தேரு பார்க்கப் போறோம்

களத்தூர் பெருமாள் கோயில் தேர்த் திருவிழா. தேருன்னா அதுதாங்க தேர். திருவிழான்னா அதுதாங்க திருவிழா.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
8 min read

களத்தூர் பெருமாள் கோயில் தேர்த் திருவிழா. தேருன்னா அதுதாங்க தேர். திருவிழான்னா அதுதாங்க திருவிழா.

எங்க கிராமத்துலேருந்து களத்தூர் நான்கு மைல் தூரம்தான். நானும் என் மனைவி உஷாவும், பிள்ளைகளோட கிளம்பணுன்னு விடியற்காலை அஞ்சு மணிக்கெல்லாம் விழிச்சிட்டோம்.

மூத்தவன் நாலு வயசு கதிரேசன். ரெண்டாவது ரெண்டரை வயசு சரோசா. மூணாவது மீனுக்குட்டி. போன மாசம்தாம் அதுக்கு ஒரு வயசு ஆச்சு. அது அழுதுகிட்டே அவங்க அம்மா இடுப்போட ஒட்டிக்கிட்டிருக்கும். காலையில அது முழிச்சுக்கிறதுக்கு முன்னாடியே என் மனைவி களியோ, கூழோ செஞ்சுடணும். புண்ணியவதி மீனுக்குட்டி முழிச்சுகிட்டா அவளோதான். விடிஞ்சுது.

என் மாமன் டி.ராஜேந்தர் ரசிகர். என் பொண்டாடிய அவரு பொண்டாட்டி புள்ளை பெறும்போது களத்தூர் கமலா சினிமா தியேட்டரில்'உயிருள்ளவரை உஷா' படம் ஓடிக்கிட்டிருந்துச்சாம். அந்த நெனப்புலதான் என் பொண்டாட்டிக்கு உஷான்னும் பேரு வெச்சாங்களாம்.

உஷான்னு பேர் வைத்தால் மட்டும் ஹீரோயினியாக போறாளா என்ன? கருப்புத் தோல்தான். சாயம் போன சீட்டி பாவாடை தாவணிதான். நாலாங்கிளாஸ் ஃபெயில். மாடு, கன்னு மேய்ச்சுக் குடுத்து சாணி அள்ளிப் போடுற வேலைதான்.

எப்படா பதினெட்டு வயசாகும்னு காத்துக் கிடந்த என் மாமன், மூட்டை முடிச்சு ஏத்தி எறக்கிக் கூலி வேலை பார்த்துக்கிட்டிருந்த என்னை மடக்கி வெள்ளை வெளேர்னு ஒரு செட்டு வேட்டியும் சட்டையும் குடுத்து எங்கூரு கன்னியம்மா கோயிலுக்கு கூட்டின்னு போயி கட்டுறா தாலியன்னுட்டாரு.

உஷா கல்யாணத்தன்னிக்கு ரோஸ் கலர் சேலையும் நீலக் கலர் பிளவுசும் பச்சைக்கலர் கண்ணாடி ரப்பர் வளையலும் குலுங்க சோக்காத்தான் இருந்தா? அன்னிக்கு மட்டும் அவ தலைக்கு வேப்பெண்ணெயைத் தடவாம தேங்காய் எண்ணெயை தடவிச் சீவிவிட்டு, செகப்பு கலர்ல பளபளன்னு ரிப்பன் வெச்சிப் பின்னியிருந்துச்சா. அன்னிக்கு ஃபுல்லா நான் ஒரு மாதிரிதான் இருந்தேன்.

உஷாவுக்கு கால் பவுனில் தாலியும், வெள்ளிக்கொலுசும் செஞ்சு போட்ட என் மாமன், என் கையில் ஒரு இரண்டாயிரம் ரூபாயை அமுக்கி “வெச்சிக்கடா மாப்ளேன்னாரு?

அப்பன் ஆத்தா இல்லாத பயலுக்கு இந்தப் புண்ணியவானை விட்டா யாரு பொண்ணு கொடுப்பாங்க?

'சந்தோசம் மாமா'ன்னு விழுந்து கும்பிட்டுட்டு உஷாவை அழைச்சுக்கிட்டு என் குடிசைக்கு நடையைக் கட்டினேன்.

நல்ல வேளை,குடி பழக்கமோ?, பீடி சிகரெட்டோ எனக்கு ஒத்துக்காது. மாமன் குடுத்த ரெண்டாயிரம் ரூவாய் ரெண்டு வாரத்துக்கு வந்தது.

நானும் உஷாவுமா ரெண்டு சினிமாவுக்கு போனோம். புதுப் பொண்டாட்டிக்கு சினிமா தியேட்டரில் ஒரு கலரு, முறுக்கு இதெல்லாம் வாங்கித் தராம இருக்க முடியுங்களா? சினிமாவுக்கு மட்டும் போகாம இருந்திருந்தா அந்தப் பணம் இன்னும் ரெண்டு நாளு வீட்டுச் செலவுக்கு வந்திருக்கும்.

அடடே. எங்கியோ ஆரம்பிச்சு எங்கியோ வந்துட்டேன் இல்லை? நமக்கு வேண்டியது களத்தூர் தேர் பார்க்குறதுதானே?

