பேல் பூரி

வேண்டும் அளவு கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். வேண்டாததை வாங்கத் தவிர்க்கவும்.
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
1 min read

கண்டது

(மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சில ஊர்களின் பெயர்கள்)

'கீழப்பாதி, மேலப்பாதி, தென்பாதி, ஆறுபாதி.'

-ச.சுப்புரெத்தினம், மயிலாடுதுறை.

(சென்னையில் உள்ள உணவகத்தில் எழுதியிருந்தது)

'வேண்டும் அளவு கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள். வேண்டாததை வாங்கத் தவிர்க்கவும்.

உண்ணும் உணவை வீணாக்காதீர்கள். ஒரு பருக்கை சோறு விவசாயின் ஒரு சொட்டு ரத்தம்'- ஆசை மெஸ்.

-ஏ.விக்டர்ஜான், சென்னை-62.

(ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஊரின் பெயர்)

'மோர்பண்ணை'

-எம்.செல்லையா, சாத்தூர்.

கேட்டது

(திண்டுக்கல்லில் தனியார் மருத்துமனை வளாகத்தில் உள்ள மருந்தகம் ஒன்றில் மருத்துவப் பணியாளரும், நோயாளியும்...)

'இவ்வளவு மாத்திரை ஒரே வாரத்துல சாப்பிடணும்னு சொல்றாரே.. ஏன்..?'

'அப்புறமா காலாவதியாகிடும் அதான்..?'

-க.நாகமுத்து, திண்டுக்கல்.

(விருதுநகர் மார்க்கெட்டில் கடைக்காரரும், வாடிக்கையாளரும்...?

'பழம் என்ன விலை..?'

'பத்து ரூபாய்..?'

'என்கிட்டே ஐந்து ரூபாய்தான் இருக்கு..?'

'அதுக்கு தோல்தான் வரும்..'

'சரி.. தோலை வச்சிட்டு, பழம் மட்டும் கொடுங்க?'

-விமலா சடையப்பன், காளனம்பட்டி.

(சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு மாணவர்கள் பேசியது)

'உன்னோட புதுச்சட்டை அடிக்கிற கலரில் இருக்கே..?'

'ஏன் உனக்கு வலிக்குதா?'

-நெ.இராமகிருஷ்ணன், சென்னை-74.

யோசிக்கிறாங்கப்பா!

மனவலி மற்றவர்களால் தரப்படுவது;

மனவலிமை நாமே உருவாக்கிக் கொள்வது.

-எம்.ரவீந்திரன், நாகப்பட்டினம்.

மைக்ரோ கதை

புனிதா தனது ஏழு வயது மகள் யமுனாவை அழைத்துகொண்டு, புத்தாடை வாங்க ஆடையகம் சென்றார்.

பத்து நிமிடத்துக்குள் யமுனா, தனக்குப் பிடித்த உடையை எடுத்து முடித்தாள்.

அந்த ஆடை புனிதாவுக்கு பிடிக்காததால், வேறு உடையை தேர்வு செய்யுமாறு கூறினாள்.

இதற்கு யமுனா பிடிவாதம் பிடித்ததால், புனிதா கண்டித்தாள்.

அப்போது யமுனா, 'அம்மா.. உனக்கு பூரி சாப்பிட அறவே பிடிக்காது. ஆனால், அப்பாவுக்கு பிடிக்குமேன்னு நீ அவருக்கு பூரி சுட்டு கொடுக்கறதில்லையா?' என்றாள்.

மகளின் சாதுர்ய பேச்சால், புனிதா புன்னகைத்தாள்.

-பால்.ராமமூர்த்தி. பி, அம்பாசமுத்திரம்.

எஸ்எம்எஸ்

பயம் தெரியலாம்.

பயப்படக் கூடாது.

-ஜி.குப்புசுவாமி, சென்னை-26.

அப்படீங்களா!

வாட்ஸ் ஆஃப் செயலியில், சாட்களை வரைமுறைப்படுத்தும் புதிய சேவை அறிமுகமாகி உள்ளது. பொதுவாக, வாட்ஸ் ஆஃப்பில் உள்ள குழுக்கள், தனிநபர்கள் அனுப்பும் தகவல்கள் குவிந்து வருகின்றன. இவற்றை தேடி படிப்பது என்பது காலநேரச் சூழலில் சற்று கடினமாக உள்ளது.

அப்படி வரும் ஏராளமான தகவல்களை பயனாளர்களின் தேவைக்கு ஏற்ப வகைப்படுத்தி படிக்கும் புதிய சேவையான கஸ்டம் லிஸ்ட்ஸ் அறிமுகமாகி உள்ளது. இதில் பணி, குடும்பம், அண்டை வீட்டார், அலுவலக நண்பர்கள், பள்ளி நண்பர்கள் என வகைப்படுத்தி வைத்து கொள்ள முடியும். இதில் உள்ள தகவல்களை முக்கியத்துவம் வாய்ந்தவைக்கு முன்னுரிமை அளித்து படிக்கலாம்.

இந்தச் சேவையைத் தொடங்க முதலில் வாட்ஸ் ஆஃப்பின் சாட்களுக்கு மேல் உள்ள + ஐகானை தேர்வு செய்து, நமது சாட் லிஸ்டின் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த சாட் லிஸ்டில் சேர்க்கப்பட வேண்டிய கைப்பேசி எண்களைச் சேர்த்து

விடலாம். அந்த எண்களில் இருந்து வரும் தகவல்கள் அந்த சாட் லிஸ்டில் மட்டும் இடம்பெறும், இதுபோன்று உருவாக்கப்பட்ட குழுக்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், கிடைத்த நேரத்தில் தகவல்களைப் படிக்கலாம்.

இதுபோன்று உருவாக்கப்பட்ட சாட்கள் வாட்ஸ் ஆஃப்பின் முதல் பக்கத்தில் இடம்பெறும். நமது தேவைக்கு சாட் லிஸ்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.

-அ.சர்ப்ராஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com