வகுப்பறைக்குள் 'சசிகலா டீச்சர்' நுழைகிறார். அவருடைய வகுப்பு மாணவ, மாணவியர் அவரை ஒரு தோழியாகவே கருதுவர். 'டீச்சர், நாங்க உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கோம்..'
'என்ன சர்ப்ரைஸ்?'
'வகுப்பு முடியும்போது தெரியும். அதுவரைக்கும் வெய்ட் பண்ணுங்க?'
வகுப்பு முடிய மணி அடித்ததும், மாணவர்கள் சேர்ந்து வண்ணத்தாள் சுற்றப்பட்ட நீளமான பெட்டியை நீட்டி 'பிடிங்க டீச்சர். உங்களுக்கு எங்க அன்பளிப்பு' என்றனர்.
'உள்ளே என்ன இருக்கு ...' என்றவாறே சசிகலா டீச்சர், வண்ணத்தாளை அகற்றி அட்டைப் பெட்டியைத் திறந்தபோது 'பிங்க்' நிறச் சேலை இருந்தது.
'என்னங்கப்பா இது... இதெல்லாம் எதுக்கு...'
'நீங்க எங்களுக்கு தீபாவளிக்கு புது டிரஸ் வாங்கி தந்தீங்க.. அதான், நாங்க எல்லாரும் சேர்ந்து உங்களுக்கு சேலை அன்பளிப்பு செஞ்சிருக்கோம்... சேலை பிடிச்சிருக்கா டீச்சர்....'
பனித்த கண்களுடன் மனம் நெகிழ, 'சேலை ரொம்ப நல்ல இருக்கு பிள்ளைங்களா?' என்றவாறு இரண்டு கைகளை விரித்து அகப்பட்ட மாணவ, மாணவிகளைக் கட்டிப் பிடித்தார் சசிகலா.
'பரிசு அளிக்க மாணவர்கள் முடிவு செய்ததது என் மேலிருக்கும் அன்பினால். அந்த அன்புதான் பெருசு... ரொம்பப் பெருசு. அன்பளிப்பு கிடைத்த சந்தோஷத்தைவிட மாணவ, மாணவிகளின் அன்பு அளவற்ற மகிழ்ச்சியை வழங்கியது. வகுப்பு மாணவ மாணவியர் அனைவருக்கும் தீபாவளி உடைகள் வாங்க தனது பங்களிப்பைச் செய்தவர், நூலகத்துக்கு தொடர்ந்து ஆதரவு தந்தவரும் ரங்கராஜன் ஸ்ரீதர் சாருக்கும் நன்றி சொல்லணும்..' என்றார் சசிகலா டீச்சர்.
திரைப்படத்தில் வருவதுபோல் நடைபெற்ற இந்தக் காட்சி உண்மைச் சம்பவம்தான்.
சிதம்பரத்தில் மாணவ, மாணவிகளுக்காகவும் பொதுமக்களுக்காகவும் நூலகம் ஒன்றை தொடங்கி நடத்திவருகிறார் சசிகலா. தனது வகுப்பு மாணவ, மாணவியருக்கு நோட்டுகள், பென்சில்கள், மாணவர்களின் பிறந்த நாளன்று உடைகள், சிறார்களுக்கான நூல், விளையாட்டுப் பொருள்களைப் பல ஆண்டுகளாக அன்பளிப்புகளைச் செய்து வருகிறார்.
'குழந்தைகளை ஆர்வமூட்டி, வியக்க வைத்து , கேள்வி கேட்க வைப்பதில் எனக்கு மிகுந்த விருப்பம். ஆனால் வகுப்பறையின் நான்கு சுவர்களுக்குள் குழந்தைகள் வியந்து பார்த்து அனுபவபூர்வமாக கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது? அதனாலேயே எனது பள்ளி குழந்தைகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுற்றுலா மூலமாக பள்ளிக்கு வெளியே கிடைக்கும் கற்றலில் ஈடுபடுத்தி வருகிறேன்.
தங்களது கிராமத்தை விட்டு உறவினர் வீட்டிற்கு மட்டுமே பெரும்பாலும் குழந்தைகள் வெளியே சென்றுள்ளனர். களப்பயணத்தின் போது வழிநெடுக கண்ணில் தென்படும் அத்தனை காட்சிகளையும் விழிகளை விரித்து பார்த்து அவர்கள் மகிழ்ந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
'டீச்சர் அது என்ன ? இது எப்படி ?' என ஒவ்வொன்றையும் அவர்கள் கேட்ட தருணங்கள் அவர்களது மனதையும், சிந்தனையையும் விரிவடையும் வாய்ப்பைத் தந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் மகிழ்ச்சியும், ரசனையும் மிகுந்த கற்றல் அனுபவமாக சுற்றுலா அமைந்திருக்கிறது. பல சுற்றுலாக்களுக்கான செலவை வழக்கமாக என்னோடு பகிர்ந்து கொண்டவர் சமூக ஆர்வலரான ரங்கராஜன் ஸ்ரீதர்' என்கிறார் சசிகலா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.