இதோ கௌம்ப வேண்டியதுதான் பாக்கி.

என் பொண்டாட்டி உஷா நாலாம் கிளாஸூ ஃபெயிலுன்னு சொன்னேன் இல்லையா? நான் மூணாங்கிளாஸ் பாஸ். ஆனா, நாலாங்கிளாஸ் போக மாட்டேன்னு எங்கப்பன்கிட்டே அடம் புடிச்சு வீட்டுலேயே உட்காந்துட்டேன்.

அப்பனும் ரெண்டு, மூணு தரம் அடிச்சு உதைச்சுப் பாத்துட்டுப் போடான்னு விட்டுட்டாரு. அப்புறம் ஆத்தா என்ன செய்யும்? ரெண்டு பேரும் வேலைக்குக் கிளம்பினதும் நான் என் நண்பனுங்க கூட அந்தந்த சீஸனுக்கு ஏத்தாப்போல மாங்கா, புளியம்பழம்னு அடிக்கப் போயிடுவேன்.

அப்பன், ஆத்தாளுக்கு எல்லா நாளும் வேலை கெடைக்குமுன்னு சொல்ல முடியாது. எங்களுக்கும் எல்லா நாளும் அரிசிச் சோறு கெடைக்கும்னும் சொல்ல முடியாது. ரேஷன் அரிசி பத்துப் பதினஞ்சி நாளைக்குத்தான் வரும். அதுக்குப் பொறவு கூழுதான், கஞ்சிதான், களியுருண்டைதான்.

எங்கியாவது கலியாணம், காதுகுத்து, கோயில் திருவிழாவுன்னு தகவல் வந்தா மொதல்ல போய் நிற்போம். வேற எதுக்கு, நல்லதா சாப்பாடு, பிரசாதம் எதுனா கிடைக்கும்னுட்டுதான். இப்போ நான் என் குடும்பத்தோட களத்தூர் தேருக்கு ஏன் போறேன்னு நீங்களே டக்குனு சொல்லிடுவீங்கதானே? சரி.

அந்தக் களத்தூரு இருக்குதே, அது ஒரு பொன் விளையுற பூமிங்க. நானும், உஷாவும்கூட கதிரறுப்பு வேலை, களத்துமோட்டு வேலைன்னு அப்பப்போ அந்தூருக்குக் கூலி வேலைக்கிப் போயிருக்கோங்க?

பெருமாள் கோயில் பத்துநாள் திருவிழாதான் அந்த ஊர்லயே பெரிய திருவிழா. எட்டாம் நாள் தேர்த்திருவிழா அன்னிக்குக் கூடற கூட்டம் ரொம்பவும் அதிகம்தான்.

விடியற்காலையில கருணாகரசாமி கோயிலில் புறப்பட்டு ஜிங்கு ஜிங்குன்னு நடைபோட்டு தாரை தப்பட்டை மேளதாளத்தோட கோயில், குளம், மாடவீதி எல்லாம் சுத்திக்கிட்டு வந்து சூரியன் கிளம்புறதுக்கு முன்னாடி தேரு மேல ஜம்முனு குந்திடுவாருங்க?

ராவுகாலம், எமகண்டம் பாத்து, நல்ல நேரம் வந்ததும் பூசணிக்காய் திருஷ்டி சுத்திப்போட்டு கற்பூரம் ஏத்தி அந்தத் தேர் கிளம்புறதுக்குள்ள ரெண்டு பர்லாங் நீளத்துக்கு இருக்கிற தேரடித்தெரு முச்சூட கூட்டம் நிறைஞ்சுடும்ங்க? நிறைய பேருக்குத் தேர் வடத்துல கைவெக்கக் கூட இடம் கிடைக்காது.

பலூன், ஊதல், ஜவ்வு மிட்டாயி, பஞ்சு மிட்டாயி, பொம்மைங்க அது இதுன்னு ஏகப்பட்ட பேரு கடை போட்டிருப்பாங்க? அதெல்லாம் வேணும்னு பசங்க ஒரு பக்கம் அழுவும். ஒரு சிலரு பசங்க கேட்டதையெல்லாம் வாங்கிக் குடுப்பாங்க? நெறையா பேரு 'தா, பேசாம வா' அப்படின்னு கொளந்தைங்கள தரதரன்னு இளுத்துக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க?

இதையெல்லாம்விட ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் இருக்குது. ஐம்பது அடிக்கு யாராவது ஒருத்தரு நின்னுக்கிட்டு அண்டா நிறைய நீர்மோர், பானகம், சர்பத்துன்னு ஏதாவது ஒண்ணை வெச்சுக்கிட்டு கிளாஸ் கிளாஸா எடுத்துக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க?

இன்னும் கொஞ்சம் தள்ளி தேரடித் தெரு நடுவிநாயகர் கோயில்கிட்டே ஒரு சரக்கு ஆட்டோவுல புளிசாதத்தை வைச்சுக்கிட்டுப் பேப்பர் தட்டுல அள்ளிப் போட்டு “வா, வா”ன்னு ரெண்டு பேரு கூவிக் கூவிக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க?

