ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பாத வீக்கம் குணமாக வழி என்ன?

என் வயது ஐம்பத்து ஒன்று. கால் முட்டி முதல் பாதம் வரை வீக்கம் ஏற்பட்டு, வலியால் அவதியுறுகிறேன். ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று மருத்துவர் கூறுகிறார்.
இஞ்சி
இஞ்சி
Published on
Updated on
2 min read

என் வயது ஐம்பத்து ஒன்று. கால் முட்டி முதல் பாதம் வரை வீக்கம் ஏற்பட்டு, வலியால் அவதியுறுகிறேன். ரத்த ஓட்டம் சரியாக இல்லை என்று மருத்துவர் கூறுகிறார். இரவில் தூங்கி, காலையில் எழுந்தால், சிறிது வீக்கம் வடிந்துவிடுகிறது. ஆனால், மறுபடியும் பகலில் நீர் கால்களில் சுரந்துவிடுகிறது. இதற்கு ஆயுர்வேத மருந்துகள் உள்ளதா?

-கிருஷ்ணன், சென்னை.

வாத, பித்த, கபத் தோஷங்களால் வீக்கம் ஏற்பட்டாலும் கபத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். காயம் முதலிய வெளிக்காரணங்களினால் ஏற்படும் வீக்கத்தில், பித்த, ரத்தத் தன்மை அதிகமாகக் காணப்படும். காயம் முதலிய வெளிக்காரணங்களினால் ஏற்படும் வீக்கதில் பித்த - ரத்தத் தன்மை அதிகமாகக் காணப்படும் வீக்கத்தில் வயிற்றுள் ஏற்படும் மப்பு நிலையை நீக்கும் மருந்துகளாகிய திரிகடு எனும் சுக்கு, மிளகு, திப்பிலி சூரணம், பசுவின் சிறுநீர், லோஹபஸ்மம் போன்றவையும், சிறுநீரை நன்றாக வெளியேற்றும் மூக்கரட்டைவேர் (சாரணை), இஞ்சி போன்றவை அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

கடுக்காயின் வறட்சித் தன்மை வீக்கத்தை நன்றாக வடித்துவிடும். நிலவேம்பும் இந்த உபாதையைக் குணப்படுத்தும். வீக்கம் என்கிற உபாதையானது பல நோய்களை உள்ளடக்கியதாகும். சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள், இதய நோய்கள், தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்னைகள் போன்றவையெல்லாம் வீக்க உபாதையில் அடங்குபவையாகும்.

சுக்கு, சுண்டைவேர், நாயுருவி வேர், சிறுகாஞ்சூரி -இவை நான்கு பங்கும், இவற்றின் நேர்பாதி அளவு சாரணை வேர் சேர்த்து செய்த கஷாயம் 'அர்த்தவில்வ கஷாயம்' என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இது உங்களுடைய கால் வீக்கத்தைத் தணித்து, குடலில் சேர்ந்துள்ள மலத்தை வெளியேற்றவும் உதவும். ஆவில்தோலாதி பஸ்மம் இரண்டு முதல் மூன்று கிராம் வரை சேர்த்துகொடுப்பது மரபு.

நாட்டு மருந்துக் கடைகளில் மிக எளிதாகக் கிடைக்கும் நெருஞ்சில், இஞ்சி, சாரணை வேர், கடுக்காய் தோடு, தேவதோடு, சுக்கு, பூண்டு, நீர்முள்ளி ஆகியவற்றை கஷாயமாக்கிக் குடிக்க, உடல் வீக்க உபாதையால் அவதியுறுபவர்களுக்கு மிக நல்ல மருந்தாகப் பயன்படும்.

கால்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளதால், இரவில் படுத்து உறங்கும்போது கால்களுக்கு அடியில் இரண்டு தலையணைகளைப் போட்டு, கால்களை அதன் மேல் வைத்து உறங்கினால், ரத்த ஓட்டம் இதயத்தை நோக்கிச் சீராகி வீக்கம் நன்கு வற்றிடஉதவும்.

பகல் வேளைகளில் கால்களுக்கு வலுவூட்டும் சில யோகப் பயிற்சிகளை அதை நன்கு கற்றறிந்த ஆசானிடம் சென்று செய்து வரவும்.

இரவில் சுமார் இருநூற்று ஐம்பது மில்லி கொதித் நீரில் பத்து கிராம் திரிபலையைப் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வடிகட்டி, இளஞ்சூடாக்கி, இரண்டு கண்மத பஸ்மம் கேப்ஸ்யூலுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வயிற்றின் மப்புநிலை, மலத்தேக்கம் போன்றவை மாறி வீக்கம் நன்றாக வடிந்துவிடும். சிறுநீரகமும் நன்றாகச் செயல்படும்.

தயிர், மாமிச வகை உணவுகள், பேக்கரி தின்பண்டங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை. இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவைகள் ஆகாது.

பகல் தூக்கம், குளிர்பானங்கள், ஆறிப்போன பழைய உணவு வகைகள் கூடாது. தயிரின் மேலுள்ள ஆடையை நீக்கி, கால் பங்கு தண்ணீர் சேர்த்து கடைந்தெடுத்த மோர் குடிப்பதற்கு நல்லது..

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com