பணமில்லை. ஸ்டூடியோவுக்காக, அம்ப்லிஃபையர், ஈக்குவலைசர் போன்ற அடிப்படையான கருவிகள் வாங்குவதற்குக் கூட அப்போது என்னால் முடியவில்லை. ஏ.சி., செல்ஃப், ரெட்கார்பெட் மட்டும் ஸ்டூடியோவில் இருக்கும். வேறு எதுவும் இல்லாமல், எதையும் வாங்க பணமும் இல்லாமல் உட்கார்ந்திருப்பேன்.

என் அம்மாவின் நகையை அடகு வைத்துதான் முதன்முதலில் ரெக்கார்டர் ஒன்றை ஸ்டூடியோவுக்காக வாங்கினேன். அந்தத் தருணம்தான் என் வாழ்க்கையே மாற்றியத் தருணம். என் எதிர்காலத்தை நான் உணர்ந்த தருணம்' என்று கூறியிருக்கிறார்.

உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் - ஜி.வி.!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், பாடகி சைந்தவி இருவரும் ஒருவரையொருவர் காதலித்து 2013--ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் 'அன்வி' எனும் மகளும் உள்ளார்.

இதனிடையே இருவரும் விவகாரத்துப் பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் 11 வருட காதல் திருமண வாழ்க்கையை இருவரும் முறித்துகொள்வதாக சில தினங்களுக்கு முன் ஜி.வி. பிரகாஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் சமூக ஊடகங்களில் முன்வைக்கபட்டன.

இந்நிலையில் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜி.வி. பிரகாஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். 'புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின்பேரில் ஒரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது.

பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்வுக்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல.

தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது 'யாரோ ஒரு தனிநபரின்' வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா... ஒருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி' என்று அந்தப்பதிவில் குறிபிட்டிருக்கிறார்.

-டெல்டா அசோக்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com