

திருவிதாங்கூர் - கொச்சி (திரு - கொச்சி) தமிழர்கள் தமிழகத்தோடு இணைய விரும்பினார்கள். திரு - கொச்சி காங்கிரஸ் தலைவர் நேசமணி, தமிழ்நாடு காங்கிரஸ் உடன் திரு-கொச்சி காங்கிரசை இணைக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்கவில்லை. தெற்கெல்லையில் கிளர்ச்சி வலுத்தது. தமிழரசுக் கழகத் தலைவர் ம.பொ.சி. தலைமையில் தொண்டர்கள் திரண்டு போராட்டம் பல நடத்தினார்கள். மறியல் செய்தார்கள். பட்டம் தாணுப்பிள்ளை ஆட்சியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பதினொரு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நெடிய போராட்டத்தின் பின் நடுவணரசு (நேரு) தலையிட்டு, ஒரு நடுவர் ஆயம் (பசல் அலி கமிஷன்) அமைக்கப்பட்டது.
அதன் விளைவாக கேரள மாநிலத்திலிருந்து கல்குளம், விளவங்கோடு, அகத்தீசுவரம், தோவாளை எனும் நான்கு வட்டங்கள் பிரிக்கப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டமாகப் பெற்றுத் தமிழகத்தோடு இணைக்கப்பட்டன. தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரத்திலேயே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர் தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீட்பதற்காக அனைத்துக் கட்சிப் போராட்டம் (காங்கிரஸ் தவிர) நடைபெற்றது. கட்சிகளிடையே ஒற்றுமையில்லாமல் போராட்டம் வெற்றி பெறவில்லை. அன்று மட்டும் வலுவாகப் போராடி வென்றிருந்தால் முல்லைப் பெரியாற்றில் அணையை உயர்த்த நாம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டியதில்லை; தொங்கிக் கொண்டிருக்கவும் வேண்டாம்.
தெற்கெல்லை, வடக்கெல்லை போராட்ட வரலாறு மிகப் பெரியது. யாரும் வாழும் தலைமுறையினர்க்கு இது பற்றிச் சொல்வாரில்லை. 'ஆந்திரரிடம் திருப்பதியைக் கொடுத்துவிட்டு சென்னையை நாம் பெற்றுக்கொண்டோம் என்றும், கேரளரிடம் தேவிகுளம், பீர் மேட்டைக் கொடுத்துக் கன்னியாகுமரியைப் பெற்றோம்' என்றும் இன்று முழுமையான வரலாறு அறியாதவர்கள் தவறான தகவல் தருகிறார்கள். இது தகவு அல் பிழை.
மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது 1956 நவம்பரிலேயே, நாம், நம் தலைநகராகச் சென்னையை சிலம்புச் செல்வர் ம.பொ.சி. உழைப்பால், தலைவர் இராஜாஜி ஒத்துழைப்பால் தக்க வைத்துக் கொண்டோம். வடவேங்கடம் (திருப்பதி) வரை கேட்டுப் போராடிய வரலாறு தனி. அப்போராட்டத்தின் விளைவாக மாலவன்குன்றம் (திருப்பதி) கிட்டாது போயினும், திருவாலங்காடு உள்ளிட்ட திருத்தணி தாலுகா முழுவதும் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.
தமிழ்நாட்டின் தலைநகராகச் சென்னை, காப்பாற்றப்பட்டதும் தெற்கில் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைக்கப்பட்டதும், வடக்கில் திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழ்நாட்டுடன் சேர்க்கப்பட்டதும் ஆன போராட்ட வரலாறுதனை, 'எனது போராட்டம்' எனும் ம.பொ.சி. நூலில் விரிவாகப் படித்தறியலாம்.
பார்த்தல் - நோக்குதல் - கவனித்தல்
பொருள் ஒன்று போலத் தோன்றினும், நுட்பமான வேறுபாடுகளை உடையன இச்சொற்கள். போகிறபோக்கில் நம் கண்ணால் பார்ப்பன எல்லாம் நம் நினைவில் நிற்பதில்லை. பார்த்தல் என்பது மேம்போக்கான ஒன்று. உங்களை எங்கோ பார்த்த மாதிரி தெரியுது, ஆனால் நினைவுக்கு எட்டவில்லை என்று சொல்லுவதைக் கேட்டிருக்கிறோம்.
நோக்குதல் அப்படியன்று. ஒரு நோக்கத்தோடு ஆழமாகப் பார்த்தலே நோக்குதல் ஆகும். சரியான - உருப்படியான கொள்கையில்லாதவரை, 'ஒரு நோக்கமும் இல்லையா?' என்று வினவும்போதும் இதன் ஆழம் வெளிப்படுகிறது. அருள்நோக்கு, காதல் நோக்கு. வணிக நோக்கு என்பனவற்றின் பொருள் நுட்பம் காண்க.
"கண்ணொடு கண்ணினை நோக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல"- என்றார் திருவள்ளுவர்.
'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' என்றார் கம்பநாட்டாழ்வார். கவனித்தல் என்பது பார்த்தல், நோக்குதல் இரண்டினும் மேம்பட்ட ஒன்று. மாணாக்கர் பாடங்களாகக் கற்கும்போது ஆசிரியர் சொல்லுபவற்றை - எழுதுபவற்றைக் கூர்ந்து கவனித்தல் வேண்டும் (எதிலும் கவனத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொல்வதில்லையா?) ஒன்றில் கவனம் தவறினால் விளைவு பெரும் தீங்காகும். ஓட்டுநர் பேருந்தைக் கவனமாக ஓட்டவில்லையானால், பயணிகள் கதி என்னாவது?
(தமிழ் வளரும்)
இதையும் படிக்க: நடையும் திரிபும் - பிழையற்ற தமிழ் அறிவோம்! – 41
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.