

தலைநகர் தில்லியில் கடுமையான குளிர் நிலவினாலும் அரசியல் உச்சகட்ட உஷ்ணத்தில் இருந்தது. காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் தேவே கெளடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசின் ஆயுள்காலம் நீடிக்கும் என்பதுதான் அதற்கு காரணம்.
ஏனைய கட்சிகளில் நடக்கும் பரபரப்பான நகர்வுகளை பாரதிய ஜனதா கட்சி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. அசோகா ரோடில் உள்ள பாஜக அலுவலகத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளச் சென்றிருந்தேன்.
ஜனா கிருஷ்ணமூர்த்தியின் அறையில் தில்லி பாஜகவின் மும்மூர்த்திகள் என்று அறியப்பட்ட கே.ஆர்.மல்கானி, வி.கே. மல்ஹோத்ரா, மதன்லால் குரானா மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நான் வந்திருப்பதை ஜனா கிருஷ்ணமூர்த்தியின் அலுவலக உதவியாளர் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு காத்திருந்தேன்.
உள்ளே வரச்சொல்வதாக உதவியாளர் தெரிவித்தார். நான் நுழைந்தபோது அவர்கள் அனைவரும் என்னிடம் எதையோ விசாரிக்க விரும்புகிறார்கள் என்பதை ஜனா கிருஷ்ணமூர்த்தியின் வரவேற்பில் இருந்து புரிந்து கொண்டேன். ஜனா என்ன சொல்லியிருந்தார் என்று எனக்குத் தெரியாது.
மல்ஹோத்ரா, மல்கானி, குரானா மூன்று பேருக்குமே என்னை நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக கே.ஆர். மல்கானியுடனான எனது நெருக்கம் சற்று அதிகமானது. அவர் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக பிற்காலத்தில் நியமிக்கப்பட்டபோது அவரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புதுச்சேரியில் பதவியில் இருக்கும்போதே அவர் மறைந்தார் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
அவர்கள் மூவர் மட்டுமல்லாமல், தில்லி பிரதேச பாஜகவின் இன்னொரு முக்கியமான தலைவர் கேதார்நாத் சாஹ்னி. அவர்கள் நால்வருமே ஆர்எஸ்எஸ் பின்னணியில் அரசியலுக்கு வந்தவர்கள். அவர்களில் இப்போதும் இருப்பவர் வி.கே. மல்ஹோத்ரா மட்டும்தான்.
தொன்னூறு வயதைக் கடந்துவிட்ட மல்ஹோத்ராவை இன்றைய பாஜக அநேகமாக மறந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். அவர் ஜன சங்கத்தை வளர்ப்பதிலும், பின்னாளில் பாஜக உருவானபோது தலைநகர் தில்லியில் வலுவான அரசியல் அமைப்பாக அதை உருவாக்குவதிலும் மிகப் பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.
ஐந்து முறை மக்களவை உறுப்பினரா கவும், இரண்டு முறை தில்லி சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்திருக்கும் விஜய்குமார் மல்ஹோத்ரா, 1999 மக்களவைத் தேர்தலில் மிக அதிகமான வித்தியாசத்தில் டாக்டர் மன்மோகன் சிங்கைத் தோற்கடித்தவர் என்பதை குறிப்பிட வேண்டும்.
2014 தேர்தலின்போது, ஓரங்கட்டப்பட்ட
முந்தைய தலைமுறை தலைவர்களில் மல்ஹோத்ராவும் ஒருவர். ஆனாலும்கூட தில்லி பாஜகவின் தேர்தல் பணிக்குழுத் தலைவராக இருக்க சம்மதித்து, ஏழு இடங்களிலும் பாஜகவுக்கு வெற்றி தேடிக்கொடுத்தவர் மல்ஹோத்ரா.
அங்கே இருந்த நால்வருமே காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது என்று என்னிடம் கேட்பார்கள் என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால், அவர்களின் கேள்வி வேறாக இருந்தது.
''தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? நாளை வர இருக்கும் ஜாமீன் வழக்கில் ஜெயலலிதாஜி ஜாமீன் பெறுவாரா, மாட்டாரா? உங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவல் என்ன?'' என்பதுதான் அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தது.
தில்லியில் தங்கிவிட்டதால் தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பது தெரியுமே
தவிர, ஜெயலலிதா ஜாமீன் வழக்கு குறித்து விவரமாக கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் ஜெயலலிதாவின் ஜாமீனுக்காக வாதாடும் வழக்குரைஞர் தாக்கூர் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்தான்.
