கண்டது
(வேலூர் மாவட்டம், அமிர்தி வனவிலங்கு உயிரியல் பூங்காவில் உள்ள ஒரு மரத்தின் பெயர்)
'ஆயா மரம்'
(ஆரணி- வந்தவாசி சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'எறும்பூர்'
-விக்னேஷ்.கு, வேலூர்.
(திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
'பட்டம்'
-வீர.செல்வம், பந்தநல்லூர்.
(கோவை தடாகம் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
'தாய்மடி உணவு'
-சங்கரி முத்தரசு, கோவை-25.
கேட்டது
(சென்னை மெரீனா கடற்கரையில் இரு நண்பர்கள்)
'என்னடா.. தினமும் பீச்சுக்கு வர்றே..?'
'வீட்டுல இருந்தா வீட்டுவேலை பார்க்கச் சொல்லி என் பெண்டாட்டி ரொம்ப தொல்லை பண்றாடா?'
-ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
(திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருவர் பேசியது)
'சார் இந்த சீட்டில் நான் டவல் போட்டிருக்கேன்.. இது என் இடம்..'
'அப்போ நான் பஸ் மேலே என் வேட்டியை போடுறேன்.. அப்போ இந்த பஸ் எனக்கு
சொந்தமா?'
-ராஜேஸ்வரி, கல்லிடைக்குறிச்சி.
(கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் தம்பதி பேசியது)
'ரொம்ப அலுப்பா இருக்குன்னு சொன்னியே.. பார்சல் சாப்பாடு வாங்கிட்டு போயிடலாமா?'
'வேண்டாம். அதுல இருக்கிற ரப்பர் முடிச்சை அவிழ்க்கறதுக்குள்ளே பசி பறந்து போயிடும்.. ரசம் வச்சாவது சோறு பொங்கிடறேன்..'
-பி.ஜெகநாதன், கோவில்பட்டி.
யோசிக்கிறாங்கப்பா!
கிளி வளர்த்தேன் பறந்தது.
அணில் வளர்த்தேன் ஓடிவிட்டது.
மரம் வளர்த்தேன், அவை இரண்டும் வந்துவிட்டன.
-வ.மீனாட்சிசுந்தரம், சிங்கம்புணரி.
மைக்ரோ கதை
'என்ன கமலா.. உன்னை உன் மாமியார் ரொம்ப கொடுமைப்படுத்துறாங்களாமே.. கல்லூரியில் படிக்கும்போது
அடக்குமுறைக்கு எதிராகப் பொங்குவியே.. இப்போது என்ன ஆயிற்று' என்று தோழி ரஞ்சனி கேட்டாள்.
இதற்கு கமலா, 'வெளியில் இருந்து பார்க்கிறவங்க என்ன நினைக்கிறாங்களோ.. ஆனா அவர் எனக்கு மாமியார் இல்லை. என் அம்மா இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் என் தாய். பிரசவத்தின்போது, தாய் ஸ்தானத்தில் அவர்தான் பார்த்துகொண்டார்.
எனக்கு விஷ காய்ச்சல் வந்தபோது, ஆஸ்பத்திரிக்கும், கோயிலுக்கும், வீட்டுக்கும் நடையாய் நடந்தார். ஆறு நாள் வேலை பார்க்கும் எனது கணவர் ஞாயிற்றுக்கிழமையில் என்னோடு தனிமையில் இருப்பதற்காக, என் மகனை சினிமாவுக்கு அழைத்து சென்றுவிடுவார். இப்படிப்பட்டவர் என்னை கண்டிக்கவும் செய்வார்தானே. அதை கொடுமை என்று எப்படி சொல்வது? தாய் கண்டிக்க மாட்டாரா?' என்று ஒரே மூச்சில் முடித்தாள்.
இதைக் கேட்ட ரஞ்சனியின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது.
-ச.ஸ்ரீதரவித்யாசங்கர், சென்னை-92.
எஸ்.எம்.எஸ்.
போதிப்பில் புரியாதது.
பாதிப்பில் புரியும்.
-சோ.மாணிக்கம், மயிலாடுதுறை
அப்படீங்களா!
தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆஃப்பில் புகைப்படங்கள், விடியோ, ஆடியோ என அனைத்து விதமான தகவல்களைப் பகிரலாம். இதில் எழுத்துவடிவிலான தகவல் பரிமாற்றத்ûதான் அதிகபடியானோர் பயன்படுத்துகின்றனர். இதில், புதிய சேவையாக , 'மெசேஜ் டிராப்ட்' அறிமுகமாகியுள்ளது.
தகவல் பதிவு செய்து கொண்டிருக்கும்போதே தொலைபேசி அழைப்போ அல்லது வேறு சில பணியால் அப்படியே விட்டுவிட்டால், பின்னர் மீண்டும் வாட்ஸ் ஆஃப் வரும்போது யாருக்கு பதிலளித்து கொண்டிருந்தோம் என்பதை மறந்துவிடுவோம். இதனால் பலருக்கு பதில் தகவல் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்படும்நிலை இருந்தது.
இதைப்போக்க, வாட்ஸ் ஆஃப் சாட்டில் தகவல் பதிவு செய்துகொண்டிருக்கும் போது தடைப்பட்டால், அந்த சாட் தகவல் வரைவு தகவலாக (டிராப்ட்) சாட்களில் முதலிடத்தில் இருக்கும். நாம் மீண்டும் வாட்ஸ்ஆப்பிற்குள் நுழைந்தால் வரைவு தகவல் நினைவுக்கு வந்துவிடும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் எந்தவித தொய்வும் ஏற்படாது.
இந்தச் சேவையை அறிமுகம் செய்து வைத்த மெட்டா நிறுவனத்தின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜுக்கர்பர்க், 'இந்தச் சேவை அனைவருக்கும் தேவை' என்று குறிப்பிட்டுள்ளார்.
-அ.சர்ப்ராஸ்