புதையல் தீவு!
ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸ்னின் இயற்பெயர் சபோவான் மொழியில் 'டுசிட்லா' என்பதாகும். அதன் பொருள் 'கதை சொல்பவர்'. இப்படி அழைப்பதையே அவர் விரும்பினார். ஏனென்றால், வாழ்நாள் முழுவதும் கதை சொல்லியே வாழ்ந்தார் அவர். 'புதையல் தீவு' எனும் ட்ரஷர் ஜலண்ட் (1883) எழுதி, புகழின் உச்சியை அடைந்தவர்.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகரில் 1850-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் பிறந்தார் ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸன். இவரது தந்தை கட்டடக் கலை பொறியாளர். தனது ஒரே மகன் லூயி, கட்டடக் கலைப் பொறியாளராவதையே விரும்பினார்.
ஆனால் லூயியோ ஆரோக்கியமான குழந்தை அல்ல; அவனைப் பராமரிக்கும் நர்சான மம்மி என்பவர், அவனைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துகொண்டார். குழந்தை லூயிக்குப் பாடல்களைப் பாடி, கதைகளைக் கூறி மகிழ்விப்பார்.
லூயி சிறுவனாக இருக்கும்போதே எழுதப் படிக்கத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று உறுதி பூண்டார். சிறுவயதிலேயே கதை, கவிதை, கட்டுரைகளை எழுதுவதில் ஊக்கம் கொண்டார்.
உடல்நலக் கோளாறால் அவர் தொடர்ந்து பள்ளிக்குச் செல்வதற்குத் தடையாக இருந்தது. வீட்டில் இருந்தபடியே டியூசன் தரப்பட்டது. தனது பதினாறாவது வயதில், எடின்பரோ சர்வகலாசாலையில் நுழைந்தார். அதே ஆண்டு அவருடைய எழுத்தும் அச்சேறியது. 'தி பெண்ட்லாண்ட் ரைசிங்' என்னும் கவிதைத் தொகுப்பை அவரது தந்தை தனது சொந்த செலவிலேயே வெளியிட்டார்.
சர்வகலா சாலையில் லூயி என்ஜினீயரிங் படிப்பை எடுத்துகொண்டார். ஆனால், வகுப்புகளுக்கெல்லாம் அவர் போகவே இல்லை. இலக்கிய விவாதங்களிலும், நாடகக் குழுக்களிலுமே அவர் ஆர்வம் கொண்டார். வெல்வெட்டினாலான கோட்டும், நீண்ட தலைமுடியுடனிருந்த தன் உறவினர் ஸ்திர புத்தியில்லாத 'பாப்' என்ற ஓவியனுடன் எடின்பரோவில் சுற்றித் திரிந்தார்.
கவிதைகள் பல எழுதி, எடின்பரோ சர்வகலாசாலைப் பத்திரிகைக்கு அளித்தார். பிறகு சட்டம் படிக்கலானார். 1875-இல் அவருக்கு 'பாரில்' அனுமதியும் கிடைத்தது.
ஆனால், அவர் வழக்குரைஞராகத் தொழில் நடத்தவில்லை. இடைவிடாமல் பல பத்திரிகைகளுக்கு கதைகளையும் கட்டுரைகளையும் எழுதினார். அடிக்கடி நோயுற்றதால், உடல்நலனுக்காக அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது.
இந்த நிலையில், பிரான்சில் ஃபானிஆஸ்போர்ன் என்ற அமெரிக்கப் பெண்ணைச் சந்தித்தார். இவரைவிட வயதில் பெரியவள் அவள். திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தது அவளுக்கு. அவளைத் தொடர்ந்து அமெரிக்கா சென்றார். 1879-இல் அவள் விவகாரத்து செய்துகொண்டதும், 1880-இல் அவளை மணந்துகொண்டார். அந்தச் சமயத்தில் காசநோயால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார் ராபர் லூயி ஸ்டீவன்ஸன்.
சிறுவர் பத்திரிகையான 'யங் ஃபோல்க்ஸ்'-இல் ஆரம்பத்தில் வெளிவந்தது 'புதையல் தீவு' எனும் ட்ரஷர் ஐலண்ட் (1883). லூயியைப் பிரபலப்படுத்திய முதல் நாவல் இது. அவரை இலக்கிய விமர்சகர்களும் பொது மக்களும் புகழின் உச்சிக்கு உயர்த்தினர்.
அடுத்ததாக இவர் எழுதிய 'தி ஸ்ட்ரேஞ்ச் கேஸ் ஆஃப் டாக்டர் ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட்' என்ற நாவலும் 'கிட் நாப்டு' என்ற நாவலும்தான் பெரும் புகழைத் தந்தது. ஸ்டீவன்ஸன் 1894-ஆம் ஆண்டு டிசம்பர் 3-இல் காலமானார்.
'புதையல் தீவு' நாவலைப் பற்றி..:
படிக்கப் படிக்க இனிமையாக நாவலாக, 'புதையல் தீவு' அமைந்திருந்தது. கதையைச் சுருக்கமாகக் காண்போம்.
ஒரு கோடையில் ஸ்காட்லாந்தின் மலைப் பகுதியில் ராபர்ட் லூயி ஸ்டீவன்ஸனும் அவரது மாற்றான் மகனும் மழையினால் தங்கள் காட்டேஜில் தங்கும்படியாயிற்று. அப்போது, அச்சிறுவனை மகிழ்விக்க, ஒரு விசித்திரமான தீவை வரைந்தார். மலைகள், துறைமுகங்கள், நீரோடைகள் என எல்லாவற்றையும் அமைத்து ஒரு வடிவத்தை உருவாக்கினார். அப்போது தோன்றியதுதான் புகழ் பெற்ற 'ட்ரஷர் ஐலண்ட்' என்ற புதையல் தீவு.
அது உலகின் மிகப் பெரிய சாகசக் கதைகளில் ஒன்றாகியது. ஸ்டீவன்ஸ் தனது நண்பருக்கு எழுதுகையில், 'இந்த நாவல் கப்பல் கொள்ளைக்காரர்களையும் அவர்களுடைய புதையல்களையும் கடல் கலகத்தையும் கைவிடப்பட்ட கப்பலையும் கப்பல் சமையல்காரனான ஒற்றைக் காலனையும் 'யோ-ஹோ ஹோ! ஒரு பாட்டில் ரம்' என்ற பல்லவியோடு கூடிய கடல் பாடலையும் கொண்டது என்றால் நீ வியந்துபோவாய்' என்றார்.
அவருடைய நண்பர்கள் ஸ்டீவன்ஸன் பலஆண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதை அறிவார்களானாலும், அவருடைய புகழ் பெற்ற நவீனம் 'ட்ரஷர்ஐலண்ட்' (புதையல் தீவு) என்று அறிந்தபோது, வியந்து போயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.