தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு உணவுப் பொருள் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் ஊத்துக்குளி என்றவுடன் நினைவுக்கு வருவது வெண்ணெய்தான். ஊத்துக்குளியில் எழுபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சுவை குறையாத வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வருகிறது.
சுத்தமான வெண்ணெய், சுத்தமான நெய் வேண்டும் என்றும் கலப்படமில்லாமல் சாப்பிட வேண்டும் என்றும் ஆசைப்படுபவர்கள் ஊத்துக்குளி வெண்ணெய், நெய்யை பயன்படுத்தலாம்.
திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஊத்துக்குளி, அதன் அதனைச் சேர்ந்த பகுதிகளில் 1945-ஆம் ஆண்டு முதல் வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில், ஊத்துக்குளி மட்டுமின்றி அருகம்பாளையம், இரட்டைக் கிணறு, கொடியாம்பாளையம், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு காலத்தில் குடிசைத் தொழிலாகவும் இந்தத்தொழில் இருந்து வந்தது.
இதன் மூலமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வந்த இந்தத் தொழிலாளது காலப்போக்கில் மழையின்மை, கால்நடைகள் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் சரிவைச் சந்தித்து வந்தது.
சபரிமலையில் ஊத்துக்குளி நெய்: ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் நெய்யானது கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் சபரிமலைக்கு டன் கணக்கில் அனுப்பப்பட்டு வந்தது. அதேபோல தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, திருமண விழாக்கள், கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் டன் கணக்கில் வெண்ணெய், நெய் அனுப்பப்படுகிறது.
ஊத்துக்குளியில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய்க்கு இன்றளவும் மவுசு குறையவில்லை. எனினும் தற்போது கூட ஆன்லைனில் ஆர்டர்கள் பெற்று மாதம்தோறும் 10 டன் அளவுக்கு நெய், வெண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் மூலமாக மாதம்தோறும் ஒரு டன் நெய் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.