மல்ஹோத்ராவும், மதன்லால் குரானாவும்தான் அதிகம் பேசினார்கள். கே.ஆர்.மல்கானியும், ஜனா கிருஷ்ணமூர்த்தியும் இடையிடையே சில கருத்துக்களைத் தெரிவித்தனரே தவிர, அதிகமாகப் பேசவில்லை. ஜெயலலிதாவை அதிக நாள் சிறையில் வைத்திருக்க முடியாது என்றும், உச்சநீதிமன்றம் விடுதலை செய்துவிடும் என்றும் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு நான் எனது அலுவலகத்திற்கு வந்தபோது, எனது செய்தி நிறுவனத்தில் இணைந்திருந்த பல தினசரிகளில் இருந்து, ஜெயலலிதா
ஜாமீன் தொடர்பான தகவல்கள் கேட்டு 'பேக்ஸ்' வந்திருந்தன. அடுத்த நாள் நடைபெற இருந்த காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் தேர்தலுக்காகக் காத்திருப்பதா, இல்லை சென்னைக்குச் சென்று ஜெயலலிதா ஜாமீன் வழக்கின் தீர்ப்பைத் தெரிந்துகொள்வதா என்கிற குழப்பம் எனக்கு.
'ஆஜ்' ஹிந்தி பத்திரிகையின் ஆசிரியர் குழு ஆலோசகராக இருந்த சந்திரமோகன்ஜி தொலைபேசியில் அழைத்தார். நான் தில்லியில் இருப்பதாகச் சொன்னபோது அவருக்கு கோபம் வந்துவிட்டது.
''ஜெயலலிதாஜிக்கு ஜாமீன் கிடைத்தாலும் அது செய்தி; ஜாமீன் கிடைக்காவிட்டாலும் செய்தி. அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் உடனடியாக சென்னை திரும்புங்கள்'' என்றார் சந்திரகாந்திஜி.
இன்றைய இணையதள டிக்கெட் வசதிகள் இல்லாததால், பயண முகவர்கள் (டிராவல் ஏஜென்ட்) மூலம் விமான டிக்கெட் வாங்கலாம் அல்லது நேரில் சென்று டிக்கெட் பெற முடியும். தனியார்மயக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததால் புதிதாகப் பல விமான சேவை நிறுவனங்கள் களமிறங்கியிருந்தன. ஆனாலும்கூட 'இந்தியன் ஏர்லைன்ஸ்' மட்டும்தான் சென்னைக்கு அதிக அளவிலான விமானங்களை இயக்கி வந்தது.
சப்தர்ஜங் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள 'இந்தியன் ஏர்லைன்ஸ்' அலுவலகம் சென்று இரவு 12 மணிக்கு சென்னை வழியாக கொழும்பு செல்லும் விமானத்தில் டிக்கெட் எடுத்துக்கொண்டேன். அதில் கட்டணம் சற்று குறைவு.
சென்னை வந்து காலையில் எழுந்தவுடன் நான் உயர்நீதிமன்றத்
தில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்பு குறித்து தொலைபேசியில் நண்பர்களைத் தொடர்பு கொண்டேன். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்கும் என்று அவர்கள் யாருக்கும் நம்பிக்கை இல்லை. அதிமுகவினர் சிலரேகூட மத்திய, மாநில அரசுகளின் அழுத்தம் காரணமாக நீதிபதி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கமாட்டார் என்று கருத்துத் தெரிவித்தனர்.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் குறித்த தரவுகளை கட்டுரை எழுதுவதற்காக ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்தேன். உயர்நீதிமன்றத்துக்கு கிளம்புவதற்கு முன்னால் அவற்றை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தேன்.
ஜெயலலிதா மீது மொத்தம் ஏழு வழக்குகள் போடப்பட்டிருந்தன. அவர் முதலில் கைது செய்யப்பட்டது வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வாங்கிய
குற்றச்சாட்டுக்காக. அடுத்ததாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அவர்மீது போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் விதிமுறையை மீறி ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கியது; மீனா அட்வர்டைஸிங் முறைகேடு; நிலக்கரி இறக்குமதி ஊழல் உள்ளிட்ட வழக்குகள் ஜெயலலிதா சிறையில் இருக்கும்போதே ஒன்றன்பின் ஒன்றாக அவர்மீது போடப்பட்டன.
ப்ளசன்ட் ஸ்டே ஹோட்டல்; மீனா அட்வர்டைஸிங்; வண்ணத் தொலைக்காட்சி பெட்டி தொடர்பான வழக்குகளில் அவருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. வருமான வரி தொடர்பான வழக்கின் அழைப்பாணையும், டான்சி நிலம் வாங்கிய வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தனவே தவிர அவர் கைது செய்யப்பட்டிருக்கவில்லை.
அப்படிப்பட்ட பின்னணியில்தான் உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தொடர்பான வழக்குகள் நீதிபதி சிவப்பாவிடமிருந்து, நீதிபதி வி. ரங்கசாமியின் அமர்வுக்கு மாற்றப்பட்டன.
உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தொடர்பான விசாரணையின் தீர்ப்பு வெளிவரும் நாளில், முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவரது காவல் நீட்டிக்கப்பட்டது. செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயலலிதாவை, காவல் நீட்டிப்பைத் தொடர்ந்து மீண்டும் மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
சிறைச்சாலை வாசலில் காத்திருந்த அதிமுக தொண்டர்களுடன் நானும் நின்றுகொண்டிருந்தேன். ஜெயலலிதாவை சிறைச்சாலைக்கு அழைத்து வந்தபோது அந்த தொண்டர்கள் கதறி அழுததை நேரில் பார்த்த காட்சி இன்னும்கூட என் நினைவில் இருந்து அகலவில்லை. அங்கே இருப்பதில் பயனில்லை என்று நான் உயர்நீதிமன்றம் நோக்கி நகர்ந்தேன்.
கடந்த 28 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்படுமா, இல்லையா என்கிற தீர்ப்புக்காக கட்சித் தலைவர்களும், வழக்குரைஞர்களும், என் போன்ற பத்திரிகையாளர்களும் உயர்நீதிமன்ற வளாகத்தில் நிரம்பி இருந்தனர்.
நிலக்கரி இறக்குமதி ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு இரண்டிலும் ஜாமீன் வழங்கக் கோரியிருந்தார் ஜெயலலிதா. அவரது அமைச்சரவையில் இருந்த எஸ்.கண்ணப்பனும் (இப்போது ஸ்டாலின் அமைச்சரவையில் உள்ள ராஜ கண்ணப்பன்) ஜாமீன் கோரியிருந்தார்.
ஜெயலலிதாவுக்கும், கண்ணப்பனுக்கும் ஜாமீன் அளித்துத் தீர்ப்பு வழங்கினார் உயர்நீதிமன்ற நீதிபதி வி.ரங்கசாமி. அவரது தீர்ப்பு மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் இருந்தது.
''ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான சோதனைகள் முடிந்துவிட்டன என்றும், நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது என்றும் அரசுத்தரப்பு வழக்குரைஞரே ஒத்துக்கொண்டிருக்கிறார். சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பில்லை என்பதும் அவரே தெரிவித்த கருத்து. அவர்மீது போடப்பட்டுள்ள இரண்டு வழக்குகளிலும் புலனாய்வைத் தடுப்பதற்கு வாய்ப்பில்லை. அதேபோல வெளிநாடுகளில் உள்ள சாட்சியங்களை ஜெயலலிதா கலைப்பார் என்கிற தமிழ்நாடு அரசின் அச்சமும் அடிப்படையற்றது'' என்று தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார் நீதிபதி.
''கண்ணப்பன் சாட்சிகளை மிரட்டினார்; ஆவணங்களைத் திருத்தினார் என்கிறது அரசுத் தரப்பு. திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில் பொதுப்பணித் துறை அதிகாரிகளை அவர் மிரட்டவோ, ஆவணங்களைத் திருத்தவோ வாய்ப்பில்லை. முதல் எதிரியான ஜெயலலிதாவும், இரண்டாவது எதிரியான கண்ணப்பனும் ஒரே குற்றச்சாட்டைத்தான் எதிர்கொள்கிறார்கள். ஆகவே இருவரும் ஒரே மாதிரிதான் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் ஜெயலலிதாவும், கண்ணப்பனும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள்'' என்றது நீதிபதி ரங்கசாமியின் தீர்ப்பு.
தீர்ப்பு வெளியானாலும் அதற்கான உத்தரவு மாலை 3 மணிக்கு மேல்தான் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா விடுதலையாகிறார் என்கிற செய்தி காட்டுத் தீபோல பரவியதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். தங்களது தலைவியை சிறையிலிருந்து வரவேற்க ஒரு கூட்டம் காத்துக்கிடந்தது என்றால், அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் உற்சாக வரவேற்பளிக்க அந்தப் பகுதி முழுவதும் தொண்டர்கள் குவிந்துவிட்டனர்.
புதுவை முன்னாள் முதல்வர் டி.ராமச்சந்திரன், அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த திருநாவுக்கரசு (இப்போது திருநாவுக்கரசர்), முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட பல முக்கியமான தலைவர்கள் சிறைச்சாலைக்கு முன்பு காத்திருந்தனர்.
அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த எனக்கு, ஜெயலலிதா விடுதலையானது குறித்து முதல்வர் கருணாநிதி என்ன நினைக்கிறார், என்ன சொல்வார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மேலிட்டது. முதல்வர் கருணாநிதி கோட்டையில் இருந்து அறிவாலயம் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள். அதனால் அவரது கருத்தைத் தெரிந்துகொள்ள அறிவாலயம் விரைந்தேன்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.