இன்னும் கொஞ்சம் தள்ளி தயிர் சாதம், எலுமிச்சம் சாதமெல்லாம் கூடக் கொடுப்பாங்க? அதிர்ஷ்டம் இருந்தால் வெல்லம், முந்திரியெல்லாம் போட்டு சர்க்கரைப் பொங்கல் கூட கிடைக்கும். தேரு கௌம்பி தேரடித்தெரு, செட்டித் தெரு, ராஜாஜி தெரு, பஜார்

வீதின்னு சச்சதுரமா நாலு தெருங்களையும் சுத்தி முடிச்சுத் தேர்முட்டிக்கு அந்தத் தேரு வந்து சேர்றதுக்கு

சாயந்திரம் தேர் பள்ளம் மேட்டுல மாட்டிக்கிட்டுக் கிளம்பத் தாமதம் ஆச்சுன்னா, ராத்திரி ஏழு மணி கூட ஆயிடும். அது வரைக்கும் தேர் வர்ற வீதிங்களிலே யாராச்சும் ஏதாச்சும் பிரசாதம், ஜூஸூன்னு குடுத்துக்கிட்டே இருப்பாங்க? புண்ணியவானுங்க அவுங்களெல்லாம் நல்லா இருக்கணும்.

உள்ளூர்க்காரவங்களும், ஊர்ப்பெரிய மனுசனுங்களும், அவுங்க வீட்டுப் பசங்களும் இந்தப் பிரசாதம், ஜூஸூ இதுக்கெலாம் அடிச்சுக்கவே மாட்டாங்க? எங்களைப் போல வெளியூர்க்காரங்க, அதிலும் பஞ்சத்துல அடிபட்டவங்கதான் அந்த ஒரே நாளுல எவ்வளவு கெடைச்சாலும் வாங்கித் தின்னு எங்க வயித்தையெல்லாம் ரொப்பிக்கணுனு ஆசைப்படுவோம். இந்த நாளை விட்டுட்டா அப்புறம் அடுத்த வருஷம்தானே இதெல்லாம் கெடைக்கும்?

சின்ன வயசுல இந்த ஒரு விஷயத்துக்காகவே, என் சேக்காளிங்களோட வருஷா வருஷம் களத்தூருக்குப் போய் பிரசாதம் எல்லாம் நல்லா வாங்கித் தின்னுட்டு, ஊரு திரும்பும்போது, 'டேங்க்ஸ்பா சாமி' ன்னு கருணாகரப் பெருமாளுக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வருவேன். இப்போ நாலஞ்சு வருஷமா பொண்டாட்டி புள்ளிங்களோட போய் வாரேன். அதுதான் வித்தியாசம்.

என்னடா இது, வருஷத்து ஒரு தரம் கிடைக்குற பிரசாதத்துக்காகவா இப்படி ஊர் விட்டு ஊர் போவணும்னு நெனைக்குறீங்களா? வருஷத்துல முக்காலேமூணுபங்கு நாளைக்குக் களியும் கூழும் தின்னறவுங்களுக்குப் புளிசாதமும், தயிர்சாதமும் கெடைக்குதுன்னா அம்பது மைல் தாண்டிக்கூட போவலாம் சார்.

அஞ்சு மணிக்கெல்லாம் கிளம்பணூன்னுதான் பேச்சு. உஷா எங்கக் கிளம்புறா? குழந்தைங்க மூணுத்துக்கும் ஆளுக்கு ஒரு பிஸ்கெட்டை கொடுத்துப்புட்டு அவ பாட்டுக்கு டிரெஸ் பண்ணிக்கிட்டிருக்கா? வளைகாப்புக்கு அவங்கம்மா வூட்டுல வாங்கிக் கொடுத்த வாடாமல்லி கலர் சேலையை டிரங்குப் பெட்டியிலேருந்து எடுத்து இப்புடியும் அப்புடியும் பார்த்து மயங்குறாளே தவிர சீக்கிரமா டிரெஸ் செஞ்சுக்கிட்டு கிளம்ப மாட்டேங்குறா?

ரோட்டோரக் குழாயடியில பல்லு விளக்கி, முகம் கழுவிக்கிட்டு நான் எப்பவோ ரெடியாயிட்டேன். இவ என்னடான்னா இன்னும் பொடவையே மாத்தலை.

'டியேய், உன்ன மாதிரி பட்டிக்காட்டுப் பொண்ண அந்தத் திருவிழாவுல எவண்டி பாக்கப் போறான்? எதையாவது ஒண்ண சீக்கிரமா கட்டிட்டு வாடி. சித்திரை மாச வெய்யிலு சுர்ருன்னு கௌம்பறதுக்குள்ளே கொளந்தைங்களை அழைச்சுக்கிட்டுப் போவணும்'ன்னு சவுண்டு வுட்டேன்.

'ஆங். நா என்ன நாலு பேரு என்னை மொறைச்சுப் பாப்பாங்கன்னா வரேன்? நீ வேணா கௌம்பிப் போயேன். நானும் கொளந்தைகளும் வூட்லயே கெடக்கோம்' ன்னு முறைக்கறா உஷா.

