கண்டது
(அரூரில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'உன் மேல் வைத்த பாசத்துக்கு எனக்கு கிடைத்த பரிசு கண்ணீர்'
- இரா.வசந்தராசன், கல்லாவி.
(திருச்சியில் உள்ள ஒரு பிரபலமான ரெஸ்டாரண்ட் பெயர்)
' அம்மிக்கல் ரெஸ்டாரண்ட்'
- ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
(திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர் அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
'சான்றோர்குப்பம்'
- கோபி, கிருஷ்ணகிரி
கேட்டது
(சென்னை பூங்கா ஒன்றில் இரு நண்பர்கள்)
'பொண்ணுக்கு டாக்டர் மாப்பிள்ளைன்னு பாத்தா, நகை, ரொக்கம் அதிகமா தானே கேட்பாங்க... இதுக்கு போய் கவலைப்படுறீங்களே!'
'நீங்க வேற... சினிமா, சீரியல்ல டாக்டரா நடிக்கிறவருங்க அவரு?'
-ப.சோமசுந்தரம், சென்னை.
(செங்கல்பட்டு பேருந்து நிலைய டீ கடையில் )
'ஐயா.. சிங்கிள் டீ ஒன்னு..'
'சர்க்கரை எப்படி போடணும்...'
'சர்க்கரை வேண்டாம். என்கிட்ட இருக்கு.
- பொறியாளர் ஜி .அர்ஜுனன், செங்கல்பட்டு.
(திருச்சியில் உள்ளபூங்கா ஒன்றில்..)
'பண்டிகைக்கு சொந்த ஊரா?, உள்ளூரா?'
'ரெண்டுமே இல்லை..?'
'என்ன சொல்றீங்க?'
'ஆதரவற்றோர்இல்லத்துக்குப் போய் கொண்டாடலாமுன்னு இருக்கேன்..!'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
யோசிக்கிறாங்கப்பா!
உண்மையாய் இருந்து பார்- உலகம் புரியும்.
பணமின்றி பழகி பார்- உறவு புரியும்.
நேர்மையாக நட- வாழ்க்கை புரியும்.
-ஜி.மஞ்சரி, கிருஷ்ணகிரி.
மைக்ரோ கதை
மாற்றுத்திறனுடைய தன் மகன் குமரனை, உறவினர்களும், கிராம மக்களும் விமர்சிப்பதைப் பார்த்து வேதனையுற்று, குக்கிராமத்தில் இருந்து தலைநகருக்கு வந்தனர் விமலும், கமலாவும்..!
பல பட்டங்கள் பெற்றிருந்தும் விமலா பணிக்குச் செல்லாமல் மகனை கண்ணும் கருத்துமாய் பார்த்துகொண்டு, மாற்றுத்திறன் பள்ளியில் சேர்த்தார்.
கிரிக்கெட் போட்டியை டி.வி.யில் கண்டு ரசித்த குமரனின் ஆர்வத்தைக் கண்டு, பிரத்யேக பயிற்சிப் பள்ளியில் சேர்த்து பயிற்சி அளித்தனர். உறவினர்களின் தொடர்பில் இருந்தும் அவர்கள் விலகியே இருந்தனர்.
தேசிய போட்டியில் பங்கேற்ற குமரன், ஆல் ரவுண்ட் சாம்பியனாக வெற்றி பெற்றான். பிரபல டி.வி.யில் குமரனின் பிரத்யேக பேட்டியில் விமலும் கமலாவும் ஒளிபரப்பாயினர்.
அவர்கள் வசித்த கிராம மக்கள் பாராட்டு விழாவுக்கு அழைத்துவிட விமலின் வீட்டுக்கு விரைந்துவந்தனர்.
ஆனால், விமல் எதையும் சொல்லாமல், குமரனை அழைத்துவருவதாக உறுதியளித்தான். தற்போது தம்பதிக்கு சாதித்த மனத் திருப்தி இருந்தது.
-தி.பிரவீன்குமார், கே.ஜி.எஃப்.
எஸ்.எம்.எஸ்.
புகழ்ச்சியில் வளர்பவனுக்குதான் பிறர் துணை தேவை.
முயற்சியில் வளர்ப்பவனுக்குத் தன்னம்பிக்கையே துணை.
-முனைவர் ச.உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
அப்படீங்களா!
சாலைகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது.
பெங்களூரில் மழையால் ஏற்படும் நீண்ட தூர வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க பலர் நடைபயணமாகவே செல்கின்றனர். இதனால் பெங்களூரில் ட்ரோன் பயணம் தொடங்கப்பட உள்ளது. பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து எல்க்ட்ரானிக் சிட்டி வரையிலான 52 கி..மீ. தொலைவை வாகனத்தில் கடக்க சுமார் மூன்று மணி நேரம் ஆகும். இதை ட்ரோன் மூலம் வெறும் 19 நிமிஷங்களில் கடக்கும் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்காக சரளா விமான நிறுவனம், பெங்களூரு விமான நிலையத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக ஏழு பேர் வரை பயணம் செய்யும் வகையில் ஒருவருக்கு ரூ.1,700 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1936-இல் தனது 21 வயதில் விமான ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் விமான சரளா தாக்ராலின் நினைவில் இந்தத் திட்டத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.
அறுபது அடி உயரத்தில் இறங்கு தளம் இருந்தால்போதும் அங்கு இந்த ட்ரோனை தரையிறக்கிவிடலாம். நகர்புறங்களில் 20 முதல் 40 கி.மீ. தூரத்தில் செல்லும் பயணங்களுக்கு இந்த ட்ரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டர் பயணத்தைவிட ட்ரோன் பயணம் மிகவும் பாதுகாப்பானது என கூறும் சரளா விமான நிறுவனம் அடுத்த சில ஆண்டுகளில் இந்தப் பயணம் சாத்தியப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
-அ.சர்ப்ராஸ்