
இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களின் விருப்பமான உடைகளில் ஒன்று ஜீன்ஸ். இன்று விதவிதமான வகைகளில் இளையதலை முறையினரால் அணியப்படும் ஜீன்ஸ் ஒரு காலத்தில் கடின உழைப்பின் சின்னமாக இருந்தது.
1860-களின் பிற்பகுதியில், லெவி ஸ்ட்ராஸ் என்பவர்தான் முதல் ஜீன்ஸ் பேண்ட்டை உருவாக்கினார். 1873-இல் லெவி ஸ்ட்ராஸ், ஜேக்கப் டேவிஸ் ஆகியோர் இணைந்து தற்போதைய நீல நிற ஜீன்ஸை வடிவமைத்து, காப்புரிமையைப் பெற்றனர். அதில், காப்பர் ரிவெட்டுகள், பலப்படுத்தப்பட்ட பாக்கெட்டுகள் இருந்தன.
ஜீன்ஸ் தயாரிக்கப் பயன்படும் பருத்தித் துணியின் பெயர்தான் டெனிம். இது பிரெஞ்சு நகரான நிம்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தப் பெயர் பெறுகிறது. டெனிம் முன்பு 'செர்ஜ் டி நிம்ஸ்' என்று அழைக்கப்பட்டது.
பவேரியாவிலிருந்து வட அமெரிக்காவுக்கு லெவி ஸ்ட்ராஸ் குடிபெயர்ந்து சுரங்கத் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்தார். அப்போது சுரங்கத் தொழிலாளி ஒருவர் ஸ்ட்ராஸிடம், ' 'தங்கச் சுரங்கத்தின் கடுமையை எதிர்க்கக் கூடிய உறுதியான வேலைக் காலுறைகளை உருவாக்க முடியுமா?' என்று கேட்டார். இதன் பின்னணிதான் இன்றைய ஜீன்ஸ்.
ஸ்ட்ராஸ் ஒரு தையல்காரருடன் இணைந்து, கூடாரம் கட்டும் கனரக கேன்வாஸ் ஒர்க் பேண்ட்டுகளை உருவாக்கினார். 1860-களின் பிற்பகுதியில், அதே துணியில் கால்சட்டைகளை உருவாக்கத் தொடங்கினார்.
'நீல ஜீன்ஸ்' என்பது இண்டிகோ - சாயம் பூசப்பட்ட ஜீன்ஸை குறிக்கிறது. அசல் 501 வடிவமைப்பு ஒரு ஜெனோயிஸ் மாலுமியிடம் இருந்து ஈர்க்கப்பட்டது. அவர் கடினமான வேலைக்குப் பொருந்தும் வகையில் விரிந்த கால்கள் கொண்ட பேக்கி கால்சட்டையை அணிந்திருந்தார்.
ஸ்ட்ராஸின் ஆரம்ப காலத்தில் உருவாக்கிய கால்சட்டைகள் தடிமனான கேன்வாஸால் செய்யப்பட்டன. ஆனால், செர்ஜ் டி நிம்ஸ் எனப்படும் உறுதியான துணிக்கு மேம்படுத்தப்பட்ட பிறகு, அவை 'டெனிம்' என்று அழைக்கப்பட்டன. ஸ்ட்ராஸ் கண்டுபிடித்தபோது டெனிம் ஏற்கெனவே பிரான்ஸில் பயன்பாட்டில் இருந்தது.
இந்தப் புதிய ஜீன்ஸ் அனைவராலும் ஏற்கப்பட்டபோதிலும், 1870-களில் சுரங்கம் போன்ற உடல் உழைப்பின் கடுமையைத் தாங்க முடியாமல் ஜீன்ஸின் பலவீனமான பகுதிகள் பாக்கெட்டுகளின் மூலைகளாகவும், பட்டன் பிளாங்கெட்டின் அடிப்பகுதியாகவும் இருந்தன.
சுரங்கத் தொழிலாளர்களுக்கு அதிக அளவு தங்கம் வைக்கக் கூடிய பெரிய பாக்கெட்டுகள் கொண்ட பேன்ட்டுகள் தேவைப்பட்டதால் பாக்கெட்டுகளின் பலவீனமான புள்ளிகளை வலுப்படுத்த காப்பர் ரிவெட்டுகளைப் பயன்
படுத்தத் தொடங்கினார் லெவி. அதன்பின்னர், அடுத்தடுத்த ஆண்டுகளில் ஜீன்ஸ் பல்வேறு மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு தற்போதைய நவீன ஜீன்ஸ் உருவானது.
1890 முதல் 1950 வரை, லெவி ஸ்ட்ராஸ் தயாரிப்பில் தனிக்காட்டு ராஜாவாக விளங்கி, ஆரம்ப கால ஜீன்ஸ் சந்தையில் அவர் மற்ற போட்டியாளர்களைவிட அதிக லாபத்தைப் பெற்றார். சுரங்கத் தொழிலாளர்கள், மரம் வெட்டுபவர்கள், கௌபாய்ஸ், பண்ணையாளர்கள், விவசாயிகள், தொழில்துறை ஊழியர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஜீன்ஸ் அணிவதற்கு அங்கீகாரம் பெற்றவர்கள். அவை நீடித்து உழைக்கக் கூடியதாக இருந்தது. வசதியானதாகவும், பராமரிப்புச் செலவு குறைவானதாகவும் இருந்தது.
தற்போது, ஜீன்ஸ் பாக்கெட்டுகளில் உள்ள பட்டன்கள், சிறிய பாக்கெட்டுகள், ஜீன்ஸில் ஃபேஷன் ஆகியவை ஒரு ஃபேஷனாக மாறியுள்ளன. ஜீன்ஸ் என்கிற ஆடை புழக்கத்தில் வருவதற்கும் மக்களின் தேவை முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக, உழைக்கும் மக்களுக்கான தேவை ஜீன்ஸ் உடைக்கு அதிகம் இருந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.