'அடியேய், ஒனக்கும் எனக்கும் ரோஷம் எதுக்குடி? வருஷம் ஒருக்கா கெடைக்குற அந்தப் புளிசாதம், தயிர்சாதம், சக்கரைப்பொங்கல் எல்லாம் நாமளும் நம்ம கொளந்தைங்களும் சாப்புட வேணாமா? சர்தான் கௌம்புடி..'- என்னு இன்னொரு தரம் சவுண்டு விட்டேன். கழுத்தை நொடிச்சுகிட்டுக் கிளம்பினாள் உஷா.

வாசக் கதவை சாத்திக் கொக்கியைப் போட்டேன். என்னது, வாசக் கதவைப் பூட்டலையான்னு கேக்கறீங்களா? ஆமா கூலிக்கு வேலை செய்யுற எங்க வீட்டில் ஒரு திருடன் வந்து எடுத்துப் போறதுக்கு இங்க என்ன இருக்கு? அதையும் மீறி இந்த வூட்டுக்குள்ள நுழையறவன் எங்களை வுட பஞ்சப் பரதேசியாத்தான் இருப்பான். அப்புடியும் நுழைஞ்சான்னா மிச்சம் மீதி இருக்குற ரேஷன் கடை புழுங்கலரிசியயை எடுத்துக்கிட்டுப் போயி கஞ்சி வெச்சிக் குடிச்சிக்கட்டும்.

சரோசாக்குட்டியைத் தூக்கித் தோளு மேல வெச்சிக்கிட்டு, 'டே, கதிரேசா, அங்கல்லாம் ஒரே கூட்டமா இருக்கும், அப்பா கைய உட்டுறக் கூடாது சரியா'ன்னு சொல்லிட்டு என் பையனோட பிஞ்சுக் கையைப் புடிச்சிக்கிட்டு நடக்க ஆரம்பிச்சேன். உஷா இடுப்புல மீனாக்குட்டி வழக்கம் போல, கத்திக்கிட்டு வருது.

இதோ எனக்கு முன்னாடியே எங்க க்காரங்க சில பேரு குடும்பம் குடும்பமா திருவிளா பாக்க போய்க்கிட்டிருக்கானுங்க. எல்லாம் என்னை மாதிரி பிரசாதத்துக்குக் காஞ்சு போனவங்கதான்.

யோசிச்சுக்கிட்டே நடக்கும்போதே என் மகன் கதிரேசன் திடீர்னு, 'யப்போவ், எனக்கு பலுகுண்டு வாங்கிக் குடுப்போவ்'ன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.

'அடக் கெரகமே, இதை நான் மறந்தே போயிட்டேனே.'

மத்த நாளுல பத்து ரூவாய்க்கு பலூனு விக்கிறவன் திருவிழாவுல இருவது முப்பதுன்னு சொல்லுவானே. கதிரேசனுக்கு மட்டும் வாங்கிக் குடுத்தா ஆவுமா? சரோசாக்குட்டியும் எனக்கு ஒண்ணு வாங்கிக்குடுன்னு கேக்குமே? இதுகளைப் பாத்துட்டு அந்த மீனுக்குட்டி எதுனாச்சும் சொல்லுமே. அது வாயில ஒரு சாக்கலேட்டையாவது வாங்கி அடைச்சாதானே?

சட்டை பாக்கெட்டுல கை விட்டுப் பாத்தேன். ரெண்டு பத்து ரூபாயும் சில்லறையா ஒரு பன்னெண்டு ரூவாயும்தான் இருந்துச்சு.

'அடியேய், ஓம் முந்தானியில எதாச்சும் முடிஞ்சு வெச்சிருக்கியாடீ'ன்னு கேட்டா உஷா உர்ருன்னுவா?

'கொஞ்சம் இருடீ, வூடு வரைக்கும் கொஞ்சம் போயிட்டு வந்துர்றேன்..'

'ஏன் ஏதுக்கு?'

'துட்டு ஏதாச்சும் இருக்குதான்னு பீராய்ஞ்சுக்கிட்டு வர்றதுக்குத்தான்.'

'வீட்டுல ஏதாச்சும் இருந்தா இப்பிடி வெறுமே தாப்பா போட்டுட்டு வருவோமா? நீ ஒண்ணும் வூட்டுக்குப் போயி பீராய வேணாம். இந்தா?' என்று தன் முந்தானியில் இருந்து முழுசா ஒரு அம்பது ரூவா நோட்டை உருவிக் கொடுத்தாள் உஷா.

'இது ஏதுடீ. இவ்ளோதானா, இன்னும் ஏதாச்சியும் பதுக்கி வெச்சிருக்கியா?'

'ஆங். நல்லா வாயில வந்துரும் எனுக்கு. திருவிழாவுக்கு போவப் போறோமேன்னு மிந்தாநாளு ரைஸ்மில்லுல கெடைச்ச கூலியில கொளந்தைங்களுக்கோசரம் ஒரு அம்பது ரூவாயை அப்புடியே முடிஞ்சு வெச்சேன்யா?'

'சபாஷ்டீ என் உஷா குட்டி..'

