பழங்கள் வாங்கினால் பரிசு!

அது ஒரு வித்தியாச மான பழக்கடை. பெயரோ 'தோழர் பழக்கடை'.
தோழர் பழக்கடை
தோழர் பழக்கடைPicasa
Published on
Updated on
2 min read

அது ஒரு வித்தியாச மான பழக்கடை. பெயரோ 'தோழர் பழக்கடை'. இதன் உரிமையாளர் ஹாஜா மொய்தீன், மனித நேசர் மட்டுமல்ல; மதச் சார்பற்ற குடும்பத்துக்குச் சொந்தக்காரர். அவர் தனது பழக்கடையில் ஒருபக்கம் எவர்சில்வர் சந்தனக் கிண்ணங்கள், குங்குமச் சிமிழ்களையும், இன்னொரு பக்கம் பல தலைப்புகளில் புத்தகங்களையும் அடுக்கிவைத்திருக்கிறார்.

தரையில் பெட்டிகளில் பலவகை பழங்கள். பழங்கள் வாங்குவதன் அடிப்படையில் புத்தகங்கள், சந்தனக் கிண்ணம், குங்குமச் சிமிழ்களை அன்பளிப்பாக ஐந்து ஆண்டுகளாக வழங்கி வருகிறார். கொஞ்சமாகப் பழங்கள் வாங்குபவர்களுக்கு சிறிய தண்ணீர் பாட்டிலையாவது இலவசமாகத் தருகிறார்.

தஞ்சாவூர் பூச்சந்தை முருகன் கோயிலுக்கு எதிராக இருக்கும் இந்தப் பழக்கடையில், கோயிலுக்கு வருபவர்கள் அர்ச்சனைக்காகப் பழங்களை வாங்க வசதியாக இருக்க அதிகாலை ஐந்து மணிக்கே ஹாஜா மொய்தீன் தனது கடையைத் திறந்துவிடுகிறார்.

அவரிடம் பேசியபோது:

'சிறு வயது முதலே பொது நலப் பணியில் ஈடுபடுவேன். ஒன்பதாவது படித்த நான் தொடக்கத்தில் செய்யாத வேலைகள் கிடையாது. அவற்றை விட்டுவிட்டு முப்பது ஆண்டுகளாக 'தோழர் பழக்கடையை' நடத்தி வருகிறேன்.

உடலுக்கு நன்மை தரும் பழங்களை விற்கிறேன். உள்ளத்துக்கு நன்மை தர புத்தகங்களை இலவசமாகத் அளிக்கிறேன். ஆண்டிராய்ட் அலைபேசிகள் பெருகியிருப்பதால் வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது. புத்தகங்கள் வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்காக , இலவசமாக வழங்குகிறேன். அதற்காக நாவல்களை வழங்குவதில்லை.

கடவுள் பக்தி உள்ளவர்களுக்கு ஆன்மிகப் புத்தகங்கள், வீடு கட்ட பூஜை நடத்தப் பழங்களை வாங்குபவர்களுக்கு மனையடி சாஸ்திரம், வாஸ்து குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள், பெண்களுக்கு சமையல் குறிப்புகள், கோலங்கள் குறித்த புத்தகங்கள் என்று பயனுள்ளவாறு கொடுக்கிறேன்.

திருமண நிச்சயம் நடத்த பழங்கள் வாங்க வருபவர்களுக்கு குங்குமம் நிறைக்கப்பட்ட குங்குமச் சிமிழ், சந்தனக் கிண்ணம், சந்தனம், மஞ்சள், போன்றவற்றை தருகிறேன். அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அவர்களுக்குப் பிடித்த அரசியல் தலைவர்கள் குறித்த புத்தகங்களை வழங்குவேன்.

பழங்கள் காலையில் வாங்குபவர்கள் வாங்கிய பிறகு 'பழம் கெட்டிருக்கிறது' என்று மாலையில் வந்து சொன்னால் கூட, மாற்றி, வேறு நல்ல பழத்தை அளிப்பேன். கடையில் கொடுக்கும் ரசீதில், 'என் கடையில் வாங்கிய பழங்கள் வீணாகி விட்டால் அதை மாற்றித் தருவேன்' அச்சிட்டுள்ளேன்.

