
சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. மற்ற நட்சத்திரங்களைச் சுற்றி வரும் கோள்கள் 'வெளிக்கோள்கள்' எனப்படும்.
'எக்ஸோப்ளானெட்டுகள்' எனப்படும் வெளிக்கோள்களை தொலைநோக்கியில் பார்ப்பது மிகவும் கடினம். அவை சுற்றும் நட்சத்திரங்களின் பிரகாசமான ஒளியின் காரணமாக, 'வெளிக்கோள்கள்' சூப்பர் தொலைநோக்கிகளில் கூட தெரிவதில்லை.
'வெளிக்கோள்கள்' குறித்த அறிவியல் துறையில் குறிப்பிடத்தக்கக் கண்டுபிடிப்பை இந்தியாவில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். மேம்பட்ட 'பராஸ் 2' ஸ்பெக்ட்ரோகிராஃப் கருவி மூலம், விஞ்ஞானிகள் 'டிஓஐ6651பி' என்ற வெளிக்கோளை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த வெளிக்கோள் சனிக் கிரகம் அளவில் இருக்கிறது. இது பூமியை விட சுமார் 60 மடங்கு எடை கொண்டது. பூமியை விட இரண்டரை மடங்கு உருவத்தில் பெரியது. இந்த வெளிக்கோள் சூரியனைப் போன்ற இன்னொரு நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
இது 'பிஆர்எல்' விஞ்ஞானிகளின் நான்காவது வெளிக்கோள் கண்டுபிடிப்பாகும், உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் பெருகி வரும் பங்களிப்பைக் காட்டுகிறது.
வானியல் ஆராய்ச்சியாளர்கள் பிரபஞ்சத்தில் 'நெப்டியூன் பாலைவனம்' என்று அழைக்கும் பகுதியின் விளிம்பில் இந்த 'வெளிக்கோள்' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரக உருவாக்கம், பரிணாம வளர்ச்சியில் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.
'நெப்டியூன் பாலைவனம்' ஒரு மர்மமான பகுதியாகும், அங்கு 'டிஓஐ6651பி' போன்ற வெளிக்கோள்கள் வெகு சிலவே உள்ளன. எனவே 'டிஓஐ6651பி'யின் கண்டுபிடிப்பு அத்தகைய கிரகங்கள் பொதுவாக ஏன் அங்கு எண்ணிக்கையில் அதிகமாக இல்லை. அதற்கு காரணங்கள் என்ன என்பதை ஆராய ஓர் அரிய வாய்ப்பை வழங்கியுள்ளது.
புதிய வெளிக்கோளின் சுற்றுப்பாதையானது சற்றே நீள் வட்டத்தில் 'ஓவல்' வடிவத்தில் உள்ளது. இந்த வெளிக்கோள் சுமார் 87 சதவீதம் பாறைகள், இரும்புச்சத்துகள் நிறைந்த பொருள்களைக் கொண்டுள்ளது. ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களும் இந்தப் புதிய வெளிக்கோளில் உண்டு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.