கண்டது
(ஆவடியில் உள்ள ஒரு ஹோட்டலின் பெயர்)
'தாயின் சுவை'
கு.கோப்பெருந்தேவி, சென்னை.
(ஒதியடிக்காடில் ஓடிய ஆட்டோ ஒன்றில் எழுதியிருந்தது)
'எது வேண்டும் என்று முடிவு செய்வதைவிட, எது வேண்டாம் என்று முடிவு செய்வதே நிம்மதியைத் தரும்'
ஜி.அழகிரிவேல், ஒதியடிக்காடு.
(தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ஊரின் பெயர்)
'குத்தபாஞ்சான்'
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி.
கேட்டது
(சென்னை கே.கே. நகரில் தூய்மைப் பணியாளரும், பெண்ணும்...)
'இந்தாம்மா.. மக்கும் குப்பை, மக்காத குப்பையைப் பார்த்துட்டு சரியான தொட்டியில் போடுங்க?'
'நீங்க லாரியில் எல்லாத்தையும் ஒன்னாதானே அள்ளிட்டு போறீங்க?'
வி.வைத்தியநாதன், சென்னை78.
(நாகப்பட்டினம் பூங்கா ஒன்றில் இரு பெண்கள் பேசியது)
'அட பரவாயில்லையே.. உன் மருமகள் தினமும் விதவிதமாகச் சமையல் பண்றாளே..!'
'வயிற்றெரிச்சலை கொட்டாதீங்க.. எனக்கு சுகர், பி.பி. இருக்கு.. அதை தெரிஞ்சிகிட்டே இப்படி பண்றா?'
நாகஜோதி, நாகப்பட்டினம்.
(தேனி பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)
'உங்க மொபைலை குடுங்க. ஒரு ஃபோன் போட்டுட்டு தர்றேன்..'
'போனை கீழே போட்டுட்டா உடைஞ்சிடுமே.. அப்புறம் அபராதமா தரப்போறீங்க?'
ச.அரசமதி, தேனி.
யோசிக்கிறாங்கப்பா!
வாழ்வின் தடைகள் எல்லாம் தடைகளே அல்ல;
எப்படி வாழக்கூடாது என்ற அனுபவப் பாடம்.
ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
மைக்ரோ கதை
வங்கியில் இருந்த மணியிடம், 'கொஞ்சம் பேனா குடுங்க.. பணம் எடுக்க பார்ம் எழுதிட்டு தருகிறேன்' என கேட்டார் முருகன்.
'கொஞ்சம் தர இயலாது.. முழுசா தர்றேன்' என்று பேனாவை கொடுத்தார் மணி.
வாங்கிய முருகன் பேனா மூடியை கழட்டி, 'இந்தாங்க இதை வச்சுங்க.. நான் மறந்திட்டு போயிடுவேன்' எனக் கூறினார்.
'இருபது பேனா மூடிகள் ஏற்கெனவே என் வீட்டில் சிதறி கிடக்கின்றன' என்று மணி கூற, எழுதியவுடன் மறக்காமல் பேனாவை கொடுத்துவிட்டு சென்றார் முருகன்..
ஜி.அர்ஜுனன், செங்கல்பட்டு.
எஸ்.எம்.எஸ்.
பிரியமான வேலை ஒருபோதும் கடினமானதல்ல.
உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.
அப்படீங்களா!
வெளிநாடுகளில் சென்று தங்க வேண்டிய சூழல் எழுந்தால், அங்கு இந்தியாவின் டிரைவிங் லைசென்ஸை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட இயலுமா? என சந்தேகம் பலருக்கும் உண்டு. பல நாடுகளிலும் நம் நாட்டு லைசென்ஸை பயன்படுத்தலாம்.
அமெரிக்கா:
அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்தியாவின் டிரைவிங் லைசென்ஸை வைத்து ஓராண்டு வரை வாகனங்களை ஓட்டலாம். ஆனால் வாகனத்தை ஓட்ட சர்வதேச ஓட்டுநர் பரிந்துரைக்கப்படுகிறது.
மலேசியா:
மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். சுற்றுலா இடங்களை வாகனத்தை வாடகைக்கு எடுத்துகொண்டும் சுற்றி வந்து விடலாம்.
ஜெர்மனி:
ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். அங்கேயே தங்கி நீண்ட தூர சாலைப் பயணங்களை மேற்கொள்ளலாம்.
ஆஸ்திரேலியா:
ஓராண்டு வரை பயன்படுத்தலாம், ஆனால் வடக்கு ஆஸ்திரேலியாவில் மூன்று மாதங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
பிரிட்டன்:
பொதுவாக, ஓராண்டு பயன்படுத்தலாம். அனால் பெரிய நகரங்களுக்கு இடையே பயணம் செய்ய சர்வதேச ஓட்டுநர் உரிமை அவசியமானதாகும்.
நியூஸிலாந்து, தென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் :
ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.
சுவீடன்:
ஓராண்டு வரை பயன் படுத்தலாம். நார்டிக் பிரதேச அழகை ஆற அமர சுற்றி வரலாம்.
ஸ்பெயின்:
ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
கனடா:
மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.ஆனால் இந்த விதி மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.
ராஜி ராதா, பெங்களூரு.