வாடிக்கையாளர்களை நான் உறவாகப் பார்க்கிறேன். அவர்கள் வயதுக்கு ஏற்றவாறு என்னை 'தோழர்', 'அப்பா', 'மாமா', 'அண்ணா', 'தம்பி' என்று அழைக்கிறார்கள். கரோனா ஊரடங்கு காலத்தில் வாடிக்கையாளர்கள் அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தது என்னால் மறக்க முடியாது. இந்த அன்புதான் எனது ஊதியம்.

பழக்கடையிலிருந்து வருமானம் கடை வாடகை கொடுக்க, பழங்கள் கொள்முதல் செய்ய, புத்தகங்கள், அன்பளிப்புப் பொருள்கள் வாங்க சரியாக இருக்கும். சுருக்கமாகச் சொன்னால் எனது வருமானத்தில் குடும்பம் நடக்கவில்லை. ஆனால் மனைவிக்கோ, வாரிசுகளுக்கோ என் மீது கொஞ்சம் கூட வருத்தம் இல்லை.

சமாதான இளைஞர் நற்பணி மன்றம்: தஞ்சாவூரின் மையப் பகுதியான பூக்காரத் தெருவில் சுமார் முப்பது கிளை தெருக்கள் உள்ளன. அந்தக் காலத்தில் மதத்தின் பெயரால் சண்டை சச்சரவு ஏற்படும். மத நல்லிணக்கத்துக்காக, 1981-இல் 'சமாதான இளைஞர் நற்பணி மன்றம்' என்ற அமைப்பைத் தொடங்கினேன்.

'சாதி - மதம் பேதம் கூடாது, குடித்த ஆண்கள் சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது, பிரச்னைகளைப் பெரிதுப்படுத்தாமல் பேசித் தீர்த்துகொள்ள வேண்டும், நலிந்தவர்களுக்கு உதவிகளைச் செய்ய வேண்டும்' என்பவைதான் மன்றத்தின் குறிக்கோள்கள்.

ஐந்து நாள்கள் விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து 28 ஆண்டுகள் நடத்தி, வெற்றி பெறுவோருக்குப் பரிசுகளை வழங்கி வருகிறோம். இப்படி நடைபெற்ற போட்டி மூலமாகத் தான், கௌரி எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் பத்தாம் வகுப்பு மாணவி. நட்பு, ஈர்ப்பாகி, காதலில் முடிந்தது. ஆனால் காதலுக்கு கௌரி வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. கவுரி மேஜராகும்வரை காத்திருந்து திருமணம் செய்து தனிக் குடித்தனம் சென்றோம்.

மூன்று மகன்கள். ஒரு மகள். ஒரு மகன் விபத்தில் இறந்து போனான். ஒரு மகன் வழக்குரைஞராக இருக்கிறார். இன்னொரு மகன் ஹோட்டல் நடத்துகிறார். மருமகன் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர். மதச் சார்பற்ற குடும்பமாக எங்களால் வாழமுடிகிறது. இன்றைய கால கட்டத்தில் அது ஒரு சாதனைதான்.

கடைக்குப் பக்கத்தில் பூக்காரத் தெருவில், வாடகைக்குக் குடியிருக்கிறோம். தஞ்சாவூருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில், கௌரி தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரிகிறார்.

எனது எல்லா சமூகச் சேவைகளுக்கு அவர்தான் நிதியுதவி அளித்துவருகிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பணியிலிருந்து ஒய்வு பெறுகிறார்.

கோயில் விசேஷ நாள்களில் அன்னதானம் செய்கிறோம். கந்த சஷ்டியையொட்டி, 11 நாள்கள் அன்னதானம் செய்தோம். சபரிமலை சீசனிலும் அன்னதானம் நடக்கும். இதர பொதுநல அமைப்புகளிலிருந்தும் , கோயிலிலிருந்தும் உதவிகள் கேட்டால் செய்து தருகிறோம். தொடர்ந்து ரத்த தானம் செய்து வருகிறேன்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு எனது உடலை செய்வதாக, தானம் செய்வதாக உறுதிமொழிப் பத்திரம் கொடுத்துள்ளேன்.

பூக்கார தெருவில் அடிப்படை வசதிகளுக்காக, பல போராட்டங்களை நடத்தியுள்ளேன். நான் ஒற்றை இலக்க வாக்குகள் வித்தியாசத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பலமுறை தோற்றுள்ளேன்.

மக்கள் பிரச்னைகளை அரசுத் துறைகளின் கவனத்துக்குக் கொண்டு செல்கிறேன்' என்கிறார் ஹாஜா மொய்தீன்.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com