'ஊங். உஷா குட்டியும் வேணாம்.., ஒண்ணியும் வேணாம். என்ன, நாலாவதுக்கு அடி போடுறியா? இந்த மூணுத்துக்கே சோறு போட்டுக் காப்பாத்த மூச்சு வாங்குது. சும்மா கம்முனு வாய்யா?'

'என்னாடா மாப்ளே, திருவிழாவுக்குக் குடும்பத்தோட கிளம்பிட்டியா?'ன்னு எங்கிட்டே கேட்டுட்டு ஊர்ப்பெரிசு தன் பொண்டாட்டியோட கையப் புடிச்சுக்கிட்டு நடக்க முடியாம நடந்து போவுது. கண்ணுல எவனைப் பாத்தாலும் மாப்ளேன்னு கூப்புடுற இந்தக் கௌவனும் கௌவியும் கம்மாக்கரையில ஆடுங்கள மேய வுட்டுட்டு நாலு பேருக்குப் புரியாத மாதிரி என்னாமா கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாங்க தெரியுமா? ரெண்டுத்துக்கும் வயசு அறுவதுக்கு மேல இருக்கும். எத்தனியோ வாட்டி நானே பாத்திருக்கேன். அதுங்களுக்கு நாங்கல்லாம் எவ்வளவோ தேவலை.

முந்தியெல்லாம் எங்கூர் எல்லையிலேருந்து பார்த்தாலே பெருமாள் கோயில் கோபுரம் பளிச்சுனு தெரியும்.

இப்போ என்னடான்னா பைபாஸ் ரோட்டுக்கு மேம்பாலம் கட்டறோம்னு லாரி லாரியா மண்ணும் கல்லும் வந்து எறக்கி மலை போலக் குவிச்சு வெச்சிருக்காங்க?

நிறைய வாழைத்தோப்பு வெற்றிலைத் தோட்டமெல்லாம் இந்த பைபாஸ் ரோட்டுல அடிபடுது. இந்த மண்ணுல வெளையற வெற்றிலை கும்பகோணம் வெற்றிலையைத் தூக்கி அடிக்கும். என்னா பண்ணுறது, ரோடு, பஸ்ஸூ, எலக்ட்ரிக் லைட்டு எதுன்னாலும் அது கிடைக்குறதுக்கு ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்குதே.

எல்லாம் சரி. மேம்பாலம் வேலைக்குக் கொட்டிக்கிடக்கிறதையெல்லாம் சுத்திக்கிட்டுப் போனாத்தான் இப்பல்லாம் கோபுரம் கண்ணுக்குத் தெரியுது.

இங்கேருந்து களத்தூர் ரெண்டு கிலோமீட்டர்தான்.

'யப்போவ், காலு வலிக்குது'ன்னு கதிரேசன் குரல் கொடுக்கறான். 'பாவம், கொளந்த எவ்ளோ தூரம் நடக்க முடியும்' என்று சொல்லிட்டு, அவனையும் தூக்கி ஒரு பக்கம் தோளுல வெச்சிக்கிட்டு வேகமா நடக்க ஆரம்பிக்கிறேன்.

மணி எப்படியும் ஆறரை இருக்கும். சூரியன் இப்பவே சுள்ளுங்குது. விர்வையினாலே வேட்டி, சட்டைக்குள்ள கசகசன்னு இருக்குது. வீடு திரும்ப சாயந்திரமாவும். அது வரைக்கும் என்ன பண்ணுறதோ தெரியலையே.

உஷாவுக்கு என்ன மாதிரி வேகமா நடக்க முடியலே. பாவம், நாலே வருஷத்துல அடுத்தடுத்து மூணு பெத்துப்போட்ட ஒடம்பு. கொளந்த மீனுக்குட்டி வேற இடுப்புல கெடந்து கத்திக்கிட்டிருக்குது.

'இந்தா, கொஞ்சம் நில்லு. கொளந்தைக்குக் கொஞ்சம் பசியாத்திட்டு வரணும்'ன்னு உஷா சொன்னதைக் கேட்டு ரோட்டோர ஆலமரத்தடியிலே சத்த நின்னேன். ஆட்டோ, ஸ்கூட்டர், சைக்கிள், நடைன்னு ரோட்டுல போற ஜனங்களெல்லாம் களத்தூர்த் தேர்த் திருவிழாவுக்குத்தான் போயிக்கிட்டிருக்குதுங்க.

பஜனை கோஷ்டி ஒண்ணு, 'கோவிந்தா, கோவிந்தா'ன்னுட்டு தாளமும் மேளமும் கொட்டிக்கிட்டு எங்களைத் தாண்டிப் போகுது.

உஷா அந்தப் பக்கமாத் திரும்பி உட்க்காந்துக்கிட்டு குழந்தைக்குப் பசியாத்திட்டு எழுந்திருக்கக் கால் மணி நேரம் ஆயிடுச்சு. உஷாவோட முகத்துலயும் முத்து முத்தா வியர்வை கௌம்பிடிச்சு.

ரோட்டோர மரநெழல்ல நின்னு நின்னு மெதுவா களத்தூரைத் தொடறதுக்கு மணி ஏழேகால் ஆயிடுச்சு.

