
புதிய பங்களாவில் ரன்பீர் - ஆலியா பட்!
ரன்பீர் கபூர், ஆலியா பட் தம்பதி மும்பை பாந்த்ராவில், தங்களது கனவு இல்லமான ரூ.250 கோடியில் 6 மாடி கொண்ட ஆடம்பர அடுக்குமாடி பங்களா கட்டி வந்தனர். இந்தக் கட்டடத்தின் கட்டுமானப் பணியை கபூர் தம்பதியும், ரன்பீர் கபூர் தாயார் நீது கபூரும் கட்டுமானப் பணிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.
'கிருஷ்ணராஜ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பங்களாவின் ஒவ்வொரு மாடியிலும் பெரிய அளவில் ஜன்னல், பால்கனி இருக்கின்றன. பால்கனியில் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளிப்பகுதி வெள்ளை கலந்த கிரே கலர் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. தம்பதியினர் தங்களது மகள் ராஹா பெயரில் பதிவு செய்ய இருக்கின்றனர்.
கட்டி முடிக்கப்பட்டுள்ள பங்களா இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. புதிய வீட்டுக்கு ரன்பீர் கபூர் தனது குடும்பத்தோடு விரைவில் குடியேற இருக்கிறார்.
நடிகை தீபிகா படுகோனேயும் பாந்த்ராவில் அடுக்குமாடிக் கட்டடத்தில் மூன்று மாடிகளை மொத்தமாக வாங்கி இருக்கிறார். அந்த வீடும் விரைவில் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வீட்டுக்கு தீபிகா படுகோனே தனது கணவர் மற்றும் குழந்தையுடன் விரைவில் குடியேற இருக்கின்றார்.
மன அழுத்தம் குறித்து சமீரா ரெட்டி!
நடிகை சமீரா ரெட்டி தமிழ், தெலுங்கு உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். அவர் தொழிலதிபர் அக்ஷய் வார்தே என்பவரை 2014--இல் திருமணம் செய்து கொண்ட பிறகு சொந்த வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். அந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.
சமீரா ரெட்டி ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கேற்று தனது பிரசவக் கால அனுபவங்கள், தான் சந்தித்த நெருக்கடிகள் குறித்து கூறுகையில்,
'நான் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பமாக இருந்தபோது, எனது உடல் எடை 105 கிலோவாக அதிகரித்தது. இதனால் பிரசவத்துக்குப் பிறகு ஓராண்டு வீட்டை விட்டு வெளியில் செல்லவில்லை. எனவே எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. எனது மருத்துவர்தான் நான் மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வர உதவினார்.
அப்போது, எனது கணவர்தான் மகனுக்கு உடைகள் மாற்றுவது, சாப்பாடு கொடுப்பது போன்ற வேலையில் ஈடுபட்டார். இந்த விவகாரத்தில் பெண்களுக்கு அதிக விழிப்புணர்வு தேவை. நான் நடிப்பை கைவிட்ட போது என்னிடம் ஏன் கைவிடுகிறாய் என்றோ அல்லது என்ன ஆனது என்றோ யாரும் என்னிடம் கேட்கவில்லை. ஆனால் அத்துறை அப்படிப்பட்டது என்பதால் நானும் அதனை கண்டுகொள்ளவில்லை' என்றார்.
கரோனா காலத்தில், சமீரா ரெட்டியின் இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது. கடைசியாக சமீரா ரெட்டி வரதநாயகா என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் 2013-ஆம் வெளியானது.
விசாரணை வளையத்தில் தமன்னா!
'ஹெச். பி. இசட். டோக்கன்' எனும் மொபைல் செயலி பிட்காயின், கிரிப்டோகரன்ஸி முதலீடுகள் என்ற போலி விளம்பரம் மூலம் பலரை ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில், பிரபல நடிகை தமன்னா கலந்துகொண்டதாகவும், அதற்காக அவருக்கு ஒரு தொகையும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்கின்றனர்.
எனவே அமலாக்கத் துறையும் தமன்னாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அஸ்ஸாம் மாநிலத்துக்கு உள்பட்ட கௌஹாத்தியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா தனது பெற்றோருடன் அண்மையில் ஆஜரானபோது, இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரத்தில் தமன்னா மீது வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இந்த வழக்கில் இதுவரை 76 சீன நிறுவனங்கள் உள்பட மொத்தம் 299 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களிடம் பண மோசடி செய்வதற்காகவே இந்தச் செயலி பயன்படுத்தப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்சார் மீது கங்கனா பாய்ச்சல்!
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்த 'எமர்ஜென்சி' படம் அக்டோபர் 6-இல் படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் சென்சார் போர்டு சான்றிதழ் கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. இதுதொடர்பாக கங்கனா ரனாவத்துடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்த ஜீ டிவி நிர்வாகம் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தபோது சென்சார் போர்டு வழக்குரைஞர் அபினவ் சந்திரசூட், 'எமர்ஜென்சி படத்தில் 13 இடங்களில் திருத்தம் செய்யும்படி கேட்டுள்ளோம். அதில் 4 இடங்களில் வெட்டும்படியும், 3 இடங்களில் திருத்தம் செய்யும்படியும், 6 இடங்களில் புதிதாகச் சேர்க்கும்படியும் கூறி இருக்கிறோம். இதனை செய்து முடித்தால் படத்துக்கு 'யு.ஏ. சான்று' கொடுக்கப்படும்.
சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடுவது, காலிஸ்தான் போன்றவற்றை அகற்றும்படி கூறி இருக்கிறோம். சஞ்சய் காந்தி- ஜெயில் சிங் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் சில வார்த்தைகளில் திருத்தம் செய்யும்படி கூறி இருக்கிறோம். சீக்கிய அமைப்புகள், கோர்ட் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் போர்டு முடிவை எதிர்த்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்' என்று தெரிவித்தார்.
திருத்தங்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள கங்கனா ரனாவத் அளித்த பேட்டியில், 'சென்சார் போர்டு தெரிவித்த சில பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருக்கிறது. அவர்கள் சொல்லும் சில திருத்தங்கள் நியாயமற்றதாக இருக்கிறது. படத்தின் நம்பகத்தன்மையை பாதுகாக்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம். படத்தை பார்த்த வரலாற்று ஆய்வாளர்கள், மறு ஆய்வு கமிட்டி பாராட்டி இருக்கின்றனர்.
உண்மைத் தன்மையில் இருந்து ஒரு சதவீதம் கூட விலகவில்லை என்று தெரிவித்திருந்தனர். இப்படத்துக்காக நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.