
உண்மை என்ன?
நடிகர் சிவகார்த்திகேயனின் 25-ஆவது படம் குறித்த செய்திகள் குறித்து அண்மைக்காலமாகப் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. சுதா கொங்கரா இயக்கும் அந்தப் படத்தில் ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர் என்றும் டெஸ்ட் ஷூட் நடைபெறுகிறது என்றெல்லாம் தகவல்கள் உலா வருகின்றன.
'அமரன்' பட வெற்றியையடுத்து, சிவா நடிப்பில் அடுத்து வெளிவரும் படமாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் இருக்கிறது. இது சிவாவின்
23-ஆவது படமாகும். இதில் கன்னடத்தின் 'சப்த சாகரடாச்சே எல்லோ', தமிழில் விஜய்சேதுபதியின் 'ஏற்' ஆகிய படங்களின் நாயகி ருக்மிணி வசந்த் ஹீரோயின். பிஜூ மேனன், டான்ஸிங் ரோஸ் சபீர், விக்ராந்த், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 'அமரன்' படத்துக்காக, முறுக்கேறிய உடம்பை ஏற்றி வந்த சிவா, அதன் தொடர்ச்சியாக முருகதாஸின் படத்திலும் ஆக்ஷனுக்கான தோற்றத்தில் உள்ளார்.
மலையாளத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சுதீப் இளமன், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
சென்னை, புதுச்சேரி படப்பிடிப்பைத் தொடர்ந்து இப்போது சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இப்படியான ஒரு சூழலில் தான் சிவாவின் 25-ஆவது படம் குறித்த செய்திகள் தாறுமாறான அப்டேட்களாக தெறிக்கின்றன.
இதுகுறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்தவை:
'ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவா நடித்து வரும் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைகிறது. புத்தாண்டில் பட டைட்டில் வெளியாகிறது. இந்தப் படம் ஏப்ரலுக்குத் திட்டமிட்டு வருகின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டே, 24-ஆவது படத்துக்குச் செல்கிறார்.
'டான்' சிபிசக்கரவர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் முடிவடையும் கட்டத்தில் உள்ளன.
இதனையடுத்து, நடிகர்கள் தேர்வு நடைபெற உள்ளது. இந்தப் படம் அநேகமாக ஜனவரிக்குப் பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்தே, சுதா கொங்கரா இயக்கும் 25-ஆவது படம் தொடங்கும். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் நடிக்கின்றனர் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் உறுதியான ஒரு தகவல். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சிபிசக்கரவர்த்தி படப்பிடிப்பு முடிந்த பிறகே, சுதா கொங்கராவின் பட அறிவிப்பு வெளிவரும்' என்கின்றனர்.
ஜெயம் ரவி தரப்பில் விசாரித்ததில் இன்னமும் உறுதி செய்யவில்லை என்கின்றனர். ரவி இப்போது ஹீரோவாக அரை டஜன் படங்கள் கைவசம் வைத்துள்ளார். ஹிந்திப் பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. எனவே அடுத்தாண்டே இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிய வரும் என்கின்றனர்.
'வரும் பிப்ரவரியில் சிவாவின் பிறந்த நாளன்று 24-ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோடு, சுதா கொங்கராவின் படம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம். அதுவரை வெளியாகும் தகவல்கள் உறுதியானதல்ல' என்கிறார்கள்.
நான் சென்னைக்காரன்தான்!
'புஷ்பா 2' திரைப்படம் டிசம்பர் 5-இல் திரையரங்குகளில் வெளியாகிறது. புரோமோஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிற நிலையில் படக்குழு சென்னைக்கு வருகை தந்திருக்கின்றனர். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, இயக்குநர் நெல்சன் உள்பட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அல்லு அர்ஜுன், 'நான் பிறந்த மண்ணுக்கு அன்போடு வணக்கம். என் சென்னை மக்களுக்கு வணக்கம். மறக்க முடியாத நாள் இது. எத்தனையோ வருஷம் இதுக்காக எதிர்பார்த்திருக்கிறேன். புஷ்பா படத்துக்குப் பல இடங்களுக்குப் போனேன். ஆனால் சென்னைக்கு வரும்போது அதோட பீல் வேற.
உங்கள் வாழ்க்கையில் முதல் 20 வருடம் எப்படி இருக்கிறீர்களோ, அப்படிதான் வாழ்க்கை முழுவதும் இருப்பீங்கனு உளவியல் ரீதியாக சொல்வாங்க? எங்க போனாலும் நான் சென்னை தி .நகர்காரன்தான். என் ஊர்ல என்னுடைய படத்துக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு வேணும்னு விரும்பினேன். இன்னைக்கு அது நடந்திருக்கு.
நான் தமிழ்லதான் இன்னைக்கு பேசுவேன். இந்த மண்ணுக்கு நான் கொடுக்கிற மரியாதை அது. நான் நான்கு வருஷமாக ராஷ்மிகாவை பார்க்கிறேன். என்னுடைய பெஸ்ட் கொடுக்க செய்ததற்கு நன்றி ராஷ்மிகா. ஸ்ரீலீலா ஒரு பாடலுக்கு வர்றேன்னு சொன்னதும் நான் கொஞ்சம் தயாராகினேன். நான் ஆரம்பத்துல ஒரு படம் பண்ணீட்டு ஒரு வருஷம் வீட்டுல இருந்தேன். அப்போ சுகுமார் எனக்கு ஆர்யா படம் கொடுத்தார்.
அதன் பிறகு தொடர்ந்து படங்கள் பண்ணிட்டு இருக்கேன். என்னுடைய வாழ்க்கையை மாற்றியமைத்த நபர்களில் முக்கியமானவராக நான் அவரைதான் குறிப்பிடுவேன். இப்போகூட படம் தரமாக வரணும்னு ரொம்ப வேலை பார்த்துட்டு இருக்கார். அதுனாலதான் இங்க வரல. சின்ன வயசுல ரஜினி சார் படத்துக்கு அடிச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கிப் பார்ப்பேன்' என்றார்.
தேவையற்ற செலவு...
அமேசான் பிரைம் ஓ.டி.டி. தளத்தில் 'சிட்டாடெல்: ஹனி பனி' வெப் சீரீஸ் வெளியாகி இருக்கிறது. ஹாலிவுட்டில் ஹிட்டடித்த இந்த வெப் சீரிஸில் நடிகர் வருண் தவான், நடிகை சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'தி ஃபேமிலி மேன்' புகழ் ராஜ், டிகே இயக்கத்தில் ரூúஸா பிரதர்ஸ் தயாரிப்பில் வெளியாகி இருக்கும் இந்த வெப் சீரிஸில் ரகசிய ஏஜென்டாகவும், அம்மாவாகவும் சமந்தா நடித்திருக்கிறார். இதன் புரோமோஷன், வெற்றி நிகழ்ச்சியாக அமேசான் பிரைம் நடத்திய நிகழ்ச்சியில் வருண் தவானும், சமந்தாவும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் முன்னோட்டம் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது.
அதில், வருண் தவான் சமந்தாவிடம், 'உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த பெரும் தொகை எது?' என்று கேட்டார்.
அதற்கு சமந்தாவோ சற்றும் யோசிக்காமல், 'அது என்னுடைய எக்ஸ் -க்கு நான் செய்த விலைமதிப்பற்ற கிஃப்ட்' எனச் சிரித்தவாறே நகைச்சுவையாகப் பதிலளித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.