ஊர் எல்லையிலேயே இருக்கிற பஸ் ஸ்டாண்டுல உள்ளூர் மார்வாடி ஒருத்தர் உபயத்துல வெச்சிருந்த தண்ணீர்த் தொட்டிக்கு முன்னாடி கொஞ்ச நேரம் காத்திருந்துதான் தண்ணி புடிச்சிக் குடிக்க முடிஞ்சுது. தேர்த்திருவிளாக் கூட்டம்னா சும்மாவா?

பஸ் ஸ்டாண்டை ஒட்டியிருக்கிற டீக்கடையைப் பார்த்ததும் கால் கொஞ்சம் தயங்கி நிக்குது.

டீயெல்லாம் ஒண்ணும் வேணாம்! மெதுவா தேரடித்தெரு வரைக்கும் போய்ட்டா அங்கே ஜூஸூம், பானகமும், நீர்மோரும் மானாவாரியாக் கெடைக்கப் போவுது. அனாவசியமா டீக்கடைக்குக் காசைக் குடுத்துட்டா அப்பறம் பசங்களுக்கு பலூன் வாங்கக் காசிருக்காது” ன்னு மனசுக்குள்ள நெனைச்சுக்கிட்டு மேல நடக்குறேன்.

பஸ் ஸ்டாண்டு வாசல்ல நின்னு பாத்தா இங்கருந்தே தேர் உச்சில கட்டியிருக்கிற கலசமும் குடையும் கண்ணுக்குத் தெரியும். தேரோட பின்பக்கம் நின்னுக்கிட்டு தாரை தப்பட்டை அடிக்கிற சப்தம் கேக்கும்.

இன்னிக்கு என்னடான்னா தேர் உச்சியும் தெரியலை, தாரை தப்பட்டை சப்தமும் கேக்கல. இந்த வருஷம் வழக்கத்தை விட சீக்கிரமாத் தேரைக் கிளப்பிட்டாங்க போலிருக்கு.

இருக்கட்டும். அப்பிடியே தேர் கௌம்பினாலும் தேரடித் தெருவுல நூறடி தூரம் கூட தாண்டிருக்காது. என்னதான் ஆயிரம் ஜனங்களும் தம் புடிச்சு வடக்கயித்த இழுத்தாலும் கொஞ்சத்துல நகருமா அந்தத் தேர்? எவ்ளோ ஒசரம், என்னா வெயிட்டு.

ஊருக்குள்ள வர்ற ஜனமும் தேரை கும்பிட்டுட்டுத் திரும்பிப் போற ஜனமும் எதிரும் புதிருமாப் போயிட்டு வந்துக்கிட்டிருக்காங்க.

'அடியேய், உஷா! பாத்து ஏம்பின்னாடியே வா!'-ன்னு சொல்லிட்டு தோள் மேல இருக்குற குழந்தைங்க ரெண்டையும் ரெண்டு கையால கெட்டியா அணைச்சுக்கிட்டுத் தேரடிக்குப் போனா ஒரே அதிர்ச்சி.

என்னா ஆச்சு நம்ம தேருக்கு. வழக்கமா இந்த ஏழே முக்கால் மணிக்கு ஒண்ணு கிளம்பவே கிளம்பியிருக்காது. அப்படியே கிளம்பினாலும் தேரடித் தெருவுல கால்வாசி கூடப் போயிருக்காது. இன்னிக்கு என்னடான்னா தேரடித்தெருவோட கோடி வரையில கண்ணுக்குத் தெம்படலையே. ஒருவேளை செட்டித் தெருவுக்குள்ள திரும்பிடுச்சா? என்னா ஆச்சரியம். ஒரு வேளை நேத்து ராத்திரியே தேர இழுக்க ஆரம்பிச்சுட்டாங்களா? என்னடா இது இந்தத் தேருக்கு வந்த சோதனை' ன்னு நெனைச்சுக்கிட்டே நின்னப்போ ஏம்பின்னாடி நின்ன உஷாவும், 'தேர் எங்கய்யா போச்சு?' ன்னு ஏங்கிட்ட கேக்கறா?

போற வர்ற ஜனங்களை நிறுத்தி விசாரிச்சா மெஷினை வெச்சு கிடுகிடுன்னு தேரை இழுத்திக்கிட்டு போயிட்டாங்களாம்னு சொல்லிட்டுப் போயிக்கிட்டே இருக்காங்க?

தேரு உசரமா இருக்கிறதாலே அது கரண்ட்டு கம்பியில மாட்டிக்கக் கூடாதுன்னு தேர்த் திருவிழா அன்னிக்கு நாள் முச்சூடும் கரண்டை நிறுத்தி வெக்கிறாங்க? இதுனால எங்க வியாபாரம் பாதிக்குதுன்னு ஜனங்கள்ளாம் ஒரே கம்ப்ளெயிண்ட் பண்ணதாலே புதுசா செஞ்ச ஏற்பாடாம். தேரோட பின்பக்கம் புல்டோசருங்களை வெச்சு முட்டித் தள்ளி, தேர்வடத்தோட ரெண்டு பக்க முனையிலையும் ரெண்டு டிராக்டரை மாட்டி விட்டு இழுத்துக்கிட்டே போறாங்களாம். இனிமே ஒவ்வொரு வருஷமும் இப்பிடித்தான் தேரை இழுக்கப்போறாங்களாம். தேர்வடத்தை புடிச்சு ஜனங்க இளுக்கறதெல்லாம் இனிமே சும்மா ஒப்புக்குச் சப்பாணிதானாம்.

'பார்த்துக்கிட்டே இரு, இன்னும் அரை மணி நேரத்துலே தேரு தன்னோட எடத்துக்கே திரும்பி வந்து சேர்ந்துடும்'ன் னு ஒருத்தர் சொல்லிட்டுப் போறாரு.

பக்குனு இருந்துச்சு எனக்கு. என்னடா கிரகம் இது.

சரி, இப்பிடியே தேரடித்தெருவை வேகமா தாண்டிப்போயி செட்டித்தெருவுலயாவது அந்தத் தேரைப் புடிப்போம். எப்புடியும் வழியில ஜூஸூ, கீசு, புளிசாதம், அது இதுன்னு கிடைக்கும். அதை வாங்கி நம்ம வயத்துல போட்டுக்கிட்டு, உஷாவுக்கும், கொளந்தைங்களுக்கும் வாங்கிக் கொடுத்துட்டு அப்பிடியே நடக்க வேண்டியதுதான்.

போய்க்கிட்டே இருக்கோம். தேரடித் தெரு பூரா ஒருத்தரும் நீர் மோரும் குடுக்கல. புளிசோத்தையும் நீட்டலே.

'தேரு இந்தத் தெருவை தாண்டிப் போன உடனேயே அவங்களும் கடையைக் கட்டிட்டாங்க போல இருக்குய்யா?' என்றாள் உஷா.

'கொளந்தைங்க “யப்பா பசிக்குதுப்பா'ன்னு என் தலையைப் பிறாண்டுதுங்க. எனக்கே பசி வயத்தைக் கிள்ளுது.

'இருங்கடா பசங்களா! செட்டித் தெருவிலயாவது ஏதாச்சும் கிடைக்குதான்னு பார்ப்போம்!'ன்னு நடக்க ஆரம்பிச்சோம். எட்டரை மணி வெய்யில் சுள்ளுனு உறைக்குது. போறவழியில ஒருத்தர் மட்டும் மிச்சம் மீதி இருக்கிற வாட்டர் பாக்கெட்டுங்களை கொடுத்திக்கிட்டிருந்தாரு. நான் ஓடிப்போயி கையை நீட்டி, ரெண்டு வாட்டர் பாக்கெட்டுங்களை வாங்கிவந்து உஷாவுக்கும், கொளந்தைகளுக்கும் கொடுத்தேன். நான் இன்னும் கொஞ்ச நேரம் சமாளிப்பேன்.

தேரடித் தெரு முனைக்குப் போயி செட்டித்தெருவுல திரும்பினா அங்கியும் தேரு கண்ணுல படவேயில்லை. அதுக்குள்ள ராஜாஜி சாலைக்குள்ள நொளைஞ்சுடுச்சு போல இருக்குது.

தேரு போனப்புறம் செட்டித்தெருக்காரங்களும் பிரசாதம் கொடுக்கிறதையெல்லாம் ஏறக்கட்டிட்டுப் போயிருக்காங்க. இதென்னடா கொடுமைன்னு வேக வேகமா செட்டித்தெரு முளுக்க நடந்து ராஜாஜி சாலையில் திரும்பினா தூரத்துல பொம்மை மாதிரி தேரு போயிக்கிட்டுக்கு.

கொளந்தைங்களையும் கூட்டிக்கிட்டு இந்தத் தேரை நம்மளாலே தொரத்த முடியாதுன்னிட்டு நானும் உஷாவுமா ஒரு மரத்தோரம் சத்த ஒதுங்கி நின்னோம்.

தூரத்துல ரெண்டு புண்ணியவாணுங்க ஒரு ரிட்சா வண்டியில ரெண்டு அண்டாவை வெச்சிக்கிட்டு அதிலேருந்து எதையோ எடுத்துக் கொடுத்துக்கிட்டிருந்தாங்க?

'இங்கியே சத்த இரு'ன்னு தோளுல இருந்த கொழந்தைங்களை எறக்கி உஷாவண்ட நிக்க வெச்சுட்டு ஓடிப்போனேன். காயிதத்தட்டுல வெச்சு வெண்பொங்கல் குடுத்துக்கிட்டிருந்தாங்க? எங்க யாருக்குமே பொங்கல் அவ்வளவா புடிக்காது. கொஞ்சம் காரசாரமா புளி சாதம், சாம்பார் சாதம்னு இருந்தாக்கூடப் பரவாயில்லை. சரி, இனிமே புளி சாதத்தை எங்கே தேடிப் போவறதுன்னு பொங்கலுக்கே கையை நீட்டினேன். இன்னும் ரெண்டு தட்டு கேட்டேன்.

'ஒரு ஆளுக்கே எப்பிடிப்பா மூணு தட்டு குடுக்கறது? ன்னு ஒருத்தர் கேக்கறாரு.'

'அதோ பாருங்கய்யா குழந்தைங்களோடு மரத்தடியில நிக்க வெச்சிட்டு வந்திருக்கேன்' அப்பிடின்னு நான் காட்டின திக்குல ஒருதரம் பார்த்துட்டு இன்னும் ரெண்டு தட்டுல ரெண்டு கரண்டி பொங்கல் வெச்சிக் கொடுத்தாரு.'

'சட்னி, சாம்பாரு எதுவும் இல்லீங்களா?'ன்னு கேட்டதுக்கு, 'சர்தான் போய்யா!' ன்னு வெரட்டினாரு.

மரத்தடியிலேயே உட்கார்ந்தபடியே அந்தப் பொங்கலை வாயில் போட்டுக்கிட்டோம்.

'புடிக்கலை'ன்னு உஷாவும், பசங்களும் சொன்னதும் எழுந்து போயி ஒரு பெட்டிக்கடையில அஞ்சு ரூவாய்க்கு ஊறுகாய் பாக்கெட் வாங்கிவந்தேன். ஊறுகாய் வந்தப்புறம்தான் அந்தப் பொங்கலை எங்களாலே சாப்பிட முடிஞ்சுது.

முனிசிபாலிட்டி குழாயில கை களுவி தண்ணி புடிச்சுக் குடிச்சுப்புட்டு பஜார் வீதியைப் பாத்து நடையைக் கட்டினோம். நெனைச்ச மாதிரியே தேரு அதோட நிலைக்கு வந்து சேந்துட்டிருந்தது. கருணாகரப் பெருமாளையும் தேருலேயிருந்து எறக்கிக் கோயிலுக்கு எடுத்துட்டுப் போயாயிடுச்சு.

வழக்கமா ஒரு அம்பது பைசா கற்பூரம் வாங்கி தேருக்கு முன்னாடி கொளுத்திபுட்டுப் பெருமாளைக் கும்பிடுவோம். பெருமாளே கௌம்பியாச்சு. சரி, அம்பது பைசா மிச்சம்னு நினைச்சுக்கிட்டேன்.

மணி ஒம்போதரை கிட்ட இருக்கும். வெயில் இன்னும் உக்கிரமாச்சு. இனிமே சாயந்திரம் வரைக்கும் இங்கியே இருந்தாலும் பிரசாதம் அது இதுன்னு யாரும் எதுவும் கொடுக்கப்போறதில்லைன்னு தெரிஞ்சு போச்சு.

'அடியேய் வாடி கௌம்பலாம்'ன்னு உஷாவை கூப்புட்டேன். அவ மூஞ்சியிலயும் சொரத்தில்லே.

ஊரப்பாக்க நாங்க கௌம்பினப்போ, கதிரேசனும் சரோசாக்குட்டியும் 'பலுகுண்டுப்பா!'ன்னு கத்துச்சுங்க. பக்கத்துலயே நின்னுட்டிருந்த பலூன்காரன்கிட்டே ஒண்ணு இருவது ரூபாயின்னு பேரம் பேசி ரெண்டு பலூனை வாங்கிக்குடுது, 'ஜாக்கிரதையாப் புடிச்சிக்கிட்டு வரணும்ன்னு சொல்லும்போதே மீனுக்குட்டி' கத்துச்சு.

ஒரு ரெண்டு ரூவா சாக்கலேட்டை வாங்கி அதன் வாயிலே அடைச்சேன். ஜொள்ளு ஒழுகிக்கிட்டே என்னைப் பார்த்து மீனுக்குட்டி சிரிச்சுது. உடனே, 'ஏங்கண்ணு'ன்னு அதுக்கு முத்தம் கொடுத்தேன்.

பின்பக்கமாய்த் திரும்பி கருணாகரப் பெருமாள் கோயில் கோபுரத்தைப் பார்த்து பெருமாளே, 'வர்றேம்பா!' என்று சொல்லிபடியே குழந்தைகளை மேல ஏத்திக்கிட்டு நடந்தேன்.

'அடியே உஷா, வீட்டுக்குப் போனதும் மிச்சம் மீதி இருக்குற ரேஷன் அரிசில சூப்பரா சாதம் வடிச்சு ஒரு புளிக்கொளம்பு செய்யறியா?'

'உடம்பு என்னா வலி வலிக்குது. உனக்கு புளிக்கொளம்பு கேக்குதா? என்னால கஞ்சிதான் வெச்சுததர முடியும்..'

மணி பத்தரை பதினொண்ணு இருக்கும். வெயில் பதைபதைக்குது.

தெருவுக்குள்ள நுழையும்போதே, 'என்னாப்பா, தேரெல்லாம் பாத்துட்டு வந்தியா?' என்று கேட்டவரை ஏற, இறங்கப் பாத்துட்டு உஷா, 'இதெல்லாம் ஒரு தேரு, இதுக்குப் பேருதான் திருவிழா..' என்று சொல்லிக்கொண்டே குடிசைக்குள்ள நுழைந்தாள் உஷா.

அவள் சொன்னது சரிதானே?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com